Saturday, May 20, 2023

நீதியின் கிரீடம்

ஆதவன் 🌞 845🌻 மே 22, 2023  திங்கள்கிழமை    

"நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில்  பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 14 )

இன்று நாம் அரசியலில் பல விசித்திரங்களைக்காண  முடியும்.  பதவிக்காக கொள்கைகளையும் தலைவர்களையும் மாற்றும் மனிதர்கள் அதிகம். எனவே சிலர் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்தில் மந்திரிப்பதவி பெற்றுவிடுகின்றனர். அரசியல் தலைவர்களும் எதிர்காலத்தில் குறிப்பிட்ட  ஜாதி மக்களது  ஓட்டுக் கிடைக்கவேண்டும் என்பதற்காக  இத்தகைய கட்சிமாறிகளை ஆதரிக்கின்றனர். மொத்தத்தில், அரசியல் தலைவர்களும் கட்சிமாறிகளும்  மக்களது நன்மையினையல்ல, மாறாகத் தங்களது சுய நலனையே நாடுவதால் இப்படிச் செய்கின்றனர். 

ஆனால் இத்தகைய தகிடுதத்தம் தேவனிடம் எடுபடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொண்டவர்களாக இருப்போமானால் அந்த விசுவாசத்தில் இறுதிவரை நிலைத்து நிற்கவேண்டும். அங்கே  கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்பது தேவனுக்குப் பிரியமில்லாதது. தேவனைப் பொறுத்தவரை ஒரே எஜமானுக்குத்தான் நாம் ஊழியம்செய்ய முடியும். அரசியல்வாதிகளைப்போல சுய லாபம் கருதி மாறிமாறித் தலைவனை மாற்ற முடியாது. 

இயேசு கிறிஸ்துக்  கூறினார்,  "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." ( மத்தேயு 6 : 24 )

ஒரே வழி, ஒரே தலைவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவர்மேல் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். இதற்கு மாறாக, பதவி, பணம், புகழ் இவற்றுக்காக கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் குறைவுபடுவோமானால் அவரோடு நமக்கு எந்தப் பங்கும் இருக்காது. 

இன்றைய வசனம், ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில் என்று கூறுகின்றது. அதாவது இந்தப்பூமியில் நாம் வாழும் இறுதிநாள்வரை என்று பொருள். இறுதி நாள்வரை நாம் கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசத்தில் தளர்வடையாக்கூடாது. இப்படி ஆரம்பத்தில் கொண்ட  விசுவாசத்தைக் இறுதிவரைக் காத்துக்கொள்பவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவ கிரீடத்தைப் பெறுவார்கள்.  

அன்பானவர்களே, அப்போஸ்தலராகிய பவுல் கூறுவதுபோல நாமும் கூறத்தக்க ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்." ( 2 தீமோத்தேயு 4 : 8 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: