Wednesday, May 24, 2023

மீகாள் நமக்கு ஒரு எச்சரிக்கை

ஆதவன் 🌞 848🌻 மே 25, 2023  வியாழக்கிழமை  

         

"தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்." ( 2 சாமுவேல் 6 : 14 )


தேவனை ஆராதிப்பதில் ஒவ்வொருவரும் ஒரு முறையினைப் பின்பற்றுகின்றனர். ஆராதனையின் முறைமைகளைத் தேவன் பார்ப்பதில்லை. மாறாக ஆராதிப்பவர்களின் இதயத்தையே பார்க்கின்றார். இன்று அமைதியாக தேவனை ஆராதிக்கும் சபைகளும் உண்டு ஆர்ப்பரித்து உற்சாகமாக ஆராதிக்கும் சபைகளும் உண்டு. ஆர்ப்பரித்து ஆராதிப்பவர்கள் அமைதியாக ஆராதிப்பவர்களை செத்த சபையினர் என்றும் , அமைதியாக ஆராதிப்பவர்கள் ஆர்ப்பரித்து ஆராதிப்பவர்களை கூத்தாடி சபைகள் என்றும் விமர்சிக்கின்றனர்.

இப்படி ஒருவர் செய்யும் ஆராதனையைக் குறைகூற யாருக்கும் அதிகாரம் இல்லை. தேவனே இருதயங்களை நோக்கிப்பார்க்கின்றவர். அவருக்கே யார் தன்னை உண்மையாக ஆராதிக்கிறார்கள் என்று தெரியும். தேவன் ஆராதனையினை இப்படித்தான் செய்யவேண்டுமென்று எந்தக் கட்டளையும் தரவில்லை. இருதய சுத்தத்திற்கே தேவன் முன்னுரிமை கொடுக்கின்றார்.

தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவானபின்பு அதுவரை கிபியாவிலிருந்த கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.   "தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்.." ( 2 சாமுவேல் 6 : 3 ) அப்போது தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

ஒரு பெரிய ராஜா சணல் ஆடையினை உடுத்திக்கொண்டு தெருவில் நடனமாடியது சவுலின் குமாரத்தியாகிய தாவீதின் மனைவி மீகாளுக்கு  கேவலமான காரியமாகத் தெரிந்தது. "கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்." ( 2 சாமுவேல் 6 : 16 )

அன்பானவர்களே, இப்படி இருதயத்தில் தாவீதை அவமதித்ததற்கு தேவன் கொடுத்தத் தண்டனை மிகக் கொடியது. ஆம், "அதனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது." ( 2 சாமுவேல் 6 : 23 ) என்று கூறப்பட்டுள்ளது. 

"ஆதவன்" தியானங்களில் சில வேளைகளில் பிறரை விமரிசிப்பதுபோல உங்களுக்குத் தெரியலாம், ஆனால் அவை வேத சத்தியங்களை அவர்கள் மீறி அதற்கு முரணாக பிரசங்கிப்பதை தவறு என்று காட்டவேதவிர அவர்களது ஆராதனை முறைகளை விமரிசிப்பதற்கு அல்ல. வேத சத்தியங்களை புரட்டிப் பேசுவதை நாம் விமரிசிக்கலாம்.  காரணம், தவறான போதனைகள் மனிதர்களை நரகத்தின் மக்களாக்கிவிடும் என்பதால்.

மற்றவர்கள் செய்யும் ஆராதனைகள், பிற சபைகளை,  தனி நபர்களது ஆராதனை முறைமைகளை விமரிசனம் செய்வதை நாம் விட்டுவிடுவது நல்லது. சவுலின் மகள் மீகாள் நமக்கு ஒரு எச்சரிக்கை.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: