'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,268 💚 ஜூலை 30, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚
நாம் நமது பொல்லாப்புக்களைவிட்டு மனம் திரும்பும்போது கர்த்தர் நமது வாழ்வில் மிகப்பெரிய காரியங்களைச் செய்து நாம் மகிழ்ந்து களிகூரும்படிசெய்வார். இந்தச் சத்தியத்தை யோவேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் விளக்குகின்றார்.
நாம் மனம்திரும்பாத, தேவனுக்கு விரோதமான வாழ்க்கை வாழ்ந்தபோது வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் மரங்களை அழித்து விளைச்சலைக் கெடுப்பதுபோல நமது வாழ்க்கையில் துன்பங்களும், சோதனைகளும் இழப்புக்களும் ஏற்பட்டு ஒரு செழிப்பற்ற வாழ்க்கையை நமக்கு ஏற்படுத்தும். ஆனால் நாம் தேவனுக்கு நேராகத் திரும்பும்போது இவற்றுக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் வாழ்வில் ஏற்படும் என்கின்றார் தேவன்.
எனவே பழைய பாவ வாழ்கையினைவிட்டு மனம் திரும்ப தேவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். இதனையே, "நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." ( யோவேல் 2 : 13 ) என்று நாம் வாசிக்கின்றோம்.
விவசாயிகளுக்கு முன்மாரி பின்மாரி பற்றி நன்றாகத் தெரியும். இந்த மழைகள் எப்படி விளைச்சலை அதிகரிக்கும் என்பது சாதாரண மக்களைவிட விவசயிகளுக்கு நன்றாகத் தெரியும். இப்படியே விவசாயிகள் மகிழ்வதுபோல நாம் மனம்திரும்பும்போது நாம் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியடையமுடியும். ஆம், "உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் வருஷிக்கப்பண்ணுவார்." ( யோவேல் 2 : 23 )
அப்படி என்ன மாற்றம் ஏற்படும் என்பதனை உவமையாக பின்வருமாறு கூறுகின்றார், "நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்." ( யோவேல் 2 : 25 )
அதாவது, நாம் மனம்திரும்பாத, தேவனுக்கு விரோதமான வாழ்க்கை வாழ்ந்தபோது வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் மரங்களை அழித்து விளைச்சலைக் கெடுப்பதுபோல நமது வாழ்க்கையில் துன்பங்களும், சோதனைகளும் இழப்புக்களும் ஏற்பட்டு நாம் வருந்திய வருஷங்களின் விளைவை நமக்குத் திரும்ப அளிப்பேன் என்கின்றார் தேவன்.
ஆம் அன்பானவர்களே, தேவனுக்கேற்றபடி நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு பயப்படாமல், மகிழ்ந்து களிகூருவோம்; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment