'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,262 💚 ஜூலை 24, 2024 💚 புதன்கிழமை 💚
"மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" ( நீதிமொழிகள் 20 : 6 )
இன்றைய தியான வசனம் மனிதர்களது அடிப்படைக் குணத்தைக் குறித்துக் கூறுகின்றது. அதாவது, அற்பப் பெருமைக்காகத் தாங்கள் பிறருக்குச் செய்த உதவிகளைப் பிரச்சித்தப்படுத்துவது.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் உண்டு. அவர் இப்படித்தான் தானும் தனது மனைவியும் செய்த உதவிகளைப் பெருமையாக எல்லோரிடமும் கூறிக்கொண்டிருப்பார். அதாவது, உண்மையாகத் தான் செய்ததை சற்று மிகைப்படுத்திப் பேசுவார். இப்படி இவர் பேசுவது பொய் என்று தெரிந்தாலும் பலரும் இவரிடம் நேரடியாக எதுவும் கூறுவதில்லை. எனவே இவர் தான் கூறுவதை எல்லோரும் நம்பிவிட்டார்கள் என்று எண்ணிக்கொள்வார். ஆனால் இவருக்குத் தெரியாமல் இவர் கூறியதை தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொள்வார்கள்.
உண்மையான உதவும் மனநிலையில் ஒருவர் பிறருக்கு உதவும்போது அவர் தன்னைப் பிரச்சித்தப்படுத்த மாட்டார். இன்று பலர் தாங்கள் செய்யும் சில சிறு உதவிகளையும்கூட வீடியோ பதிவுசெய்து முகநூலிலும் இதர சமூக ஊடகங்களிலும் வெளியிடுவதை நாம் பார்க்கலாம். இவர்கள் இப்படிச் செய்வதற்குத் தாங்களே அறியாத உள்நோக்கம் இருக்கும். அதாவது, மக்கள் தங்களை நல்லவர்கள் என்று எண்ணவேண்டும் அல்லது இப்படிச் செய்வதன்மூலம் தங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எண்ணுவது.
தெரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரருக்கு காசு கொடுப்பது அல்லது ஏதாவது பொருள் உதவி செய்வது இவற்றைக்கூட இப்படிப் பதிவு செய்து மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். இதனையே, "மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, இந்த வசனம் இப்படிச் செய்பவர்கள் உண்மையற்றவர்கள் என்று கூறுகின்றது. எனவேதான், "உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" என்ற கேள்வியோடு முடிக்கின்றது இன்றைய வசனம்.
இயேசு கிறிஸ்து இதனைக்குறித்து "ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 6 : 2 ) என்று கூறுகின்றார்.
அதாவது, இப்படித் தாங்கள் செய்வதைப் பிரசித்திப்படுத்துபவர்கள் மாயக்காரர் என்கின்றார். மேலும், "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்கின்றார். நாலுபேர் இவர்கள் சொன்னதை அல்லது செய்ததைப் பார்த்தார்களே அதுதான் இதன்மூலம் இவர்கள் பெற்ற பயன். எனவே, இனிமேல் இவர்கள் தேவனிடம் தங்கள் செயலுக்கு பலனை எதிர்பார்க்க முடியாது என்று பொருள்.
மட்டுமல்ல, எப்படித் தர்மம் அல்லது உதவி செய்யவேண்டும் என்பதனையும் இயேசு கிறிஸ்து கூறினார். "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது." ( மத்தேயு 6 : 3 )
"நான் இப்படிச் செய்வதை வெளியில் கூறும்போது மற்றவர்களும் இதுபோல உதவிகள் செய்வார்கள்" என்று சிலர் உப்புச் சப்பற்ற காரணத்தைக்கூறி தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிப்பார்கள். அன்பானவர்களே, இந்த விஷயத்தில் தேவன் எல்லோருக்கும் மனச்சாட்சியையும் இரக்கம் அன்பு போன்ற குணங்களையும் கொடுத்துள்ளார். ஆகவே அவர்கள் செயலுக்கு அவர்கள் தேவனுக்குக் கணக்குக் கொடுத்துக்கொள்வார்கள். எனவே, மற்றவர்களைத் திருத்துகிறேன் என்று எண்ணி நாம் படுகுழியினுள் விழுந்துவிடக் கூடாது.
இப்படிச் சிறு உதவி அல்லது நல்லச் செயல் செய்ததையும் பிரசித்திப்படுத்தும் அற்பமான குணம் நமக்கு இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்வோம். தேவன் கண்டுபிடிக்கும் உண்மையான மனுஷனாக வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment