'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,251 💚 ஜூலை 13, 2024 💚 சனிக்கிழமை 💚
"மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்." ( மத்தேயு 10 : 32 )
இன்றைய தியான வசனம் நம் எல்லோரும் அடிக்கடி வாசித்துக் கேட்ட வசனமாகும். இந்த வசனம் அறிக்கைபண்ணுதல் எனும் வார்த்தையை வலியறுத்துகின்றது. பொதுவாக எல்லோரும் வாயினால் இயேசுவை விசுவசிக்கிறேன் என்று கூறுவதும் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்று கூறுவதும்தான் அறிக்கையிடுதல் என்று எண்ணிக்கொள்கின்றனர். சிலர் இதனை எல்லோரும் அறிய மக்கள் முன்னால் கூறுவது என எண்ணிக்கொள்கின்றனர்.
ஆனால், அறிக்கைபண்ணுதல் என்பது நமது வாழ்க்கையால் நாம் கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ்வதைக் குறிக்கின்றது. காரணம், இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்று கூறும் பலரும், போதிக்கும் பலரும் வாழ்க்கையில் சாட்சியற்ற வாழ்க்கை வாழும்போது கிறிஸ்துவை அவமதிக்கின்றோம். குறிப்பாக கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலரது செயல்கள் கிறிஸ்துவை அறியாத மற்ற மக்களிடம் கிறிஸ்தவத்தைக் குறித்துத் தவறான ஒரு கண்ணோட்டத்தையே கொடுக்கின்றது.
மனுஷர் முன்பாக கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற சாட்சி வாழ்க்கை வாழும்போது அவர்களைக்குறித்து நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன் என்கின்றார் கிறிஸ்து. அதாவது, வாழ்க்கையால் நாம் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவர்களாக வாழவேண்டியது அவசியம்.
ஒரு மிகப்பெரிய வேலைக்கு நாம் விண்ணப்பித்து நேர்காணுதலுக்காக நிற்கும்போது அங்கு அந்த கம்பெனி இயக்குனருக்கு அருகில் அவருக்கு அடுத்த நிலையிலிருக்கும் நமது ஊரைச்சார்ந்த ஒருவர் நின்றுகொண்டு, "ஐயா, இவரை எனக்கு நன்கு தெரியும். நல்ல மனிதர், திறமையாளர், இந்த வேலைக்குப் பொருத்தமானவர், இவருக்கு இந்த வேலையைக் கொடுக்கலாம்" என்று நமக்காக பரிந்து பேசுவாரானால் அது நம்மைக்குறித்து அவர் அறிக்கையிடுதலாகும்.
நாம் மேலே பார்த்த உதாரணத்தில் நம்மைப் பரிந்துரைசெய்த அந்த நபர் அவரை நாம் ஊரில் மற்றவர்கள்முன் புகழ்ந்து பேசியதால் நம்மைப் பரிந்துரை செய்யவில்லை. மாறாக, நமது செயல்பாடுகளை அவர் அறிந்திருந்தாலும் நமது தனிப்பட்ட குணங்களை அறிந்திருந்தாலும் நமக்காகப் பரிந்து பேசினார்.
இதுபோலவே நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு முன்பாக நம்மைக்குறித்து அறிக்கையிடுவேன் என்கின்றார். அன்பானவர்களே, இதனால்தான் நாம் தேவனுக்குகேற்ற சாட்சி வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இன்றைய தியான வசனத்தைத்த தொடர்ந்து இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்." ( மத்தேயு 10 : 33 )
அதாவது சாட்சியற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் பிதாவின்முன்னால் நிற்கும்போது அவர், "ஐயோ, இவரை எனக்குத் தெரியவே தெரியாது" என்பார்.
"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 26, 27 )
கிறிஸ்துவால் நம்மைக்குறித்து நல்ல அறிக்கைபண்ணக்கூடிய வாழ்க்கை வாழ முயலுவோம்; அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment