'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,259 💚 ஜூலை 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 31 )
வேத அடிப்படையில் பார்ப்போமானால், மீட்பு அனுபவம் பெற்ற விசுவாசிகளின் கூட்டமே சபைகள். ஆனால் இன்று இந்த நிலைமை மாறி, குறிப்பிட்டக் கிறிஸ்தவ போதனைகளைப் போதிக்கும் ஆலயங்களில் கூடும் மக்களையும், குறிப்பிட்ட பாஸ்டர்கள், ஊழியர்களை நாடிச் செல்லும் மக்களையும் சபை என்று கூறிகொண்டிருக்கின்றோம்.
சபை என்பது மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்துபவையாக இருக்கவேண்டியது அவசியம். அப்படி வழிநடத்தும்போது அங்கு என்ன நடக்கும் என்பதனையே இன்றைய தியான வசனம், "சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின." என்று கூறுகின்றது.
அதாவது மெய்யான ஒரு சபைகளுக்குச் செல்லும்போது ஒருவருக்குச் சமாதானம் கிடைக்கும். காரணம், அங்கு போதிக்கப்படும் வார்த்தைகள் தேவ வார்த்தைகளாக இருக்கும். தேவ வார்த்தைகளே ஒருவருக்குச் சமாதானத்தைக் கொண்டு வரும். இரண்டாவது, அந்தத் சபைகள் நம்மை பக்திவிருத்தி அடையச் செய்பவையாகவும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வளரச்செய்பவையாகவும் இருக்கும். மூன்றாவது, ஆவியானவர் அளிக்கும் ஆறுதல் அந்தச் சபை மக்களுக்குக் கிடைக்கும்.
ஆனால், இன்றைய பல சபைகளில் கேளிக்கைக் கூடாரங்களில் பாடலும் நடனமும் முக்கியத்துவம் பெறுவதுபோல இவைகளே முக்கியத்துவம் பெற்று மெய்யான சத்தியம் புறம்தள்ளப்படுவதைக் காண்கின்றோம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளில் விசுவாசிகளுக்கு மெய்யான சமாதானமோ, அவர்கள் பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தில் வளரும் வாய்ப்போ பரிசுத்த ஆவியின் ஆறுதலோ இல்லாமலிருக்கின்றது.
இதனால் விசுவாசிகள் ஒரு சபையைவிட்டு இன்னொரு சபைக்கு ஓடுவதும், ஊழியர்களும் சபைகளும் தங்கள் தவறுகளை உணராமல் ஒருவருக்கொருவர் மாறிமாறிக் குறைகூறி மோதிக்கொள்வதும் நடக்கின்றது. உணவு உட்கொள்ளச் செல்பவர்கள் ஹோட்டலை மாற்றுவதற்குக் காரணம் ஹோட்டல் சாப்பாடு பிடிக்காததே முக்கிய காரணமாய் இருக்கும் என்பதனை இவர்கள் உணர்ந்து கொள்ளும்போதுதான் இந்த நிலைமைக்கு மாறுதல் உண்டாகும்.
இன்று வேதாகம அடிப்படையிலான மெய்யான சபைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளன. ஆனால் ஊழியர்களும் போதகர்களும் அளவுக்கு அதிகமாகப் பெருகிவிட்டனர். எனவே இவர்கள் மக்களைத் தங்களிடம் இழுக்கவேண்டி விதவிதமான நவீன யுக்திகளைக் கையாளுகின்றனர். மக்களும் திரைப்பட நடிகர்களைத் தேர்வுசெய்வதுபோல தங்களுக்கு ஏற்ற நவீன ஊழியர்களைத் தெரிந்துகொள்கின்றனர். கிறிஸ்துவின் விசுவாசி என்று கூறுவதைவிட்டு குறிப்பிட்ட பாஸ்டர்களின் விசுவாசிகளாகிவிட்டனர்.
அன்பானவர்களே, குறிப்பிட்ட ஊழியர்களையும் குறிப்பிட்ட சபைகளையும் பார்க்காமல் கிறிஸ்துவை நோக்கிப்பார்க்க வேண்டும். நமக்குத் தேவ சமாதானம் அளிக்கும் சபைகள், நாம் பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் வளர வழிகாட்டும் சபைகள் இவைகளையே நமக்காகத் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய சபைகளை நமக்கு அடையாளம்காட்ட பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடவேண்டியதுதான் இன்றைய காலத்தின் அவசியம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment