'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,260 💚 ஜூலை 22, 2024 💚 திங்கள்கிழமை 💚
"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." ( 1 பேதுரு 3 : 15 )
கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம் என்பது மெய்யாயினும் மற்ற மத மக்களைப்போல நாம் வெறும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் மட்டும் போதாது. எல்லா மதத்தினரும் தங்கள் வழிபடும் தெய்வத்தின்மேல் நம்பிக்கைக் கொண்டுதான் வாழ்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரை அந்த நம்பிக்கை நம்மைப் பரிசுத்தப்படுத்துவதாக இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு, "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்" என்று கூறுகின்றார்.
இப்படி நாம் பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, நம்மிடம் நமது விசுவாசத்தைக் குறித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று கிறிஸ்தவர்கள் பலரும் கிறிஸ்து தங்கள் வாழ்வில் என்னென்ன அற்புதங்கள் செய்தார் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அப்படிக் கிறிஸ்துவைக் குறித்துக் கூறும் பல சாட்சிகள், புகை பிடிப்பதை விட்டுவிட்டேன், வெற்றிலை, குடிப்பழக்கம் இவற்றிலிருந்து விடுதலையானேன் என்பதுபோலவே இருக்கின்றன. அன்பானவர்களே, இதுபோன்ற சாட்சிகளை எல்லா மதத்தினரும் கூறமுடியும்.
உண்மையாகக் கூறப்போனால், கிறிஸ்துவால் வெற்றிலை, குடி, புகைபிடித்தல் இவற்றிலிருந்து விடுதலை அடைந்தேன் என்று கூறுவது மேலான சாட்சியே அல்ல. காரணம், இயல்பிலேயே இந்தப் பழக்கவழக்கங்கள் எதுவும் இல்லாத பலர் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். மட்டுமல்ல, இவற்றைச் சரியான மருத்துவ சிகிர்சை மூலமும், ஆற்றுப்படுத்தல் (Counselling) மூலமும் நிறுத்திவிடமுடியும். மெய்யான மாற்றம் என்பது நமது உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றமே; நமது தனிப்பட்டக் குணங்களில் ஏற்படும் மாற்றமே. அதனைக் கிறிஸ்து இயேசு மூலம் மட்டுமே நாம் அடைந்திட முடியும்.
எனவே, நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு நமது விசுவாசத்தைக் குறித்து நாம் அளிக்கும் சாட்சிகள் வேத வசனத்தின் அடிப்படையில் இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக." ( கொலோசெயர் 4 : 6 ) என்று கூறுகின்றார்.
எனவே நாம் வேத வசனங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருக்கவேண்டியது அவசியம். அப்படி அறிந்து வைத்துக்கொண்டு நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல நாம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும்.
எனவே, நாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேவையில்லாத காரியங்களில் கவனம் செலுத்திடாமல் வேத வசனங்களை உணவுபோல உட்கொள்ள ஆயத்தமாய் இருக்கவேண்டும். இப்படி நாம் உட்கொள்ளும் வசனங்கள் நமக்கு மற்றவர்களுக்குப் பதில்சொல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். மட்டுமல்ல, தேவையில்லாத உப்புச் சப்பற்ற சாட்சிகள் போல இல்லாமல் இந்த வசனங்கள் மற்றவர்களது இருதயத்தில் இறங்கி கிரியை செய்யும். அவர்களும் மெய்யான தேவனை அறியச்செய்யும். காரணம், அவை உயிருள்ள தேவனது வார்த்தைகள்.
எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாம் வேதாகமத்தை வாசிக்கவேண்டியது அவசியம். அட்டவணைப் போட்டு இத்தனை நாட்களுக்குள் வேதாகமத்தை வாசித்து முடிக்கவேண்டுமென்று எண்ணாமல் நிதானமாகவும், தேவனை அறியும் ஆர்வமோடும் ஆவியானவரின் துணையோடும் வேதத்தைப் படித்து இருதயத்தில் வசனங்களைப் பாதுகாப்போம். நம்மிடம் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment