Saturday, July 27, 2024

தன்னைத்தானே வஞ்சிக்கிறவர்கள்.

 ✉'ஆதவன்' ஆகஸ்ட் 04, 2024. ஞாயிற்றுக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,273                             

"ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்." ( கலாத்தியர் 6 : 3 )

மனிதர்கள் நாம் பெரும்பாலும் நம்மைக்குறித்து சில மேன்மையான எண்ணங்களை வைத்திருக்கின்றோம். அப்படிச் சில எண்ணங்கள் நமக்கு இருப்பது தவறல்ல. ஆனால் சிலர் எதனைப்பற்றியும் எந்த அறிவும் இல்லாதிருந்தாலும் எல்லாம் தெரிந்ததுபோல பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சிலர் இப்படியே இருக்கின்றனர். எந்த ஆவிக்குரிய அனுபவமோ, தகுதியோ இல்லாதிருந்தும் எல்லாம் தெரிந்ததுபோல பேசுவார்கள், மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள். ஆனால் இப்படி இவர்கள் கூறும் அறிவுரைகள் அர்த்தமற்றதாகவே இருக்கும். ஆனால் இவர்கள் தங்களை பெரிய ஆவிக்குரிய மனிதர்களாக எண்ணிக்கொள்வர். 

ஒருமுறை நான் உடல்நலமில்லாமல் சில மாதங்கள் இருந்தபோது என்னைப் பார்க்கவந்த பலர் இதுபோலவே எனக்கு அறிவுரை கூறினர். சிலர், "நாலுமாவடிக்கு வருவேனென்று நேர்ந்துகொள்ளுங்கள், கர்த்தர் சுகம் தருவார்" என்றனர். வேறு சிலரோ, ஒருமுறை சாலக்குடி தியானத்துக்குச் சென்று வாருங்கள்" என்றனர். இன்னும் சிலர், "வேளாங்கண்ணிக்கு நேர்ச்சை செய்துகொள்ளுங்கள்" என்றனர். வேறு சிலரோ, "91ஆம் சங்கீதத்தை தினமும் மூன்றுவேளை வாசியுங்கள்" என்றனர். அதாவது,  இவர்கள் ஆவிக்குரிய மேலான அனுபவமோ தேவனது உடனிருப்பு அனுபவமோ இல்லாமல் இருந்தும் அவை தங்களுக்கு இருப்பதாக எண்ணித் தங்களையே வஞ்சித்துக்கொண்டவர்கள். 

இத்தனைக்கும் இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு நற்செய்தி குழுவில் உறுப்பினராக இருந்து நோயாளிகளுக்காக ஜெபிக்கச் செல்பவர்கள். இவர்களில் ஒருவர்கூட வேதாகம அடிப்படையில் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை;  ஒருவர்கூட என்னிடம், "நோயெல்லாம் வாழ்வில் சகஜம், ஆண்டவரிடமுள்ள விசுவாசத்தைமட்டும் விட்டுவிடாமல் இருங்கள்" என்று கூறவில்லை. இவர்கள் தாங்கள் ஜெபித்ததால் சுகம் பெற்றவர்களது சாட்சிகளைக் கூறித் தங்களையே பெருமையும் படுத்திக்கொண்டனர். ஆனால் நானே நோயுற்றிருக்கும்போது அந்த வேளையில் இவர்களுக்குப் பதில்சொல்ல முடியவில்லை. 

இத்தகையோருக்கே இன்றைய தியான வசனத்தை அப்போஸ்தலரான பவுல் எழுதியுள்ளார். எனவேதான் அடுத்த வசனத்தில் தொடர்ந்து எழுதுகின்றார், "அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்." ( கலாத்தியர் 6 : 4 ) அதாவது இப்படி மற்றவர்களுக்கு ஆவிக்குரிய அறிவுரைகள் கூறுமுன்பு தங்களது சுய தேவஐக்கியத்தைச் சோதித்துப்பார்த்துவிட்டு அறிவுரை கூறவேண்டும். அதுவே அவர்களுக்கு உண்மையான மேன்மை.  

ஆம் அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய செயல்பாடுகளை நாம் நமக்குள் சோதித்துப்பார்க்க வேண்டியது அவசியம். அப்படி இல்லாமல் வேதாகமத்தை வாசிப்பதாலோ, ஜெபிப்பதாலோ நாம் ஆவிக்குரியவர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாகவே இருப்போம். உண்மையாகவே நாம் தேவனோடு இருப்போமானால் அது மட்டுமே நமக்கு மேன்மை.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

No comments: