'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,246 💚 ஜூலை 08, 2024 💚 திங்கள்கிழமை 💚
"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ( ரோமர் 12 : 2 )
"இந்த உலகத்துக்கு ஒத்த வேடம் அணியாமல் இருங்கள்" என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. அதாவது உலக மக்கள் எல்லோரும் எப்படி நடக்கின்றார்களோ அதுபோலவே நீங்களும் நடக்காமலிருங்கள் என்று கூறுகின்றது. நடப்பது என்பது காலினால் நடப்பதையல்ல, மாறாக நமது செயல்பாடுகளைக் குறிக்கின்றது.
உதாரணமாக, ஒரு காரியம் நடைபெற சக மனிதர்கள் குறுக்குவழிகளான லஞ்சம், ஏமாற்று, பொய், பித்தலாட்டம் போன்ற காரியங்களில் ஈடுபடுவதுபோல ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் ஈடுபடக்கூடாது என்று கூறுகின்றது. இதனை இந்த வசனம் ஏன் வேஷம் என்று கூறுகின்றது? அதாவது ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு ஆவிக்குரிய ஆராதனைகளில் பங்கெடுத்து தங்களை மேலான ஆவிக்குரிய அனுபவம் உள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு இப்படிக் குறுக்கு வழியிலும் முயல்வதால் வேஷம் என்று கூறுகின்றது.
இப்படி வேஷம் போடாமல், "தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு காரியம் நமக்கு விரும்பியும் நடைபெறவில்லையானால், தேவ சித்தம் அது என்று நாம் பகுத்தறியும் அறிவு நமக்கு வேண்டும். மற்றவர்களைப்போல் தேவ சித்தமறியாமல் குறுக்கு வழிகளில் முயலக்கூடாது என்று பொருள்.
இதற்கு நாம் என்னச் செய்யவேண்டும் என்பதனை இதே அதிகாரத்தில் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார். "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) அதாவது, தேவன்மேலுள்ள நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இருந்து, பொறுமையுடன் ஜெபத்தில் காத்திருக்கவேண்டும் என்கின்றார்.
இந்த உண்மையை தாவீது ராஜாவும் உணர்ந்திருந்தார். இப்படி வேஷம் போடும் மனிதர்களையும் அவர் பார்த்திருந்தார். எனவே அவர் கூறுகின்றார், "வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்." ( சங்கீதம் 39 : 6 ) அதாவது, மனிதன் இந்த வேஷம் போடக்காரணம் சொத்து சுகங்களைச் சேர்ப்பதற்குத்தான். ஆனால், இப்படிச் சேர்க்கும் சொத்துச் சுகங்களை பலவேளைகளில் அவனும் அனுபவிப்பதில்லை அவற்றை யார் அனுபவிக்கின்றார்கள் என்பதனையும் அவர்கள் அறிவதில்லை.
எனவே அன்பானவர்களே, நாம் நமது வாழ்வில் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நமது மனதைப் புதிதாக்கி மறுரூபமாவோம். மேலும், இப்படி நாம் வேடம் போடுவது கிறிஸ்துவை அவமதிப்பதாகும் என்பதனையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். காரணம், நமது ஆவிக்குரிய பக்தி காரியங்களை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது; நமது வேடமிடுதலையும் பார்க்கின்றது. எனவே இப்படி நாம் வேடமிடுவது கிறிஸ்துவுக்கு நாம் நமது நடக்கையால் செய்யும் அவமானமாகும்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment