இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, July 19, 2024

கடைசிக்காலத்திலே.........

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,266      💚 ஜூலை 28, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே." ( யூதா 1 : 18, 19 )

கடைசிகாலத்தைப் பற்றிக் கூறும்போது இயேசு கிறிஸ்து போர்கள், பஞ்சம், கொள்ளை நோய்கள், கடல் சீற்றங்கள் போன்று பல்வேறு அடையாளங்களைக் கூறினார். மட்டுமல்ல, "அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்."  ( மத்தேயு 24 : 11 - 13 ) என்றும் எச்சரித்தார். 

"அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்" என்று இயேசு கிறிஸ்துக் கூறியதையே அப்போஸ்தலரான யூதாவும், "கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள்" என்று கூறுகின்றார். அதாவது, தேவனது சத்தியங்களைப் பரிகாசிக்கும் நூதன போதனைகளைப் போதிக்கும்  "தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர்" என்று கூறுகின்றார். 

இப்படிப் போதிப்பவர்கள், "பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே." என்கின்றார். இவர்கள் தங்கள் மனதின் தோன்றியபடி போதிக்கும் ஜென்ம சுபாவத்தார்கள், இவர்களிடமிருந்து செயல்படுவது பரிசுத்த ஆவியானவருமல்ல என்கின்றார். எனவே இவர்கள் எப்போதும் வேத வசனங்களுக்கு உலக ஆசீர்வாதத்தையே அர்த்தமாகக் கொண்டு உலக ஆசீர்வாதங்களையே போதிப்பவர்களாகவும் இருப்பார்கள். 

இறுதிக் காலம் என்பதற்கு அடையாளமாக இயேசு கிறிஸ்து கூறியபடி இன்று நூற்றுக்கு தொண்ணூறு சதம் உலக ஆசீர்வாதமே சபைகளிலும் பிரபல ஊழியர்களாலும் அவர்கள் நடத்தும் தொலைக்காட்சி வாயிலாகவும் கிறிஸ்தவ உபதேசமாகப் போதிக்கப்படுகின்றது. அன்பானவர்களே, ஆம், நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். தீர்க்கதரிசன ஊழியர்கள் பெருகி, தீர்க்கதரிசன மாநாடுகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  எனவே வஞ்சிக்கப்படாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

இன்றைய தியான வசனத்தை எழுதிய யூதா, தொடர்ந்து இவற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள என்ன செய்யவேண்டுமென்றும் தொடர்ந்து கூறுகின்றார். "நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1 : 21 )

நூதன பிரசங்கங்களையும் அப்படிப் போதிப்பவர்களையும் விட்டு விலகி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டியதே நாம் செய்யவேண்டியது.  "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்." ( சங்கீதம் 31 : 24 )  ஆம், "கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு." ( சங்கீதம் 27 : 14 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

No comments: