உடலாகிய ஆலயம்

 ஆதவன் 🌞 842🌻 மே 19, 2023  வெள்ளிக்கிழமை            



"தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?" ( 2 நாளாகமம் 6 : 18 )

தேவனுக்கென்று ஆலயம் எழுப்பிய சாலமோன் அதன் பிரதிஷ்டையின்போது ஜெபித்த ஜெபத்தின் ஒரு பகுதிதான் இன்றைய தியான வசனம். இந்த வசனத்தில் சாலமோன்,  தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? என்று கேள்வி எழுப்புகின்றார்.  இந்தக் கேள்வியின் உண்மையான பொருள், தேவன்  அப்படி மனிதர்களோடு வாசம்பண்ண மாட்டார் என்பதே. ஆனால்,  இந்தக் கேள்விக்கு மாறாகக்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகினில் மனிதனாக வந்து மனிதர்களோடு வாழ்ந்தார். வானங்களும், வானாதி வானங்களும்  தாங்க முடியாத தேவன் சாதாரண மனிதனைப்போல ஆனார்.  

அப்போஸ்தலரான யோவான் இதனைக்குறித்து, "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 ) என்று எழுதுகின்றார். 

மேலும் ஆச்சரியமான காரியம் என்னவென்றால்,  பூமியில் தேவன் வாசம்பண்ணுவாரோ என்றும் வானங்களும் வானாதி வானங்களும் தாங்கக்கொள்ளாதே என்றும் கூறப்பட்ட வல்லவரான தேவன் மனிதர்களது சின்ன இதயத்துக்குள்ளே வந்து தங்குகின்றார்.  இது ஆச்சரியமல்லவா?

இப்படி தேவன் வந்து தங்கும் இடமாக மனிதர்களது இருதயம் இருப்பதால் தான் நாமே தேவனது ஆலயமாக இருக்கின்றோம்.  

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"
( 1 கொரிந்தியர் 3 : 16 )

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல வென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 )

பூமியிலே மனிதர்களோடு தங்குவாரோ என சந்தேகத்தோடு சாலமோன் விண்ணப்பம் பண்ணினார். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதர்களோடு மட்டுமல்ல, மனிதர்களுக்குளேயே வந்து தங்கிவிட்டார். அன்பானவர்களே, அப்படியானால் நாம் எவ்வளவு பேறுபெற்றோர் என்று எண்ணிப்பாருங்கள். இத்தகைய தேவன் வந்து தங்கும் நமது உடலாகிய ஆலயத்தை நாம் எவ்வளவு தூய்மையாக பாதுகாக்கவேண்டும்!!!

எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள், "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) எனக் கூறுகின்றார். 

நமது உடலாகிய ஆலயத்தைக் கெடுக்காமல்  தேவன் விரும்பும்வண்ணம் பரிசுத்தமாகக்  காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்