Tuesday, July 23, 2024

செவிடனும் ஊமையனும் இருப்பதுபோல இருப்போம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,270       ஆகஸ்ட் 01, 2024 💚 வியாழக்கிழமை 💚

"காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன்; கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்." (சங்கீதம் 38:14, 15 )

இன்றைய தியான வசனமானது தாவீது பாடிய நினைவுகூருதலுக்கான சங்கீதம் என்று கூறப்பட்டுள்ள சங்கீதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தாவீது எதன் நினைவாக இதனைப் பாடினார் என்று பார்ப்போமானால்,  அவரது உயிரைப் பறிக்க பலர் முயன்றனர். குறிப்பாக சவுல், சவுலின் படைத்தலைவர்கள், தாவீதின் சொந்த மகன் என பலர் இப்படித் தாவீதைக் கொலை செய்யக்  காத்திருந்தனர். 

ஆனால் இவை எதனையும் பற்றிக் கவலைப்படாமல் ஒரு செவிடனும் ஊமையனும் இருப்பதுபோல நான் இருக்கிறேன் என்கின்றார் தாவீது. காரணம், கர்த்தர் இவர்களுக்கு மறுமொழி கொடுப்பார் என்று தாவீது நம்பியிருந்ததால்தான். எனவே, இப்படிக் காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போல இருக்கிறேன் என்கின்றார் தாவீது. அதாவது இது தாவீது கர்த்தர்மேல் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு என்று கூறலாம்.

மேலும் இன்றைய தியான வசனத்துக்கு முந்தின இரு வசனங்களில் அவர் கூறுகின்றார், "என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள், நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப் போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்" (சங்கீதம் 38:12, 13 )

ஆம் அன்பானவர்களே, நம்மை எதிர்த்துச் சிலர் செயல்படும்போது நாம் அமைதியாக இருப்போமானால் இந்த உலகத்தினர் நம்மைக் கோழை என்றும் கையாலாகாதவன் என்றும் கூறலாம் ஆனால் தாவீது கூறுவதுபோல செவிடனும் ஊமையனும் போல இருந்து கர்த்தருக்குக் காத்திருப்போமானால் கர்த்தரே நமக்காக பதில் செய்வார்.  அப்படிக் கர்த்தர் எதிரிகளுக்கு அளிக்கும் பதில் மிகக் கடுமையானதாக இருக்கும்.

இஸ்ரவேலரை அழிக்க முயன்ற பார்வோனின் படைகளைக் கண்டு இஸ்ரவேலர் பயந்தனர். அப்போது மோசே அவர்களை நோக்கி, "பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." ( யாத்திராகமம் 14 : 13, 14 ) அப்படியே பார்வோனின் அழிவு மிகக் கடுமையானதாக இருந்ததை நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். 

நமது வாழ்விலும் இதுவே நடக்கும். ஆம் அன்பானவர்களே, நான் அனுபவித்து அறிந்த வேத  சத்தியம் இது. "பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்." ( ரோமர் 12 : 19 )   என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்ற உண்மையும் இதுதான். 

"பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்." ( எபிரெயர் 10 : 30 ) எனவே நமக்கு எதிராகச் சிலர் செயல்படும்போது ஊமையும் செவிடுமாக இருந்து கர்த்தர் பதிலளிக்கக் காத்திருப்போம்.  

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

No comments: