Thursday, July 25, 2024

பின்மாற்றம்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 02, 2024. வெள்ளிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,271   💚                                                              

"பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;" ( எபிரெயர் 12 : 1 )

இந்த உலகத்தில் வாழும் நமக்குப் பல்வேறு துன்பங்கள் பாடுகள் போன்றவை பாரமான சுமைகளாக நம்மை நெருக்கவே செய்யும். அதுபோல இந்த உலகில் நம்மைப் பாவத்தில் விழத்தள்ளுகின்ற பல்வேறு சூழ்நிலைகள் உள்ளன. ஆனால் நாம் இவற்றை விசுவாசத்தால் மேற்கொண்டு கிறிஸ்துவை நோக்கி நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடரவேண்டும். இதனையே இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது.

இப்படி ஆவிக்குரிய வாழ்வில் விசுவாசத்தின் மூலம் துன்பங்களையும் பாவங்களையும் மேற்கொண்ட ஒரு நீண்ட விசுவாசிகளின் பட்டியலை எபிரெய நிரூப ஆசிரியர் முதலில் தருகின்றார். அதன்பின்பு, "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க" என்று கூறி இன்றைய தியான வார்த்தைகளைக் கூறுகின்றார். 

இந்த வசனத்தில் "விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நம்மில் தேவன்மேல் விசுவாசம் ஏற்படக் காரணரும் அதனை நாம் இறுதிவரைக் காத்துக்கொள்ளத் துணைசெய்பவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான். எனவே நாம் நமது துன்பங்களையும் பாவங்களையும் விட்டு விலகி, கிறிஸ்துவை நோக்கி பொறுமையாக ஆவிக்குரிய ஓட்டத்தை ஓடவேண்டியது அவசியம். 

இங்கு பொறுமையாக ஓடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது ஏன் என்று பலரும் எண்ணலாம். சிலர் ஆவிக்குரிய வாழ்க்கையினைக் கண்டுபிடித்த பின் மிகத் தீவிரமாகச் செயல்படுவார்கள். எங்கு ஆவிக்குரிய கூட்டம் நடைபெற்றாலும் முதலில் சென்று இடம்பிடித்துக்கொள்வார்கள். மற்றவர்களைவிடத் தாங்கள் சிறந்தவர்கள் என்று காட்டிட பல்வேறு செயல்பாடுகளைச் செய்வார்கள். ஆனால் கொஞ்சநாட்களில் இவர்கள் பின்மாற்றமடைந்து பழைய பாவ வாழ்க்கையினுள் சென்றுவிடுவார்கள். 

தமிழில் "மெல்லத் தின்றால் பனையையும் தின்னலாம்"  என ஒரு பழமொழி உண்டு. ஆம், எதிலும் நிதானம் அவசியம். ஒருமுறை இப்படிப் பின்மாற்றமடைந்த சகோதரர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசியபோது அவர், " எல்லா மதமும் ஒன்றுதான் பிரதர்........நானும் முதலில் எனது நண்பர் தூண்டிவிட்ட ஏதோ ஆர்வத்தில் செயல்பட்டேன். இப்போது நான் தெளிவடைந்துவிட்டேன்" என்றார். மீட்பு அனுபவம் பெற்று, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்தபின் இப்போது இவர் கண்டுகொண்டது "எல்லா மதமும் ஒன்றுதான்" என்பது. இதனைத் தான் தெளிவடைந்து விட்டதாகவும் கூறுகின்றார் என்றால் எவ்வளவு பரிதாபம்!!. 

ஆம் அன்பானவர்களே, தேவைக்கதிக ஆர்வம் வேண்டாம். இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்று எச்சரிக்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

No comments: