'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,263 💚 ஜூலை 25, 2024 💚 வியாழக்கிழமை 💚
"பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )
நேபுகாத்நேச்சார் தான் யூதாவிலிருந்து சிறைபிடித்துக் கொண்டு வந்தவர்களில் அறிவுமிக்கவர்களைத் தனது நாட்டில் பணியமர்த்த விரும்பி அப்படித் திறமையானவர்களைக் கண்டுபிடித்தான். அவர்களுள் தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் உண்டு. ராஜா இந்த இனைஞர்களுக்கு ராஜ உணவைக்கொடுத்து அந்த நாட்டு மொழியையும் கற்பித்துக்கொடுத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் தன்னிடம் அவர்களைக் கொண்டுவரும்படிப் பணித்தான்.
மூன்று வேளையும் ராஜ உணவு கொடுக்க ஏற்பாடானபோதும் தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் ராஜாவுணவு தங்களுக்கு வேண்டாம், வெறும் பருப்பும் மரக்கறி உணவுமே போதும் என்று கூறிவிட்டனர். ஆனால் அவர்களைக் கவனிக்க நியமிக்கப்பட்ட ஊழியன் அப்படி நான் கொடுத்தால் ராஜாவுக்குமுன் நான் உங்களை நிறுத்தும்போது நீங்கள் மற்றவர்களைவிட உடல்மெலிந்து காணப்படுவீர்கள், அப்போது ராஜா என்னிடம் கேள்விகேட்பான் என்று தானியேலின் கோரிக்கையினை நிறைவேற்றத் தயங்கினான்.
அப்போது தானியேலும் அவரது நண்பர்களும், "பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும்." ( தானியேல் 1 : 12, 13 ) என்றனர்.
இப்படிச் செய்து சோதித்துப்பார்த்த "பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 ) ஆம், உணவுக்கும் நமது ஆவிக்குரிய வாழ்வுக்கும் தொடர்பு உண்டு. ஆவிக்குரிய மனிதர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் விருந்துகளிலும் மற்றவர்களைவிட உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டையும் நிதானத்தையும் காட்டுவார்கள்.
"நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியைவை. அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே." ( நீதிமொழிகள் 23 : 1- 3 )
ஒரு வீட்டில் மாலை நேரத்தில் ஜெபிக்கச் சென்ற ஊழியர் ஒருவர் ஜெபித்துவிட்டு வெளியே வந்தபின்னர் தன்னுடன் வந்த சகோதரர்களிடம், "வெறும் காப்பியும் மிச்சரும் தந்து அனுப்பிவிட்டார்கள்" என்று குறைபட்டுக்கொண்டார். அப்படியானால் இவர் என்ன எதிர்பார்ப்புடன் ஜெபிக்கச் சென்றார்? இப்படிச் சில ஊழியர்கள்!!. மேலும் சிலர் உபவாசம் இருக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பார்கள், ஆனால் அதன்பின்பு ஒட்டகம் நீர் அருந்தி சேமிப்பதைப்போல கிடைத்தமட்டும் உண்டு தங்கள் வயிற்றை நிரப்புவார்கள். இப்படிச் செய்வதை தேவன் வெறுக்கின்றார். நமக்குள் ஆவியானவர் இருப்பாரென்றால் இதனை நமக்கு உணர்த்தித் தருவார்.
அன்பானவர்களே, மூன்று ஆண்டுகள் ராஜ உணவை வெறுத்து வெறும் பருப்பும் காய்கறிகளையும் உண்ட தானியேலின் நண்பர்கள் நெருப்புச் சூளையினுள் போடப்பட்டபின்னரும் உயிருடன் மீண்டனர்; பசித்திருந்த சிங்கங்களின் கெபியினுள் போடப்பட்ட தானியேலை சிங்கங்கள் நெருங்கவில்லை. மட்டுமல்ல; அனைத்து மறைபொருளையும் இந்நாள் வரையும் உலகம் முடியும்வரையும் நடக்கப்போகும் காரியங்களையும் தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்திக்கொடுத்தார். காரணம், அவர்களது தேவனுக்குப் பாயந்த உண்மையுள்ள வாழ்க்கை.
"போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்." ( ரோமர் 14 : 20 )
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment