Saturday, July 27, 2024

நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 03, 2024. 💚சனிக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,272                                     

  

"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது."  (2 கொரிந்தியர் 3:5)

முற்றிலுமாகத்  தன்னை தேவனுக்கு ஒப்புவித்து வாழ்த்த தனது வாழ்க்கையினை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, தன்னால் தேவனுடைய உதவியில்லாமல் எதனையும் செய்ய முடியும் என்று தன்னால் எண்ணக்கூட முடியவில்லை என்கின்றார். 

இன்று மனிதர்கள் சிலவேளைகளில், "என்னைத் தெரியுமா? நான் நினைத்தால் எதனையும் செய்துவிடுவேன்" என்பார்கள்.  தன்னம்பிக்கைப்  பேச்சாளர்களும் எழுத்தாளர்களும், "என்னால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள் அப்போது அது உங்களால் முடியும்" என்பார்கள்.  சிலர், "எண்ணம்போலவே வாழ்க்கை; நல்லதை எண்ணினால் நல்லதே நடக்கும்" என்பார்கள்.

ஆனால் இவை எல்லாமே மனித அறிவினால் அவர்கள் எண்ணுவது. தேவனது கிருபை இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. அப்போஸ்தலரான யாக்கோபு இதனால்தான், "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 14, 15 ) என்று நமக்கு ஆலோசனைத் தருகின்றார். 

ஆம் அன்பானவர்களே, தன்னம்பிக்கைப் பேச்சாளர்களைப்போல் நம்மையே நம்பாமல் தேவன்மேலேயே முழு நம்பிக்கையை வைப்போம். நம்மால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல; நம்முடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. "நூறு வயதுவரை வாழ்வது எப்படி?" எனத் தன்னம்பிக்கைப் புத்தகம் எழுதிய "கல்கண்டு" இதழ்  தமிழ்வாணன் அவர்கள் ஐம்பத்திரெண்டு வயதில் மரித்துப்போனார்.

இப்படிச் சொல்வதால் நாம் எதுவும் செய்யாமல் சும்மா இருந்து கொண்டு தேவனே எல்லாம் செய்வார் என்று எண்ணிக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும் என்று பொருளல்ல.  மாறாக, "நான் இதனைச் செய்கிறேன், ஆண்டவருக்குச் சித்தமானால், என்னை வெற்றிபெறச் செய்வார்" என்று தேவனை முன்னிலைப்படுத்திச் செயல்படவேண்டும். நமக்கு பல்வேறு திறமைகளும் தகுதிகளும் இருக்கலாம். ஆனால் திறமைகளும் பல்வேறுத்  தகுதிகளும் உள்ள எல்லோரும் வாழ்வில் வெற்றியடையவில்லை என்பதனையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  

கிறிஸ்து நமக்குள் இருந்து செயல்படும்போது கிறிஸ்துவுச் சித்தமான செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம் அவரே நமக்கு அதற்கான பெலத்தையும் தருவார். எனவேதான், அத்தகைய செயல்பாடுகள் அனைத்தையும் செய்யத் தனக்கு பெலன் உண்டு என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். ஆம், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

No comments: