இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, July 07, 2024

நீதியின் அடையாளமான மெல்லிய வெண்ணாடை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,254     💚 ஜூலை 16, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16 : 15 )

இரட்சிப்பு அனுபவத்தைப் பெறும்போது தூய மெல்லிய வெண்ணாடை  ஒருவருக்கு அளிக்கப்படுகின்றது. இந்த வெண்ணாடையை அசுத்தம்செய்யாமலும் கிழிந்துபோகாமலும் காத்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும். "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 8 ) என்று வாசிக்கின்றோம்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அனுபவத்துக்குப்பின்பும் நாம் பாவம் செய்வோமானால்  பரிசுத்தவான்களுடைய நீதியின் அடையாளமான இந்த மெல்லிய வெண்ணாடையை அச்சுதப்படுத்துகின்றோம் அல்லது கிழித்துவிடுகின்றோம். எனவே இந்த மெல்லிய ஆடையை நாம் கிறிஸ்து வரும்வரைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

இதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்."

மேலும் நாம் வாசிக்கின்றோம், "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 5 )

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது. எனவேதான், "இதோ, திருடனைப்போல் வருகிறேன்" என்று கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவும் கூறினார், "அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்." ( லுூக்கா 12 : 40 )

மேலும் இயேசு கிறிஸ்து திருமண விருந்துக்கு அழைக்கப்பட்ட ஒரு மனிதனைக்குறித்துக் கூறிய  அழகிய உவமை மூலம் இதனை விளக்கினார். "விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்." ( மத்தேயு 22 : 11 - 13 )

எனவே, "நான் இரட்சிக்கப்பட்டேன், முழுக்கு ஞானஸ்நானம் எடுத்துள்ளேன், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளேன் என்று கூறிக்கொண்டு பாவ வாழ்க்கையும் வாழ்வோமானால்  நாம் ஆடை கிழித்து நிர்வாணமாய்க் காணப்படுபவர்களாகவே  அவர்முன் இருப்போம். எனவே, விழித்துக்கொண்டு, கிறிஸ்துவின் வருகை எப்போது இருந்தாலும் அதற்கு ஆயத்தமாக இருப்போம். நம் வஸ்திரங்களைக் காத்துக்கொள்வோம்; பாக்கியவான்களாக வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments: