'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,269 💚 ஜூலை 31, 2024 💚 புதன்கிழமை 💚
"கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 6 )
கணவனால் கைவிடப்பட்டப் பெண்கள் அதிலும் குறிப்பாக இளம் வயதில் கணவனால் தள்ளப்பட்ட பெண்கள் எவ்வளவு வேதனை அனுபவிப்பார்கள் என்பது நாம் அனைவரும் உணரக்கூடியதே. அபலைப் பெண்களான அவர்களுக்கு ஆறுதலோ, உதவியோ, தேறுதலோ எவரும் எளிதில் அளித்திடமுடியாது.
இந்தப் பெண்களைப்போல மனவேதனை அடைந்து வாழக்கூடிய மனிதர்கள் இந்த உலகினில் பலர் உண்டு. ஆனால் அவர்களோ ஆறுதலின் ஊற்றாகிய தேவனை அடையாளம் காணாமல் தவிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய மனவேதனையோடு வாழ்பவர்களைத் தேவன் அழைத்துக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் அவர்களோ தங்களது பாரம்பரிய மத நம்பிக்கையினாலும், வறட்டுப் பிடிவாத குணத்தினாலும் தேவனிடம் வராமல் இருக்கின்றார்கள். கிறிஸ்தவர்களில் பலரும்கூட தங்களது குறுகிய மத எண்ணங்களினாலும், தாங்கள் அடிமையாகியுள்ள பாவப் பழக்கங்களிலிருந்து வெளிவர மனதில்லாததாலும் மெய்யான அவரை அறியாமல் தொடர்ந்து வேதனையிலேயே அமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஒருமுறை இப்படி வேதனையில் இருந்த மனிதனிடம் கிறிஸ்துவைப்பற்றி நான்கூறியபோது, "உன் பெந்தெகொஸ்தே போதனையை என்னிடம் திணிக்கப் பார்க்கிறாயா?" என்றார் கோபத்துடன். "நண்பரே, இது பெந்தெகொஸ்தே போதனையல்ல, ஆண்டவரது போதனை" என்று நான் கூறவும், "தயவுசெய்து வேறு ஏதாவது பேசு" என்றார். அவரிடம் என்ன பேசுவது?
அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை கிறிஸ்தவராக இருக்கலாம் அல்லாதவராகவும் இருக்கலாம். ஆனால் நமது தேவன் எல்லோரையும் பார்த்துக் கூறுகின்றார், "கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னை வா என்று அழைக்கிறேன்" என்று .
தேவன் யாரையும் பலவந்தப்படுத்துபவரல்ல; யாரையும் அவர் வற்புறுத்தி மதமாற்றம் செய்பவருமல்ல. அவர் மனிதர்களிடம் மனமாற்றத்தை விரும்புகின்றார். அந்த மனமாற்றம்தான் நாம் அவரிடம் வருவதற்கு அடையாளம். ஆம், எத்தகைய கொடிய வேதனையில் இருந்தாலும் நமது மனம் அவரிடம் திரும்புமானால் அவர் நமக்கு ஆறுதலும் தேறுதலும் தந்து நமது வாழ்வை மாற்ற வல்லவர்.
கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் வேதனையுற்று இருக்கிற யாவரையும் கர்த்தர் அழைக்கிறார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment