ஆதவன் 🌞 849🌻 மே 26, 2023 வெள்ளிக்கிழமை
"மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள்." ( சங்கீதம் 4 : 2 )
கர்த்தருக்கு நாம் செலுத்தவேண்டிய மகிமையைச் செலுத்தாமல் இருப்பது அவரை அவமானப்படுத்துவதாகும். உலகப் பொருட்களுக்கும் தேவனுக்கும் நாம் செலுத்தவேண்டிய முக்கியத்துவம் வெவேறானவை. உலகப் பொருட்களா தேவனா என்று பிரச்னை வரும்போது நாம் தேவனுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்காமலிருப்பது அவரை அவமானப்படுத்துவதாகும்.
உலகப் பொருட்களுக்கு இன்றைய வசனம் இரண்டு பெயர்களைக் கொடுத்துள்ளது. அவை வீணானவை, பொய்யானவை என்பனவாகும். இப்படி வீணானவைகளையும் பொய்யானவைகளையும் விரும்பி எதுவரை என் மகிமையை அவமானப்படுத்துவீர்கள்? என்று இன்றைய வசனம் கேள்வி எழுப்புகின்றது.
இந்த உலகத்தில் மற்றவர்களைத் திருப்திப்படுத்தவேண்டுமென்று சிலவேளைகளில் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தவறிவிடுகின்றோம். இது சுய லாபத்துக்காகவோ பயத்தினாலோ இருக்கலாம்.
மோசே மலையிலிருந்து இறங்கிவர காலதாமதம் ஏற்பட்டபோது இஸ்ரவேல் மக்கள் ஆரோனிடம், " எங்களை எகிப்திலிருந்து அழைத்துகொண்டுவந்த மோசேக்கு என்ன நேர்ந்ததோ என்று அறியோம்...நீர் எங்களுக்காக எங்கள்முன் செல்லும் தேவனை எங்களுக்குத் தாரும்" என்று கேட்டனர். அவர்களுக்குப் பயந்த ஆரோன் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கி அவர்கள்முன் வைத்து, எகிப்திலிருந்து உங்களை வரவழைத்துக் கொண்டுவந்த தேவன் இவரே" என்று கூறினான்.
மட்டுமல்ல, "ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்." ( யாத்திராகமம் 32 : 5, 6 )
இப்படி, "ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான்." ( யாத்திராகமம் 32 : 25 ) என்று வாசிக்கின்றோம். ஆம், கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய ஆராதனையை நாம் பிறருக்குச் செலுத்தும்போது நாமும் அவமானமடைந்து கர்த்தரையும் அவமானப்படுத்துகின்றோம்; நிர்வாணிகளாகின்றோம்.
"நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்." ( ஏசாயா 42 : 8 ) என்கின்றார் பரிசுத்தர். விக்கிரகங்கள் என்பது சிலைகள் மட்டுமல்ல, தேவனைவிட்டு வேறு உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் குறிக்கும். பொருளாசை மிகப்பெரிய விக்கிரக ஆராதனை. "விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. " ( எபேசியர் 5 : 5 ) என்று பவுலடிகள் கூறுகின்றார்.
நமது இரட்சிப்பின் ஆடையினை உரிந்து நம்மை அவமானப்படுத்திட சாத்தான் பொருளாசையினை நமது இருதயத்தில் விதைக்கின்றான். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். இயேசு கிறிஸ்துவோடு பன்னிருவருள் ஒருவனாக இருந்த யூதாஸ் சாத்தான் இருதயத்தில் விதைத்தப் பொருளாசையால் இரட்சிப்பை இழந்து அவமானடைந்து தற்கொலை செய்துகொள்ளவில்லையா?
எனவே அன்பானவர்களே, கர்த்தரது மகிமையை அவமானப்படுத்திடாமல், வீணானதை விரும்பி, பொய்யை நாடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். இதற்காக நமது அன்றாட ஜெபங்களில் மன்றாடவேண்டியது அவசியம்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment