ஆதவன் 🌞 851🌻 மே 28, 2023 ஞாயிற்றுக்கிழமை
"கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 )
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தை நாம் பெறும்போது ஆவிக்குரிய வாழ்வின் முதல் படியினை அடைகின்றோம். அந்த நிலையினில் நாம் அன்றாடம் வளர்ச்சியடையவேண்டும். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் நாம் வளரும்போது பழைய நியாயப்பிரமாண கட்டளைகள் நம்மை நடத்தாமல் பரிசுத்தஆவியானவரே நடத்துவார்.
ஆம், நாம் பழைய கட்டளைகள் எனும் எழுத்தின்படியல்ல புதுமையான ஆவியின்படியே தேவனுக்குமுன் நடப்போம். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்." ( ரோமர் 7 : 6 ) என்கின்றார். அதாவது ஆவியின்படி நடக்கும்போது கட்டளைகளுக்கு விடுதலையாகி ஆவியானவரின் வழிநடத்தலுக்கு உட்பட்டவர்களாகின்றோம்.
இப்படி நாம் நடக்கும்போது, அந்த ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நம்மை பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்குகின்றது.
மரணம் என்று இங்குக் குறிப்பிடப்படுவது ஆத்தும மரணத்தையே. ஏனெனில் உலகினில் பிறந்த அனைவருக்குமே சரீர மரணம் பொதுவானது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23 ) என்று குறிப்பிடுகின்றார். ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவின் பிரமாணம் நம்மை ஆத்தும மரணம், பாவம் இவைகளிலிருந்து விடுதலையாக்குகின்றது. மட்டுமல்ல நாம் முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாகின்றோம்.
அன்பானவர்களே நாம் பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெறவேண்டியதன் அவசியம் இதுதான். பாவத்துக்கு அடிமையாகி சாவுக்கேதுவாகவுள்ள நமது சரீரங்களையும் கிறிஸ்துவை உயிர்பித்ததுபோல ஆவியானவர் உயிர்ப்பிப்பார். இதனையே, "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்கின்றார் பவுல் அடிகள்.
இந்த அனுபவத்தைப் பெறும்போதே நாம் அவரது சொந்த பிள்ளைகளாகின்றோம். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு உள்ளாகின்றோம். இப்படி கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நம்மை பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்குக்கின்றது. மட்டுமல்ல, நாம் நம்மை முற்றிலுமாக ஆவியானவரின் வழிநடத்தலுக்கு ஒப்புக்கொடுத்து வாழும்போது நித்திய ஜீவனுக்கும் தகுதியுள்ளவர்களாகின்றோம்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment