✉'ஆதவன்' ஆகஸ்ட் 06, 2024. செவ்வாய்க்கிழமை 💚வேதாகமத் தியானம் - எண்:- 1,275
"ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? உன் அக்கிரமத்தைப் போக்க உன் முதற் பேறானவனையும், உன் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க உன் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?" ( மீகா 6 : 7 )
கடவுளது ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு மனிதர்கள் எந்தக் குறுக்கு வழியையும் பின்பற்றத் தயங்கமாட்டார்கள். ஆனால் எளிதான நேர்வழியை மனிதர்கள் புறக்கணிக்கின்றனர்.
இன்றும் தமிழகத்தின் சில கோவில்களில் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான மிருகங்கள் மக்களால் பலியிடப்படுவதை நாம் செய்தித்தாள்களில் படிக்கின்றோம். பல ஆயிரம் கிலோ நெய் அபிஷேகம் செய்ய விக்கிரகங்களின்மேல் ஊற்றப்படுகின்றன. எப்படியாவது கடவுளின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுவிடவேண்டுமென்று மனிதர்கள் விரும்புவதால் இப்படிச் செய்கின்றனர்.
கடவுளது ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு, ஜோதிடர் சொன்னார் என்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது தலைப்பிள்ளையைப் பலிகொடுத்தச் செய்தி சில மாதங்களுக்குமுன் பத்திரிக்கையில் வெளிவந்ததை பலரும் படித்திருக்கலாம்.
தேவனது ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு மனிதர்கள் இக்காலத்தில் செய்வதுபோலவே பல ஆயிரம் ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். இத்தகைய மனிதர்களைப் பார்த்துதான் தேவன் "ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? உன் அக்கிரமத்தைப் போக்க உன் முதற் பேறானவனையும், உன் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க உன் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?" என்று இன்றைய தியான வசனத்தில் கேள்வி எழுப்புகின்றார்.
பின் என்னதான் செய்யவேண்டும் என்பதனை அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.' ( மீகா 6 : 8 )
ஆம் அன்பானவர்களே, தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆடு, மாடு, பணம், தங்கம், வெள்ளி, செல்வம் பிள்ளைகளின் இரத்தம் இவைகளையல்ல, மாறாக அவரது கற்பனைகளின்படி வாழ்வதையே. நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.
பணத்தையும் வெள்ளியையும் பொன்னையும் கோவிலில் கொண்டு கொட்டிவிட்டு மீண்டும் மீண்டும் அநியாயம் செய்யும் வஞ்சக உள்ளத்தைத் தேவன் வெறுக்கின்றார்; அருவெறுக்கின்றார். அறிவோடு சிந்திப்போம்; நம்மைத் திருத்திக்கொள்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment