ஆதவன் 🌞 847🌻 மே 24, 2023 புதன்கிழமை
".............நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்." ( ஓசியா 4 : 6 )
இன்றைய தியானத்துக்குரிய வசனம் நாம் தேவனுடைய வேதத்தின்மேல் பற்றுக்கொண்டு அதனை நேசித்து நமது வாழ்வை அதற்கு ஏற்றாற்போல மாற்றி வாழவேண்டியதன் அவசியத்தைக் குறிக்கின்றது. தேவன் ஆதிகாலமுதல் பல்வேறு தீர்க்கதரிசிகள், பக்தர்கள் மூலம் தனது வார்த்தைகளை வெளிப்படுத்தி அவற்றை மக்கள் மறந்திடாமல் இருக்க அவர்களைக்கொண்டு பதிவுசெய்தும் வைத்துள்ளார். தோள்சுருள்கள், கற்பலகைகள், சுட்ட மண் பலகைகள், போன்றவற்றில் தேவனுடைய வார்த்தைகள் பதிவுசெய்யப்பட்டு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வேதத்தை இந்த உலகத்திலிருந்து அழிக்க முயன்ற மனிதர்கள் அழிந்தார்களேதவிர வேதம் என்றும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றது. தேவன் அற்புதமாக இப்படித் தனது வார்த்தைகளைப் பாதுகாப்பதன் நோக்கம் தனது மக்கள் அவற்றைப் படித்து உணர்ந்து தனக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே. ஆனால் வேதத்தை உண்மையான ஆர்வத்துடன் படிப்பவர்கள் வெகு சொற்பமே. இதனையே தீர்க்கத்தரிசி ஓசியா முலம் தேவன், "என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்." ( ஓசியா 8 : 12 ) என்று கூறுகின்றார்.
இருளில், அந்தகாரத்தில் வசிக்கும் மக்களுக்கு விளக்கும் வெளிச்சமும் வேதமே. "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி." ( நீதிமொழிகள் 6 : 23 ) என்று வசனம் கூறுகின்றது.
அன்பானவர்களே, இன்றைய வசனம் வேதத்தை மறப்பவர்களின் பிள்ளைகள் தேவனால் மறக்கப்பட்டுவிடுவார்கள் என்று ஒரு எச்சரிக்கையினை விடுக்கின்றது. தேவனால் மறக்கப்படுதல் எவ்வளவு அவலமானது என்று எண்ணிப்பாருங்கள். நாம் ஒருவேளை இன்று இந்த உலகத்தில் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம் ஆனால் நமது பிள்ளைகளது எதிர்காலம் நமது கையில் என்பதை மறந்துவிடக்கூடாது. உலகத்தில் சொத்து சுகங்களை நமது பிள்ளைகளுக்காகச் சேர்த்துவைக்க முயலும் நாம் அவர்களுக்கான தேவ ஆசீர்வாதங்களுக்காகவும் முயலவேண்டியது அவசியம்.
வேதாகமத்தை அந்நிய காரியமாக எண்ணாமல் ஆர்வமுடன் வாசித்து அதன் மகத்துவங்களை உணர்ந்து விசுவாசத்தில் வளரவேண்டியது அவசியம். சொத்து சுகங்கள், அதிக ஆஸ்திகள் சம்பாதிக்க உடல் பலமில்லாதவர்களும், பெரிய படிப்பு பதவிகள் இல்லாதவர்களும் இந்த ஆசீர்வாதத்தை நமது பிள்ளைகளுக்காகச் சேர்த்திட முடியும்.
வேதத்தை நேசிப்போம், வாசிப்போம் வாழ்வாக்குவோம்.
"கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 2, 3 )
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment