Thursday, July 18, 2024

மேலானவைகளைத் தேடுங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,265      💚 ஜூலை 27, 2024 💚 சனிக்கிழமை 💚

"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1 )

பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்திருக்கும் வாழ்வே இரட்சிப்பு வாழ்வு. கிறிஸ்து மரித்து உயிர்த்ததைப்போல நாமும் பாவத்துக்கு மரித்து நித்தியஜீவனுக்காக உயிர்த்திருக்கின்றோம். இப்படி நாம் கூறிக்கொள்ளவேண்டுமானால், "கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆனால் இன்று பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளில் இந்த உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களே முன்னுரிமைப்படுத்தப்பட்டு பிரசங்கிக்கப்படுகின்றன; மேலான மகிமையான காரியங்கள் மறைக்கப்படுகின்றன. அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் தெளிவாகக் கூறுகின்றது, "கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." என்று. அதாவது இந்த உலகத்தில் நாம் வாழும் இலக்கு கிறிஸ்து வீற்றிருக்கும் அந்தப் பிதாவின் இடத்தை அடைந்து அந்த மகிமையினை அனுபவிப்பது. 

இதற்கு நாம் என்னச் செய்யவேண்டும் என்பதனை பவுல் அப்போஸ்தலர் தொடர்ந்து எழுதும்போது   கூறுகின்றார், "ஆகையால், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்." ( கொலோசெயர் 3 : 5 ) அவயவயங்களை அழிப்பது என்பது இந்தச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டும் உறுப்புகளைக் கட்டுப்படுத்துவது. 

ஆம் அன்பானவர்களே, மேற்படி கூறப்பட்டுள்ள பாவங்களையும் நான் விடமாட்டேன் ஆனால் கிறிஸ்துவையும் ஆராதிப்பேன் என்று நாம் கூறுவோமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம். அது மெய்யான கிறிஸ்தவன் செய்யும் செயலல்ல. கிறிஸ்துவை அறிவிப்பது என்பதும் ஆராதிப்பது என்பதும்  வெறுமனே, "இயேசு ஆண்டவர் என்று கூறுவதும் அல்லேலூயா" என்றும் அலறுவது அல்ல. 

மெய்யான ஆராதனை என்பது நமது வாழ்க்கையினை பரிசுத்தமாக வாழ்வது. நமது வாழ்வை அவருக்கு ஒப்புக்கொடுப்பது.  "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று வாசிக்கின்றோம்.

இப்படி நாம் வாழும்போது ஒருவேளை இந்த உலகத்தில் நாம் தரித்திரராக, பாடுகளோடு வாழ்ந்தாலும் பிற்பாடு அது நமக்கு மகிமையான காரியமாக இருக்கும். இதனையே "நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்." ( கொலோசெயர் 3 : 4 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம், கிறிஸ்துவுடன்கூட எழுந்த நாம் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையேத்  தேடுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

No comments: