Monday, July 29, 2024

கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ?

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 05, 2024. 💚திங்கள்கிழமை 💚  வேதாகமத் தியானம் - எண்:- 1,274                               

      

"கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்." ( எண்ணாகமம் 11 : 23 )


நாம் பல வேளைகளில் நமது பலம், தகுதி இவைகளைக்கொண்டே தேவனது பலத்தையும் வல்லமையையும் அளவிட்டுக் கொண்டிருக்கின்றோம். நாம் மனிதர்கள் ஆதலால் நாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆனால் பெரும்பாலும் நாம் இதனை உணராமல் "என்னால் எல்லாம் கூடும்" என்று கூறிக்கொண்டு செயல்படுகின்றோம். ஆனால் அதே வேளையில் நம்மில் பலரும் தேவனது வல்லமையைக் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். 

செங்கடலைப்  பிரித்து இஸ்ரவேலரை கால் நனையாமல் அதனைக் கடக்கச் செய்தவர் கர்த்தர். எரிகோவின் மதில் சுவர் துதியினால் இடிந்து வீழ்ந்தது,  கற்பாறையிலிருந்து தண்ணீர், வானத்திலிருந்து மன்னா என இஸ்ரவேலர் தொடர்ந்து தேவ வல்லமையினை அனுபவித்து வந்தனர். இப்போது இறைச்சி உண்ண ஆசைப்பட்டு மோசேயிடம் முறுமுறுத்தனர். அவர்களது முறுமுறுப்பிற்கு தேவன் பதிலளித்தார். ஒருநாள் இரண்டுநாளல்ல, ஒருமாதம் முழுவதும் நீங்கள் இறைச்சியை உண்பீர்கள் என்றார் தேவன்.

"அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே." ( எண்ணாகமம் 11 : 21 ) என்று சந்தேகித்தார். அப்போது கர்த்தர், "கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்." 

இயேசு கிறிஸ்துவும்கூட சீடர்களிடம், "மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்." ( மாற்கு 10 : 27 ) ஆம் அன்பானவர்களே, தேவனால் எல்லாம் கூடும். தண்ணீரை இனிமையான திராட்சை இரசமாக்குவதும், கல்லறையில் புதைக்கப்பட்ட மனிதனை இறந்து நான்கு நாட்களுக்குப்பின் உயிருடன் எழுப்புவதும், ஒரு வார்த்தையால் இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதும் தேவனால் கூடும். 

நாம் நமது பலத்தைக் கொண்டு தேவனையும் எடைபோட்டுவிடக்கூடாது. "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." (சகரியா 4:6)

இந்த வல்லமை அவருக்கு இல்லாதிருந்தால் நாம் அவரை வழிபடவோ, அவரிடம் நமது தேவைகளை எடுத்துச் சொல்லவோ தேவையே இருக்காது. நமது சுய பலத்தாலேயே வாழ்ந்துகொண்டிருபோம்.  தேவன் தனது கிருபையால் நாம் கேட்காமலேயே பல நல்ல காரியங்களை நமக்குச் செய்துகொண்டிருக்கின்றார். இதனாலேயே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தொடர்ந்து தங்கள் நம்பிக்கையில் நிலைத்து நிற்கின்றனர். ஆனால், பல நாத்தீகவாதிகள் இறுதியில் பரிதாபகரமான அவநம்பிக்கையில் நிம்மதியின்றி மரித்தனர். 

இப்படி வல்லமையான தேனை நாம் தகப்பனாகப் பெற்றுள்ளதால் திட நம்பிக்கையோடு வாழ்வோம். ஆனால் அப்படித் தேவன் செயல்பட நம்மிடமுள்ள பாவங்களையும் அக்கிரமங்களையும் முதலில் அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். ஏனெனில், "இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." ( ஏசாயா 59 : 1, 2 ) என்று நமக்கு அறிவுறுத்துகின்றது வேதாகமம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: