'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,253 💚 ஜூலை 15, 2024 💚 திங்கள்கிழமை 💚
நமது தேவன் மனச்சாட்சியற்ற சில மனிதர்களைப் போன்றவரல்ல; மாறாக, அவர் அன்பும் இரக்கமும் நீதியுமுள்ள தேவன். அந்தக்கால யூதர்கள் வேத அறிவு நிரம்பியவர்களாக இருந்தாலும் தேவன் விரும்பும் இரக்கமும் தேவனை அறியும் அறிவும் இல்லாமலிருந்தனர். எனவே அவர்கள் ஆலய வழிபாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்தனரேத் தவிர இரக்கமோ அன்போ இல்லாதவர்களாக இருந்தனர்.
எனவேதான் அவர்கள் முப்பத்தியெட்டு ஆண்டுகள் நோயுற்று அவதியுற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவினால் அற்புதமாகக் குணமானபோது அதனைப் பாராட்ட மனமில்லாமல் இயேசு கிறிஸ்து அந்தக் குணமாக்குதலை ஓய்வுநாளில் செய்ததற்காக அவர்மேல் குற்றஞ்சாட்டினர். (யோவான் 5 ஆம் அதிகாரம்) காரணம் அவர்களிடம் சகோதர அன்பில்லாமலிருந்தது.
ஆம் அன்பானவர்களே, பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், தேவன் விரும்புகிறார். இன்றைய தியான பழைய ஏற்பாட்டு வசனத்தை இயேசு கிறிஸ்துவும் பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம். பாவிகளுடன் அவர் விருந்துண்பதை யூதர்கள் விமர்சித்தபோது, "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்." ( மத்தேயு 9 : 13 )
இதுபோலவே பயிர் நிலத்தின் வழியே நடந்து சென்றபோது இயேசுவின் சீடர்கள் பயிரைப் பறித்துக் கைகளால் நிமிட்டித் தின்பதைக்கண்டு அவரை விமர்சனம் செய்தனர். அப்போது அவர், "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறினார்.
அன்பானவர்களே, இதுபோலவே இன்று பல ஊர்களில் பணக்கார ஊர்த்தலைவர்களும் அவரது ஆதரவாளர்களும் இருக்கின்றனர். உதாரணமாக, ஊர்த்திருவிழாக்கள் கொண்டாடும்போது தேவையில்லாத ஆடம்பரச் செலவினங்களுக்காக திருவிழா வரியை மிக அதிகமாக்கி வசூலித்து ஊரிலுள்ள ஏழைகளை அவமதிக்கின்றனர். இவர்களைப்பார்த்து தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார், "பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்."
எனவே நாம் தேவனுக்காக என்று எதனைச் செய்தாலும் முதலில் இரக்கத்தைக் கடைபிடிப்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அந்த இரக்கம் ஒருவருக்கு எப்போது வரும்? அது தேவனை அறியும் அறிவு பெறும்போதுதான் வரும். எனவேதான் நாம் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. ஆம், பலியையல்ல; இரக்கத்தையும் தேவனை அறியும் அறிவினையுமே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.
இப்படி இரக்கமும் தேவனை அறியும் அறிவும் உள்ளவனே மெய்யான கிறிஸ்தவன். மற்றவர்கள் அனைவரும் பெயர் கிறிஸ்தவர்களே.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment