'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,267 💚 ஜூலை 29, 2024 💚 திங்கள்கிழமை 💚
"மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியினால் அறியப்படும்." ( மத்தேயு 12 : 33 )
மனிதர்கள் நாம் பொதுவாக ஒரு மனிதன் செய்யும் சில வெளிச் செயல்களைக்கொண்டு அவர்களை நல்லவர்கள் என்றும் சிலரைக் கெட்டவர்கள் என்றும் கூறுகின்றோம். ஆனால், நாம் நல்லவர்கள் என்று கூறும் பலரும் உண்மையில் நல்லவர்களாக இருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒரு சில நல்லச் செயல்களல்ல, மாறாக அவர்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தும் நல்ல கனியுள்ள குணங்களே அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதனை உலகுக்கு வெளிப்படுத்தும்.
இந்த உலகினில் பலவேளைகளில் மக்கள் தாங்கள் நல்லவர்கள் என்று கூறும் மனிதர்கள் மோசமானச் செயல்களைச் செய்வதை அறியும்போது, "என்னால் நம்ப முடியவில்லை...அவரா இப்படிச் செய்தார்?" என்று வாய் பிளப்பார்கள். காரணம், அவர்கள் இதுவரை நல்லவர்கள் என்று நம்பியவர்கள் செய்த மோசமான செயலை மக்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
இதனை எல்லா காரியங்களிலும் நாம் பார்க்கலாம். அரசியல்வாதிகளில்கூடச் சிலரை மக்கள் நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் மோசமான அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போது, "ஐயே...இந்த மனிதனுக்கு பைத்தியமா? அவனோடு கூட்டணி அமைத்துள்ளான்" என்பார்கள். காரணம், ஊழலையும் அரசின் சில மோசமான மக்கள் விரோத திட்டங்களையும் இதுவரை இந்த மனிதர் எதிர்த்துப் பேசியதுதான். இப்போது பல கோடிகள் கிடைத்தவுடன் தான் இதுவரை எதிர்த்துப் பேசிய கட்சியுடன் சேர்ந்துகொண்டு இதுவரைத் தான் பேசியதை மாற்றிப் பேசுகின்றான்.
அதாவது இதுவரை இவர் பேசியது மக்கள் மத்தியில் இவரை நல்லவனாக அடையாளம்காட்டியது. ஆனால் மனப்பூர்வமாக இவர் நல்லவரல்ல. இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியினால் அறியப்படும்." ஆம் அன்பானவர்களே, ஒருவரது ஒரு செயல்மூலமல்ல மாறாக உளப்பூர்வமாக அவர் செய்வதும் பேசுவதும்தான் அவரை நாம் நல்லவரா கெட்டவரா என்று அடையாளம் காண உதவும்.
"அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்." ( மத்தேயு 7 : 16, 17 )
அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது மட்டுமே இந்த மரங்களைப்பற்றிய (மனிதர்களைப் பற்றிய) அறிவு நமக்கு வரும். இல்லாவிட்டால் சாதாரண மக்களைப்போல நாமும் சிலரை நல்லவர்கள் என்றும் சிலரைக் கெட்டவர்கள் என்றும் எண்ணிக்கொண்டு வாழ்வோம். ஆம், இதுவே இன்று பலர் குருட்டுத்தனமாக சில ஊழியர்களைப் பின்பற்றக் காரணம். அவர்களது நயவசனிப்பான சத்தியத்துக்கு விரோதமான பிரசங்கம் பல மக்களை அவர்களைநோக்கி இழுக்கின்றது. ஆம் இதனால் மக்கள் முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்க முயலுகின்றனர்.
வேத வசனங்களை பகுத்துணரும் அறிவும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் இருந்தால் மட்டுமே நாம் இந்த ஏமாற்று ஊழியர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் தப்பிக்க முடியும்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment