Monday, July 08, 2024

தேவ வசனமே அக அழுக்கைக் காட்டும் கண்ணாடி

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,256     💚 ஜூலை 18, 2024 💚 வியாழக்கிழமை 💚


"உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 )

இன்றைய தியான வசனம் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவை நோக்கி ஜெபித்த ஜெபமாகும். இந்த ஜெபத்தில் அவர் பிதாவிடம் அவரது சத்திய வசனத்தால் நம்மைப் பரிசுத்தமாக்கும்படி வேண்டுதல் செய்கின்றார். ஆம் அன்பானவர்களே, பரிசுத்தரான கர்த்தரது சொற்கள் பரிசுத்தமானவைகள். அவையே நம்மைச் சுத்தமாக்க முடியும். 

"கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு ஒப்பான  சுத்தச் சொற்களாயிருக்கின்றன." ( சங்கீதம் 12 : 6 ) என்று வாசிக்கின்றோம். வேதாகமத்தை நாம் வாசிக்கவேண்டியதன் முக்கியத்துவம் இதுதான். நாம் நமது முகத்தை அழகுபடுத்த நம்மைக் கண்ணாடியில் பார்க்கின்றோம். அது நமது முகத்திலுள்ள சிறு அழுக்கையும் நமக்குக் காண்பித்துவிடும். அதுபோன்றவையே தேவனது வார்த்தைகள்.  அவை நமது அகத்தின் அழுக்கை நமக்கு எடுத்துக்காட்டி நாம் நம்மைத் திருத்திக்கொள்ள வழிகாட்டும்.  

தேவனது வார்த்தைகள் எப்படி நம்மைச் சுத்தப்படுத்துகின்றன என்பதனை நாம் எபிரெயர் நிரூபத்தில் வாசிக்கின்றோம். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

அதாவது ஜீவனுள்ள தேவனது வார்த்தைகள் நமது ஆவி, ஆத்துமா,  சரீரம், மற்றும் சரீரத்திலுள்ள ஒவ்வொரு அவயவங்களையும் தனித்தனியே  குத்திப்பிளந்து நமது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. தேவ வசனங்களை நாம் நிதானமாக வாசிப்போமானால் நமது எந்தப் பகுதியில் குறை இருக்கின்றது என்பதனை அது நமக்கு எடுத்துக்காட்டும். 

தேவ மனிதனாகிய மோசேயிடம் தேவன் கூறியதை அவர் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார். "நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக." ( உபாகமம் 11 : 19 - 21 )

ஆம், தேவனது வார்த்தைகள் எப்போதும் நமது கண்முன் இருக்கவேண்டியது அவசியம். இன்று பல்வேறு இடங்களில் தேவ வார்த்தைகள் சுவர்களில் எழுதப்பட்டுள்ளதையும் வசன ஸ்டிக்கர்களையும் நாம் பார்க்கின்றோம்,  அவற்றை பயன்படுத்துகின்றோம். காரணம், அவை எந்த வழியிலாயினும் மனிதர்களைச்  சென்று சேரவேண்டும், அவர்களது இருதயத்தில் பதிந்து வாழ்க்கை மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவேதான். 

மேலும், இறுதிநாளில் தேவ வசனமே நம்மை நியாயம்தீர்க்கும். ஆம், தேவ வசனத்தின்படியே நியாயத்தீர்ப்பு. "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.' ( யோவான் 12 : 48 ) என்கிறார் இயேசு கிறிஸ்து. 

எனவே, தேவ வார்த்தைகளை நாம் தினமும் வாசித்து நம்மைத் திருத்திக்கொள்வோம். தேவனுடைய சத்திய வசனமே நம்மைப் பரிசுத்தமாக்கும். ஆம், அவருடைய வசனமே சத்தியம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

No comments: