Wednesday, July 17, 2024

குணமாக்கும் ஜெபங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,264     💚 ஜூலை 26, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5 : 16 )

மனிதர்களை நோய்வாய்ப்பட பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, உடலுக்கு ஏற்பில்லாத உணவுகளை உட்கொள்வது; அளவுக்கு அதிக உணவு உண்பது, ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்வது,  இவை தவிர, நாம் மற்றவர்களுக்கு எதிராகச் செய்யும் பாவங்கள், நமது அந்தரங்கப் பாவங்கள், முன்னோர்கள் செய்த செயல்களின் சாபங்கள், மற்றவர்களுக்கு எதிராக நாம் செய்யும் தகாத செயல்கள் போன்றவைச் சில. 

இந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும்போதுதான் நாம் குணமாக முடியும். எனவேதான் இயேசு கிறிஸ்துத் தன்னிடம் வந்த நோயாளிகளுக்கு குணமாக்குமுன் முதலில் அவர்களது பாவங்களை மன்னித்தார். (உதாரணமாக, மத்தேயு 9 : 2, மாற்கு 2 : 5  லுூக்கா 5 : 20) இதுவே யூதர்களுக்கு அவர்மேல் கோபம் வரக்  காரணமாகவும் இருந்தது. ஆம், பாவங்கள் மன்னிக்கப்படாமல் சில நோய்கள் குணமாவதில்லை.
 
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு நமக்கு ஒரு நல்ல படிப்பினையினைத் தருகின்றார். அதாவது, நாம் மறவர்களுக்கு எதிராகத் தகாத செயல்கள் செய்திருப்போமானால் முதலில்  அவற்றுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டவேண்டும். நான் எனது போக்கில்தான் இருப்பேன் தேவன் என்னைக் குணமாக்கவேண்டும் என எண்ணுவதும் வேண்டுவதும் ஏற்புடைய செயலல்ல. நமது குற்றங்களை ஆவிக்குரிய நபர்களிடம் அறிக்கையிடும்போது அப்போது அவர்கள் ஜெபம் பண்ணினால் கிடைக்கும். 

ஜெபத்தின்மூலம் சுகம் கிடைக்கவில்லையானால் மறைக்கப்பட்ட பாவங்கள் நம்மிடம் ஏதாகிலும் உண்டுமா என நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். 

நாம் பிறர் மேல் கொள்ளும் பொறாமை, எரிச்சல், கோபம், செய்யும் தவறான செயல்கள் நமக்குள்ளே இருந்து உறுத்தி பல்வேறு உடல் நோய்களை உருவாக்கும் என்று இன்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.  மனிதர்களது பல நோய்களுக்கும் மனமே காரணம். பிறருக்கு எதிராக நாம் செய்த தவறுகளை அறிக்கையிடும்போது மன ஆறுதல் மட்டுமல்ல நோய்களிலிருந்து விடுதலையும் கிடைக்கின்றது. 

இப்படி மற்றவர்களிடம் பாவங்களை ஒளிவு மறைவின்றி அறிக்கையிட்டு வாழ்பவனே நீதிமான். எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து யாக்கோபு நீதிமானாகிய எலியாவை நமக்கு உதாரணம் காட்டுகின்றார். "எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது." ( யாக்கோபு 5 : 17, 18 )

இயற்கையையே கட்டுப்படுத்தும் ஆற்றல் எலியாவுக்கு இருந்தாதானால் அவருக்கு குணமாக்கும் ஆற்றலும் இருந்தது என்று பொருள். ஆம் அன்பானவர்களே,  அவரது வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருந்தது. 

சிலர் நோய்களுக்காக மருத்துவரிடமும் பல்வேறு ஊழியர்களிடமும் மாறி மாறிச் சென்றுகொண்டிருப்பார்கள். அன்பானவர்களே, நமக்குள் ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். யாருக்கு எதிராக நாம் பேசியிருந்தாலும், செயல்பட்டிருந்தாலும் உண்மையான மனஸ்தாபத்துடன் தேவனிடம் மன்னிப்பை வேண்டுவோம்.   நமது பாவங்களும், நோய்களும் அப்போது நம்மைவிட்டு அகலும்.  ஆம், குணமடையும்படிக்கு குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுவோம்.  நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: