Friday, June 30, 2023

கர்த்தரை முன்னிறுத்திச் செயல்படுதல்

ஆதவன் 🔥 887🌻 ஜூலை 03, 2023 திங்கள்கிழமை


"அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளேன். " ( ஆதியாகமம் 14 : 22 ) என்றான். 

சோதோமின் ராஜாவும் அவனோடு வேறு சில ராஜாக்களும் சேர்ந்து ஆபிராமின் (ஆபிரகாம்) சகோதரனது மகனாகிய  லோத்துவையும் அவனது உடைமைகளையும் கைபற்றிச் சென்றுவிட்டனர். ஆபிராம் அதனைக் கேள்விப்பட்டபோது தனது ஆட்களுடன் சென்று போரிட்டு எதிரி ராஜாக்களை வென்று லோத்துவையும் அவனது சொத்துக்களையும் மீட்டுக்கொண்டார். எதிரி நாட்டு ராஜாவின் சொத்துக்களையும் அந்நாட்டின் மக்களையும் சிறைபிடித்துக்கொண்டார்.

அப்போது சோதோமின் ராஜா ஆபிராமிடம், எங்களிடமிருந்து நீர் கைப்பற்றிய பொருட்களை வேண்டுமானால் வைத்துக்கொள்ளும் ஆனால் நீர் கைதுசெய்துள்ள எங்களது நாட்டு மக்களை திருப்பித் தந்துவிடும் என்று கேட்கிறான்.  

இந்தச் சூழ்நிலையில் ஆபிராம் கர்த்தரை முன்னிறுத்திப் பார்க்கின்றார்.  சோதோமின் ராஜா கூறுவதுபோல கைப்பற்றிய பொருட்களை வைத்துக்கொண்டால் ஒருவேளை பிற்காலத்தில் , " நான்தான் ஆபிராமைச் செல்வந்தனாக்கினேன்; அவனிடமுள்ளவையெல்லாம் எனது சொத்துக்களே " என்று சோதோமின் ராஜா கூறுவான். அப்படிக் கூறுவது கர்த்தரை அவமதிப்பதுபோலாகிவிடும். ஏனெனில் கர்த்தர், "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்." ( ஆதியாகமம் 12 : 2 ) என்று ஆபிரகாமுக்கு ஏற்கெனவே ஆசீர்வாதத்தைக் வாக்களித்திருந்தார்.  

எனவே, "ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்." என்று அந்தச் சொத்துக்களை ஆபிராம் மறுத்துவிட்டார். 

அன்பானவர்களே, இன்று நாங்கள் ஆவிக்குரிய மக்கள் என்றும் ஆவிக்குரிய ஆராதனை செய்கின்றோம் என்றும்  கூறிக்கொள்ளும் பலர், அரசாங்க பதவியில் இருந்துகொண்டு கைக்கூலி, லஞ்சம், ஏமாற்று வழிகளில் பொருள்சேர்த்து பின்னர் , "கர்த்தர் எங்களை ஆசீர்வதித்துள்ளார்" எனச் சாட்சியும் கூறுகின்றனர்.   லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளின்போது இவர்கள் சிக்கிக்கொள்கின்றனர். இது கிறிஸ்துவை அவமானப்படுத்துவதல்லவா? 

ஆபிரகாமின் வாழ்வில் பல விசுவாச அறிக்கைகளும் செயல்களும் இருந்தன. இதனாலேயே ஆபிரகாமை நாம் விசுவாசத்தின் தந்தை என்கின்றோம். அவரது வாழ்வு நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. ஆம் அன்பானவர்களே, ஆபிரகாமைப்போல உண்மையான ஒரு வாழ்வு வாழ்வோம். குறுக்கு வழியில் முயலாமல், கர்த்தர் நம்மை உயர்த்தும்படி அவரது பலத்தக் கரங்களுக்குள் அடங்கி இருப்போம். அப்போதுதான் நமது வாழ்வு ஒரு சாட்சியுள்ள வாழ்வாக இருக்கும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                

Thursday, June 29, 2023

தடைகளை நீக்கிப்போடுகிறவர்

ஆதவன் 🔥 886🌻 ஜூலை 02, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." ( மீகா 2 : 13 )


இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் நமது தேவனுக்கு "தடைகளை நீக்கிப்போடுகிறவர்" எனும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் அவர் நீக்கிப்போட வல்லவராய் இருக்கிறார். 

இஸ்ரவேல் மக்களை மோசே எகிப்திலிருந்து விடுவிக்க பார்வோன் பல முறை தடை செய்தான். அவனது கரத்திலிருந்து அவர்களை விடுவித்து கர்த்தர் வழி நடத்தினார். கானானை நோக்கிய அவர்களது பயணத்தில் முதலில் வந்தத் தடை செங்கடல். ஆனால் அதனைக் கால் நனையாமல் அவர்களை தேவன் கடைக்கச் செய்தார். தடையாய் நின்ற எரிகோவின் மதில்கள் துதியினால் இடிந்து விழுந்தன. அவர்களுக்கு எதிர்த்துவந்த வல்லமைமிக்க பல அரசர்கள் அழிந்துபோயினர். ஆம், நமது தேவன் தடைகளை நீக்கிப்போடுகிறவர்.  

அப்போஸ்தலர்களது வாழ்விலும் தேவன் இப்படித் தடைகளை நீக்கிப்போடுவதைப்  பார்க்கின்றோம். பேதுருவை சிறைச்சாலை அடைத்துவைக்க முடியவில்லை. பவுலையும் சீலாவையம் சிறைச்சாலையின் தொழுமரம்  தொடர்ந்து கட்டிவைக்க முடியவில்லை. அப்போஸ்தலர்களின் ஊழியத்தில் வந்த பல்வேறு இடர்கள்,  தடைகளை நீக்கிப்போடும் கர்த்தரால் தகர்ந்தன. அதே கர்த்தர் மாறாதவராக இன்றும் இருக்கிறார்.

அன்பானவர்களே, நமது வாழ்வில் வரும் துன்பங்கள், பிரச்சனைகள் இவைகளைக்கண்டு நாம் தயங்கி ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியடைந்திடக் கூடாது. நமது தேவன் வல்லமைமிக்கப் பராக்கிரமசாலியாக நம்மோடு இருக்கிறார். நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் தகர்த்துப்போட வல்லவர் அவர். 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது, தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் என்று. நமக்குமுன் கர்த்தர் செல்கிறார் எனும் விசுவாசத்தோடு பயணத்தைக் தொடர்வோம்.

நமது தேவன் தனது பிள்ளைகளாகிய நம்மை ஒரு ராஜாபோல நடத்துகின்றார். நமது நாட்டின் பிரதமரோ, முதல்வரோ வருகிறார்களென்றால் முதலில் அவர்கள் வரும் சாலைகளிலுள்ள குண்டு குழிகள், தடைகள் அகற்றப்பட்டு அவர்கள் பயணம் செய்ய லெகுவாக்கப்படும். நமது கர்த்தர் நம்மை ராஜாபோல நடத்துவதால் நமக்குமுன் சென்று நமது பயணப் பாதையிலுள்ள தடைகளைச் சரிசெய்து நமக்குமுன் ஒரு பாதுகாவலர்போல நடந்து செல்கிறார். இதுவே கிறிஸ்துவின் அன்பு. 

எனவே அன்பானவர்களே, நாம் எதனையும் கண்டு பயப்படத் தேவையில்லை. நமது  ராஜா நமக்கு  முன்பாகப் போகிறார். அந்த விசுவாசத்தோடு அவரைப் பின்தொடர்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                         

Wednesday, June 28, 2023

பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்

ஆதவன் 🔥 885🌻 ஜூலை 01, 2023 சனிக்கிழமை

"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 )

அன்பானவர்களே, மனிதர்களால் பிடிக்கப்பட்டுக் கட்டி வைக்கப்பட்டிருக்கும்  யானைக்குத் தனது பலம் தெரியாது என்பார்கள்.  எனவே அது தன்னைவிட பலமடங்கு பலம் குறைந்த பாகனுக்குக் கீழ்ப்படிந்து அவன் சொல்படி கேட்கின்றது. தன்னைக் கட்டி வைத்திருக்கும் சிறிய சங்கிலியை அதன் பலத்தால் அறுத்துவிட அதனால் முடியும். ஆனால் அது அப்படிச் செய்வதில்லை. காரணம் தனது  சுய பலம் அதற்குத் தெரியாது. 

இதுபோலவே பலவேளைகளில் ஆவிக்குரிய நாமும் இருக்கின்றோம். நம்மோடு கர்த்தர் இருப்பதும் அவரால் நம்மை விடுவிக்கவும், எந்தச் சூழ்நிலையினையும் நாம் கடந்துவரச் செய்யவும்  முடியும் என்பதையும்  பல வேளைகளில் நாம் உணருவதில்லை.  எனவே நாம் சலித்துக்கொள்கின்றோம். "என்ன ஆண்டவர்........நம்ம  தலையில ஆண்டவன் இப்படி எழுதிவிட்டான்; அநுபவிச்சுதான் தீரணும்..." என எண்ணிக்கொள்கின்றோம். 

இதுபோலவே கிதியோனும் இருந்தான்.  கர்த்தருடைய தூதன் பராக்கிரமசாலியே என்று கூறியதும் கிதியோன், "ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 13 )

அதனால் ஆண்டவர் அவனைத் திடப்படுத்தினார். "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) ஆம் அன்பானவர்களே, நாம் மிகப்பெரிய தீர்க்கதரிசியாகவோ, வல்லமைமிக்க ஊழியனாகவோ, புகழ்பெற்றவராகவோ இருக்கவேண்டியது அவசியமில்லை. நமக்கு இருக்கின்ற ஆவிக்குரிய  பலம் போதும். காரணம் நம் ஒவ்வொருவரது நிலையினையும் தேவன் அறிவார்; நமக்கு உதவுவார்.

ஆனால் அதற்கு, முதலில் நமக்குக்   கிதியோனைப்போல ஒரு தாழ்மையான இருதயம் தேவை. கிதியோனது தாழ்மையான உள்ளத்தை தேவன் அறிந்திருந்ததால்தான் அவனோடு இருந்தார். "தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார்" என்று வேதம் கூறவில்லையா? கிதியோனின் இந்த தாழ்ந்த இருதயம் அவனது பதிலில் தெரிகின்றது.  "அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 15 ) எனது குடும்பமும் நானும் மிக எளிமையானவர்கள் என்று தன்னைத் தாழ்த்துகின்றான் கிதியோன். 

"அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறியடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 )

இப்படியே அப்போஸ்தலரான பவுல் அடிகள் கிறிஸ்துவோடுள்ள நெருக்கத்தினால் நம்பிக்கைகொண்டு விசுவாசத்தோடு கூறுகின்றார்,  "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு."( பிலிப்பியர் 4 : 13 )

ஆம் அன்பானவர்களே, கிதியோனைப்போல ஒரு தாழ்மையான உள்ளமும் அப்போஸ்தலரான பவுலைப்போல ஒரு விசுவாசமுள்ளத் தூய்மையான வாழ்வும் நமக்கு மிகமிகத்தேவை. அப்படி இருப்போமானால் கிதியோனிடமிருந்தும் பவுலிடமிருந்தும் அவர்களைப் பலப்படுத்தியதுபோல நம்மையும் பலப்படுத்திப் பயன்படுத்துவார். கர்த்தர் நம்மைப்பார்த்தும், "பராக்கிரமசாலியே நான் உன்னோடே இருக்கிறேன்"  என்பார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                               

வேதாகம முத்துக்கள் - ஜூன் 2023

       - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


ஆதவன் 🌞 855🌻 ஜூன் 01, 2023  வியாழக்கிழமை            

"நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 18 : 10 )

ஒரு உலக அரசாங்கம் ஒருவரைப் பதவியில் வைத்துள்ளது என்றால் அந்தப் பணியாளருக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் சந்திப்பது மட்டுமல்ல, அவர்களது பாதுகாப்புக்கும்  அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.  பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவர்கள்,  வருவாய்த்துறை அதிகாரிகள், நீதிபதிகள், போன்றோருக்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிப்பதை நீங்கள்  பார்த்திருக்கலாம். இந்த பாதுகாப்பு அவர்கள் தங்கள் பணியைத் தடையில்லாமல் செய்ய உதவுகின்றது.   

இதுபோலவே தேவன் தனது பிள்ளைகள் உலகத்தில் தங்கள் பணிகளைச் செய்யவும் பாவமில்லாத வாழ்க்கைவாழவும் வேண்டிய உதவிகளைச் செய்கின்றார். பவுல் அப்போஸ்தலர் ஊழியத்தில் பயமில்லாமல் தொடர்ந்திட தேவன் அவரைத் திடப்படுத்துகின்றார். பவுலே , "நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.")

ஊழியம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல கர்த்தருடைய பிள்ளைகள் அனைவருக்குமே கர்த்தர் இப்படிக்  கூடவே இருந்து பாதுகாப்பளிக்கின்றார்; உதவுகின்றார். கர்த்தர் இப்படி நம்மோடு இருந்துச்செய்யும் காரியம் சிலவேளைகளில் நாமே கண்டு வியக்கத்தக்கதாகவும் நமக்கு எதிராக செயல்படுபவர்களுக்குப் பார்க்கவே பயங்கரமானதாகவும் இருக்கும்.  மோசே அற்பமான மனிதனாகவே காணப்பட்டார். அவரைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு பெரியதாகத் தெரியவில்லை. எனவேதான் சொந்த இஸ்ரவேலரே அவருக்கு எதிராக செயல்பட முயன்றனர். ஆனால் மோசேக்கு தேவன் வாக்களித்திருந்தார். "உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்." ( யாத்திராகமம் 34 : 10 ) என்று. 

அப்படியே எகிப்தியரும் அவருக்கு எதிராக முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களும் கண்டு பயப்படத்தக்கக் காரியங்களை தேவன் மோசே மூலம் செய்தார்.  

இதுபோல மோசேக்குப்பின் யோசுவாவுக்கு தேவன் வாக்களித்தார். "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 ) அப்படியே கைவிடாமலிருந்து காப்பாற்றினார். இந்த யோசுவா மூலமே இஸ்ரவேல் கோத்திரங்கள் கானான் தேசத்தில் தங்கள் தங்கள் உடைமைகளைப் பெற்றார்கள்.

அன்பானவர்களே, எனவே நாம் சூழ்நிலைகளைப்  பார்த்துக் கலங்கிடாமல் கர்த்தர்மேல் விசுவாசம்கொண்டு வாழ்வோம்.  பவுலுக்கு வாக்களித்து நடத்தியவர்,  மோசேயுடனிருந்து பயங்கரமான காரியங்களைச்  செய்தவர், யோசுவாவை எவரும் எதிர்க்கமுடியாதவாறு பலப்படுத்தியவர் நம்மோடும் இருக்கின்றார்.  தேவன் ஆள் பார்த்துச் செயல்படுபவரல்ல. எனவே அவர் மேல் விசுவாசம்கொண்டு வாழும் நம்மையும் அதுபோல காத்து, பலப்படுத்தி நடத்திடுவார். 

ஆதவன் 🔥 856🌻 ஜூன் 02, 2023  வெள்ளிக்கிழமை          
  
".....................சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 : 22 )

மெய்யான சுவிசேஷ அறிவிப்பு என்பது கிறிஸ்துவை முன்னிறுத்தி பிரசங்கிப்பதும், அவரைப்போல வாழ நாம் தகுதியாகவேண்டுமென்று விருப்பி சத்தியத்தைச் சொல்வதுமாகும். இயேசு கிறிஸ்துவிடம் வந்துவிட்டால் உடனேயே கார், பங்களா, மாடமாளிகை,  பொருளாதார செழிப்பு இவையெல்லாம் கிடைக்கும் என்று பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சகமாகும். உபத்திரவமில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கை இல்லை. கிறிஸ்து நமக்கு உலகம் கொடுக்க முடியாத சமாதானத்தை வாக்களித்தார்.அந்த சமாதானத்தைப் பெற்று மகிழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. அந்த சமாதானத்திற்கு பணமோ செல்வ செழிப்போ காரணமாயிருக்க முடியாது. 

"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16 : 33 ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்றுதான் இயேசு கிறிஸ்து கூறினார்.

இதனையே அப்போஸ்தலர்களும் பவுலும் இங்குக் கூறுகின்றார்கள் . "லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள். " ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 : 21, 22 ) என்று வாசிக்கின்றோம். புதிதாக கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடம் அப்போஸ்தலரான பவுலும் சீடர்களும் இப்படிப் போதித்தார்கள். அவர்கள் செழிப்பையோ உலக ஆசீர்வாதங்களையோ போதிக்கவில்லை. 

இன்று இப்படி புதிய கிறிஸ்தவர்களைப் பயமுறுத்தவேண்டுமென்று நான் கூறவில்லை, மாறாக, தவறான உபதேசம் கூடாது என்றுதான் வலியுறுத்துகிறேன்.  உலக ஆசீர்வாதத்துக்கும் கிறிஸ்து இயேசு அளிக்கும் இரட்சிப்பு அனுபவத்துக்கும் சம்பந்தமில்லை. உண்மையான மீட்பு அனுபவம் பெற்றவனது  எண்ணம் கிறிஸ்துவைப்பற்றியே இருக்கும். 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் தெளிவாகக் கூறுகின்றது, அவர்கள்  சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள் என்று. அதாவது எந்த இக்கட்டு, பிரச்சனைகள், பாடுகள் வந்தாலும் விசுவாசத்தில் நாம் நிலைத்திருக்கவேண்டுமென்று அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். 

நமது சபைகளுக்கு அதிக மக்கள் வரவேண்டுமென்பதற்காக ஆசீர்வாதங்களையே கூறிக்கொண்டு விசுவாசிகளை நரகத்தின் மக்களாக்கிவிடக் கூடாது. 

ஆம், நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த்தான்  தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்.  அந்த உபாத்திரவங்களைத் தங்கத்தக்கப் பலத்தை ஆவியானவர் தருவார்.  அவரே தொடர்ந்து நம்மை வழிநடத்தவும் செய்வார். அன்பானவர்களே, சோதனைகளை மேற்கொண்டு வாழும்போதுதான் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியதுபோல நாமும் உலகத்தை ஜெயிக்கமுடியம். 


ஆதவன்  🔥 857🌻 ஜூன் 03, 2023  சனிக்கிழமை

"கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்". சங்கீதம் 125 : 1 )

இந்தியாவின் வடஎல்லை இமய மலைத் தொடர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மலைகள் இயற்கை பாதுகாப்பு அரண்கள். எதிரிகளிடமிருந்து அவை நம்மைப் பாதுகாக்கின்றன. மேலும், பெரு வெள்ளமோ, புயலோ மலைகளை நகர்த்திட முடியாது. அவை உறுதியாக என்றென்றும் நிலைத்திருப்பவை. நமது நாட்டின் இமயமலையைப் போல இஸ்ரவேல் நாட்டில் சீயோன் மலை சிறப்புவாய்ந்த மலையாக  உள்ளது. இந்தமலை ஜெருசலேம் நகரைச் சுற்றி மதில்போல அமைந்துள்ளது. எனவேதான் அடுத்த வசனம் கூறுகிறது:-

"பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்." (  சங்கீதம் 125 : 2 )

கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார். இன்று  பிரபல அரசியல்வாதிகளும் தலைவர்களும் தங்களைப்  பாதுகாக்க கறுப்புப் பூனைப் படை வீரர்களை வைத்துள்ளனர். அதற்காகக் கோடிக்கணக்கானப் பணத்தையும் செலவழிக்கின்றனர். ஆனால் ஒருவனைக் கர்த்தர் பாதுகாக்காவிட்டால் எந்தப் பாதுகாப்பும் அவனைப் காக்க முடியாது. "கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலர் விழித்திருக்கிறது விருதா " (சங்கீதம் - 127:2). 

நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களது மரணம் எப்படி சம்பவித்தது தெரியுமா? தனது பாதுகாப்புக்காக அவர் வைத்திருந்த ஒரு ராணுவ வீரன்தான் அவரைச் சுட்டுக் கொன்றான்.  வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்பு வீரனே அவரைச் சுட்டுக் கொன்றான். ஆம் மனிதன் நம்பும் பாதுகாப்பு இப்படித்தான் விபரீத பாதுகாப்பாக இருக்கும்.

நமது தேவன் நம்முடைய தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர். நாம் வறுமையிலோ, நோயிலோ, அல்லது எதிரிகள் குறித்த பயத்தாலோ பாதிக்கப்பட்டிருக்கலாம்.  ஆனால் நமக்கு நிச்சயம் விடுதலை உண்டு. மனிதர்கள் நாம் செல்வந்தர்களையும் நல்ல வசதி படைத்தவர்களையும்தான் நமது நினைவில் வைத்திருப்போம்யாராவது நம்  வீட்டிற்கு அடிக்கடி பிச்சைக் கேட்டு வரும் பிச்சைக்காரரை நினைவில்வைத்துக் கொண்டிருப்போமாஅவர்கள் பிச்சைக் கேட்கும்போது கொடுத்துவிட்டு அப்படியே அவர்களை மறந்து விடுவோம்

ஆனால் தேவன் அப்படியல்ல. அவர் நமது எந்தவித தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர்நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. (  சங்கீதம் 136 : 23 ) என வேதம் கூறவில்லையாதேவன் நம்மை நினைப்பதால், அவரோடு நெருங்கிய தொடர்பில் நாம் இருப்போமானால் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்போம். எந்த விதப் பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள், வந்தாலும் நமது உள்ளம் கலங்காது , அசையாது.

சீயோன் மலையை இரண்டு விதமாக இன்றைய தியான சங்கீதம் வசனம்  குறிப்பிடுகின்றது. 

1. எருசலேமைச் சுற்றிலும் மலையானது பாதுகாப்பாக இருப்பதுபோல கர்த்தர் நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்;

2. கர்த்தரை நம்பி நாம் வாழும்போது மலை எந்தப் பேரிடருக்கும் அசையாமல் இருப்பதுபோல அசையாமல் இருப்போம்.   

கர்த்தரையே நம்புவோம்; அசையாமல் உறுதியுடன் பாதுகாப்பாக இருப்போம். 

ஆதவன் 🔥 858🌻 ஜூன் 04, 2023  ஞாயிற்றுக்கிழமை


"கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்". ( 2 கொரிந்தியர் 2 : 16 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியும் அறிவினை நல்ல வாசனைக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார் அப்போஸ்தலரான பவுல் அடிகள். இதனை இன்றைய வசனத்துக்கு இரண்டு வசனங்களுக்கு முன்பு குறிப்பிடுகின்றார். "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 ) என்று.

கிறிஸ்துவை பிரதிபலிக்கும்போது நாம் அவரது வாசனையை உலகிற்கு வீசுகின்றோம். இயேசு கிறிஸ்துவை பலர்  வெறுக்கக் காரணம் அவர்களது பாவ உணர்வு. இதனையே இயேசு கிறிஸ்து, பொல்லாங்கு செய்பவன் எவனும் ஒளியைப் பகைக்கின்றான்  என்று குறிப்பிட்டார்.  

"பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்."( யோவான் 3 : 20 ). பாவிகளது பாவ வாழ்க்கை வெளிச்சத்திடம் வரும்போது வெளியரங்கமாகிவிடும் எனவே அவர்கள் கிறிஸ்துவிடம் நெருங்கிவரத் தயங்குகின்றார்கள்.   அவரை அறியும் வாசனையை வெறுக்கிறார்கள். அது அவர்களுக்குத் துர்நாற்றமாகத் தெரிகின்றது.

இப்படி, "கெட்டுப்போகிறவர்களுக்கு மரணத்திற்கேதுவான மரணவாசனையாக" இருக்கிறார் கிறிஸ்து. "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை" என்று ஒரு தமிழ் பழமொழி உண்டு. ஆம், கழுதைபோல வாழ விரும்புகிறவர்களுக்கு ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாக கிறிஸ்து இருக்கிறார் என்று புரியாது. 

சாக்கடையில் புரண்டு மலத்தைத் தின்று வாழும் பன்றிக்கு அந்த துர்நாற்றம் நறுமணமாகத் தெரியும். அதுபோல உலக ஆசையிலும் பாவத்திலும் வாழ்பவர்களுக்கு அதுவே நறுமணமாகத் தெரியும். அவர்கள் மெய்யான நறுமணமான கிறிஸ்துவை அறியமாட்டார்கள்.

ஆனால் அதற்காக பாவத்தில் வாழும் மனிதர்களை உணர்வூட்டாமல் தேவ வசனத்தைப் பலரும் புரட்டிக் கலப்பாய் பேசுவதைப்போல நாங்கள் பேசுவதிலை என்கிறார் அப்போஸ்தலரான பவுல். "அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 17 ) என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ; அவர்களுக்கு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நாம் துர்நாற்றமாகத் தெரிந்தாலும் கவலைப்படாமல் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கலப்பில்லாமல் பேசுவோம் வாழ்வாக்குவோம். அப்போது, கெட்டுப்போகிறவர்களுக்கு மரணத்திற்கேதுவான மரணவாசனையாக இருந்தாலும்  இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு நாம்  ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாக இருப்போம்.


ஆதவன் 🔥 859🌻 ஜூன் 05, 2023  திங்கள்கிழமை

"அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 11 )

பொதுவாக இன்றைய நாட்களில் ஆலயங்களில் பிரசங்கத்தைக் கவனித்துக் கேட்பவர்கள் மிகக் குறைவு. கடமைக்காக ஆராதனையில் விசுவாசிகள் கலந்துகொள்கின்றனரேத் தவிர அங்கு சொல்லப்படும் பிரசங்கங்களைப்  பெரும்பாலும் கவனித்துக் கேட்பதில்லை. அதுபோலவே  பல போதகர்களும், குருக்களும் கடமைக்காக பிரசங்கம் என்று ஏதோ கூறி மக்களை வழிநடத்துகின்றனர். இதனால் பிரசங்கத்தை மக்களும் ஆர்வமாய்க் கேட்பதில்லை. அது மக்கள் தூங்குவதற்கான நேரமாக பல வேளைகளில் மாறிவிடுகின்றது.

வழிபாடுகளைவிட தேவனது வார்த்தைகள் முக்கியமானவை. தேவ வார்த்தைகள்தான் நம்மை வழிநடத்த முடியுமேத்தவிர வழிபாடுகளல்ல. ஆனால், இன்று யாரோ எழுதிய பிரசங்கக் குறிப்பேடுகளை வாங்கிவைத்து அதன் அடிப்படையில்தான் பலரும் பிரசங்கிக்கின்றனர். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி அவர்கொடுக்கும் செய்தியைப் பெற்று போதிப்பவனே தேவ செய்தியைக் கொடுக்க முடியும். ஆனால் இத்தகைய அனுபவமுள்ள ஊழியர்கள் இன்று மிகக் குறைவு.  

பேரேயா நகரத்து மக்களைப்பற்றி இன்றைய வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  பவுல் பிரசங்கித்ததை அந்த மக்கள் மன ஆசையுடன் கேட்டனர்; ஏற்றுக்கொண்டனர். மட்டுமல்ல, "காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பிரசங்கத்தைக் கேட்டு பிரசங்கம் செய்தவர் சொன்ன  கருத்துக்கள்  சரிதானா என்று தினம்தோறும் ஆராய்ந்து பார்த்தார்கள்.

இந்த குணம் நமக்கு இருக்கின்றதா என்று எண்ணிப்பார்ப்போம். பெரும்பாலும் மக்களிடம் இந்த குணம் இல்லாததால் இன்று பல ஊழியர்கள் வேதத்துக்கு முரணான போதனைகளைத் துணிந்து மக்களுக்குக் கொடுக்கின்றனர். "சொன்னவன் சொன்னான்; கேட்டவனுக்கு மதி எங்கே போனது?" என்பார்கள் பெரியவர்கள். அதுபோல பல கிறிஸ்தவர்களும் மதியற்றவர்களாக இருக்கின்றனர். அவர் ஏதாவது சொல்லிவிட்டுப் போகட்டும்,  நாம் தூங்குவோம் எனும் நிலைமையில் இருக்கின்றனர்.  

அன்பானவர்களே, "ஆதவன்" தினசரி தியானங்களில் நான் எழுதுவதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று நான் கூறுவதில்லை; எண்ணுவதுமில்லை. பேரேயா மக்களைப்போல நான் எழுதும் செய்திகள் வேதத்துக்கு ஏற்புடையதுதானா? என்று ஒப்பிட்டுப்பாருங்கள். நான் கூறுவது வேதாகமத்துக்கு முரணானதாக இருந்தால் எடுத்துக்கூறுங்கள் திருத்திக்கொள்வேன். 

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, இப்படி பேரேயா மக்கள் ஆராய்ந்து பார்த்ததனால் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். ஆம், வேத ஆராய்ச்சி நம்மை நற்குணசாலிகளாக மாற்றும். தவறான போதனைகள், தவறான ஊழியர்களை அடையாளம்காட்டும்.  

ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி வேண்டுமென்றால் நாம் நல்ல ஊழியர்களது செய்திகளைக் கேட்கவேண்டும்; வாசிக்கவேண்டும். அவர்கள் கூறுவதை கேட்பதுமட்டுமல்ல, அவை உண்மைதானா? சரியானதுதானா? என்று வேதத்தின் அடிப்படையில் சோதித்துப்பார்க்கவேண்டும். இப்படிச்செய்யும்போதுதான்  நாம் ஆவிக்குரிய குருட்டுத்தன்மை நீங்கி  தெளிவுள்ள உண்மையான நற்குணமுள்ள கிறிஸ்தவர்களாக வாழ முடியும்.    

ஆதவன் 🔥 860🌻 ஜூன் 06, 2023  செவ்வாய்க்கிழமை

"ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்."( நீதிமொழிகள் 29 : 26 )

மனிதர்கள் பெரும்பாலும் இந்த உலகத்து அதிகாரங்களையே பெரிதாக எண்ணி வாழ்கின்றனர். சாதாரண வார்டு கவுன்சிலர் தங்களது உறவினராகவோ தெரிந்தவராகவோ இருந்துவிட்டால்போதும் சிலரை பிடித்து நிறுத்த முடியாது. இந்த மொத்த நாடே அவர்கள் கையில் இருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். இன்றைய வசனம் கர்த்தரை நம்புவதைவிட்டு விட்டு  அதிகார பலத்தில் இருப்பவர்களை நம்பி நாம் செயல்படுவது கர்த்தரது பார்வையில் ஏற்புடையதல்ல என்பதை விளக்குகின்றது.

ஆட்சி செய்பவர்களது முகத்தைப் பார்த்துவிடவேண்டும் என எண்ணும் மக்கள் இரு பிரிவாக இருக்கின்றனர். ஒரு சிலர் நமது தலைவரைப் பார்த்துவிடவேண்டுமென எண்ணுபவர்கள்.  முதலமைச்சரோ பிரதமரோ வரும்போது பலர் சென்று கூடுவது அவர்களைப் பார்த்துவிடவேண்டும் எனும் ஆர்வத்தில்தான்.  ஆனால் பலர் ஆட்சி செய்கிறவருடைய  முகதரிசனத்தை ஏதாவது சலுகையோ உதவியையோ பெறுவதற்குத்   தேடுகிறவர்கள்.  மாவட்ட ஆட்சியாளர், முதல்வர், பிரதமர் இவர்களைச் சந்தித்துத் தங்கள் தேவையைப் பூர்த்திச் செய்திட பல்வேறு முறைகளில் சிபாரிசுகளை நாடுகின்றனர். 

இன்றைய வசனம் கூறுகின்றது, ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும் என்று. அதாவது எப்படி முயற்சி செய்தாலும் கர்த்தர் நினைப்பதே முடிவில் நமது வாழ்வில் சாத்தியமாகிடும். எனவே அன்பானவர்களே, அதிகாரத்திலுள்ளவர்களது முகத்தை எதிர்பார்த்து வாழ்வதைவிட, கர்த்தரையே நம்பி அவர்மேல் பற்றுதலாய் இருப்பதே நலம்.

"மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." ( சங்கீதம் 118 : 8, 9 )

தாவீது ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்தபோதும் ராஜாவாக ஆனபின்பும் கர்த்தரையே நோக்கிப் பார்ப்பவராக இருந்தார். அதில் அவர் உறுதியாக இருந்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று." ( சங்கீதம் 27 : 8 )
 
ஆளுகை செய்கிறவர்களுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்களாக வாழாமல் கர்த்தரது முகத்தரிசனத்தைத் தேடுபவர்களாக வாழ்வோம். அப்போது நமது வாழ்வில் கர்த்தர் நமது தேவைகளைச் சந்தித்து வழி நடத்துவார். 

ஆதவன் 🔥 861🌻 ஜூன் 07, 2023  புதன்கிழமை

".....................தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதனால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்." ( நீதிமொழிகள் 30 : 8, 9 )

இன்றைய தியான வசனம் வாழ்வின் எதார்த்தத்தை உலகக் கண்ணோட்டத்தில் பார்த்து கூறப்பட்ட வசனமாகும். செல்வமும் வேண்டாம், தரித்திரமும் வேண்டாம், கர்த்தர் நம்மோடு இருந்தால் போதும் என்று நமக்கு ஒரு சிந்தனையினைத் தருகின்றது.

அதிக அளவு செல்வம் எனக்குக் கிடைத்துவிட்டால் செல்வத்தின் செருக்கில் நான் கர்த்தரை மறுதலித்து, கர்த்தரா அவர் யார்? என்று ஒருவேளைச் சொல்லிவிடுவேன். அதுபோல தரித்திரம் அடைந்துவிட்டேனென்றால், நான் ஒருவேளைத் திருடுவேன் கர்த்தரது பெயரை வீணாகக் கூறி பொய் ஆணையிட்டு கார்த்தரைவிட்டுத் தூரமாய்ப் போய்விடுவேன். எனவே அன்றன்றுள்ள உணவின் படியை எனக்கு அளந்து என்னைத் திருப்தியாக்கும் என்று வேண்டுகின்றார் இந்த நூலின் ஆசிரியர்.

சாலமோன் அரசரால் அக்காலத்தில் வழக்கத்திலிருந்த முறைமைகளைப்பார்த்து எழுதப்பட்ட சில நீதிமொழிகளும் இதர ஞானிகளால் எழுதப்பட்ட நீதி போதனைகளும் கலந்த  தொகுப்புதான் நீதிமொழிகள் நூல். கர்த்தரைவிட்டுப் பின்மாறிய சாலமோனின் தொகுப்பான இந்த நூலில் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முரணான பல நீதிமொழிகள் உள்ளன. இன்றைய வசனம் அத்தகையவற்றுள் ஒன்று.  

ஆம், இந்த வசனம் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்த்தால் முற்றிலும் எல்லோரது வாழ்விலும் சரியாக இருக்க முடியாது. காரணம், அரசர்களாக இருந்து நாட்டை ஆட்சிசெய்த தாவீது, எசேக்கியா போன்றவர்கள் செல்வச் செருக்கடைந்து கர்த்தரை மறுதலிக்கவில்லை. அதுபோல அப்போஸ்தலரான பவுல் போன்றவர்கள் ஒன்றுமில்லாத நிலையிலும் கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்தனர்.

அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுகின்றார், "............நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு."( பிலிப்பியர் 4 : 11, 12, 13 )

ஆம், செல்வம் இருப்பதும் இல்லாமலிருப்பதும் பெரிய காரியமல்ல, கர்த்தர் நம்மோடு இருப்பதே முக்கியம்.  "பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று பவுல் அடிகள் கூறுவதுபோல அதிக செல்வமிருந்தாலும் நம்மைப் பெலப்படுத்துகின்ற  கிறிஸ்துவினால் நாம் கர்த்தரை மறுதலிக்காத வாழ்க்கை வாழ முடியும்; வறுமை, இல்லாமையிலும் நாம் உண்மையுள்ள வாழ்க்கை வாழமுடியும்.

எனவே நாம் கார்த்தரைவிட்டு எந்த நிலையிலும் பின்மாறிடாமல் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.  நம்மைப் பெலப்படுத்துகின்ற கர்த்தரால் எல்லாவற்றையும் நம்மால் செய்யமுடியும். அவர் நம்மோடு இருப்பாரானால் எந்தச் சூழ்நிலையும் நம்மைச் சேதப்படுத்தாது. 

ஆதவன் 🔥 862🌻 ஜூன் 08, 2023  வியாழக்கிழமை

"அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." ( 1 பேதுரு 1 : 17 )

இந்த உலக வாழ்க்கையுடன் நமது வாழ்வு முடிந்துவிடுவதில்லை. உடல் அழிந்தாலும் அழியாத நமது ஆன்மா இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நாம் செய்த செயல்களுக்கேற்ப நித்திய பரலோக பேரின்பத்துக்கோ அல்லது நித்திய நரக அக்கினிக்கோ செல்லவேண்டியிருக்கும். ஆனால் இதனைப் பெரும்பாலானோர் நம்புவதில்லை. இந்த உலகத்தில் வாழ்வதுதான் பரலோகமும் நரகமும் என்கின்றனர். இந்த உலகத்தில் செழிப்புடன் வாழ்வது பரலோக வாழ்க்கையென்றும் துன்பப்படுவது நரக வாழ்க்கையென்றும் கூறிக்கொள்கின்றனர். 

நித்திய நியாயத்தீர்ப்பையும் மறுவுலக வாழ்வையும் குறித்து இயேசு கிறிஸ்து பல உவமைகள் கூறியுள்ளார். செல்வந்தனும் ஏழை லாசரும் பற்றிய உவமை மிகத் தெளிவாக நமக்கு இதனை உணரவைக்கும். ஆனாலும் பலரும் இதனை ஒரு கதையாக எண்ணிக்கொள்கின்றனர்.  இதற்காகவே அப்போஸ்தலரான பேதுரு இன்றைய வசனத்தில்  "பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." என்று கூறுகின்றார்.

இந்த உலகத்தில் நாமெல்லோரும் பரதேசிகள். அதாவது குடியுரிமை இல்லாதவர்கள். நமது குறியுரிமை நாம் ஏற்கனவே கூறியபடி பரலோகம் அல்லது நித்திய நரகம். எனவே இப்படி பரதேசிகளாய் இந்த பூமியில் வாழும் நாள்வரை பயத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்கிறார். 

நமது கர்த்தரின் நியாயத் தீர்ப்பு பயங்கரமானது; எதார்த்தமானது. அவரது கண்களுக்கு நாம் செய்யும் எந்த அநியாயச் செயலும், பேச்சும் தப்பிடாது.  அவர் மனிதர்களைப்போல கண்டபடி நியாயம் தீர்க்கமாட்டார். எதார்த்தமாய் செய்யபட்டக் காரியத்தின் உண்மை நிலையினை அறிந்து மனிதர்களை நியாயம்தீர்ப்பார்.  "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11 : 4 )

இந்த நியாயம் தீர்க்கும் உரிமையினை பிதாவாகிய தேவன் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அளித்திருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது. "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 )

வேதாகமம் மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானிலும் ஈஸா நபி (இயேசு கிறிஸ்து) உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்று கூறப்பட்டுள்ளது. "பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16 : 7 )

அன்பானவர்களே, நியாயத் தீர்ப்பு உண்மையானது, நீதியானது எனவே அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்வோம். நீதி, நியாயம், பரிசுத்தத்தோடு வாழ்வோம். "ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்." ( 2 கொரிந்தியர் 5 : 10 )

ஆதவன் 🔥 863🌻 ஜூன் 09, 2023  வெள்ளிக்கிழமை

"கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்." ( கலாத்தியர் 5 : 24 )

கிறிஸ்து இயேசு மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெற்றவர்களது மன நிலையினை இன்றைய வசனம் விளக்குகின்றது. நாம் நமது பாவங்கள் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்பு அனுபவம் பெறும்போது அவருடையவர்கள் ஆகின்றோம். அதாவது, அப்போது அவர் நம்மை தனது இரத்தத்தால் விலைகொடுத்து வாங்கிவிடுகின்றார் என்று பொருள்.  

இதனை அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிரயத்துக்குக் (விலைக்கு)  கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." ( 1 கொரிந்தியர் 6 : 20 ) என்று கூறுகின்றார். எனவே நாம் கிறிஸ்துவினுடையவர்கள். இப்படி கிறித்துவினுடையவர்களான நாம் நமது உடலையும் அதன் ஆசைகளையும் கொன்றவர்கள் ஆகின்றோம். அதாவது, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல நமது உடலையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்துவிட்டோம். 

நாம் உண்மையாகவே ஆவிக்குரிய வாழ்வு வாழ்கின்றவர்களென்றால் மற்றவர்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவது இந்தக் குணம்தான். நமது உலக ஆசைகள் குறையும், உடலின் இச்சைகள் மறையும். இப்படி நான் ஒருமுறை ஒரு நண்பரிடம் கூறியபோது அவர் அப்படியானால் ஆவிக்குரிய சபைப் போதகர்கள் ஏன் விபச்சாரப் பாவத்திலும், பெண்கள் சம்பந்தமான வழக்குகளிலும்,  பண ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு போலீஸ் விசாரணையிலும் சிக்கியுள்ளனர்? என்று என்னிடம் கேட்டார். 

அன்பானவர்களே ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ளும் எல்லோரும் ஆவிக்குரியவர்கள் அல்ல. அவர்கள் கிறிஸ்துவின் மீட்பு அனுபவம் பெறாமலே கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்பவர்கள். இதுவே கிறிஸ்தவத்தையும் ஆவிக்குரிய மேலான நிலையினையும் கிறிஸ்தவர்களே அறியமுடியாமல் போகக் காரணம். பிரபல ஊழியர்களும்கூட இப்படி இருப்பதால் கிறிஸ்துவை அறியாத பிற மதத்தினர் கூட கிறிஸ்துவை அறியமுடியவில்லை.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்."( ரோமர் 9 : 7,8 ) என்று கூறுகின்றார். அதாவது, இத்தகையவர்கள் தங்களை தேவனுடைய பிள்ளைகள், ஆவிக்குரியவர்கள்  என்று கூறிக்கொள்கின்றனர்.  (அதாவது பெயரளவில் கிறிஸ்தவர்கள்) ஆனால், இத்தகையவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல என அப்போஸ்தலரான பவுல் அடிகள் இந்த வசனத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

"நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்." ( கலாத்தியர் 5 : 25 ) என்று பவுல் அடிகள் கூறுவதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் பிழைத்திருப்போமென்றால் ஆவிக்கேற்றபடி நடப்போம். 

அன்பானவர்களே, நாம் மற்றவர்களையும் ஊழியர்களையும் பார்க்கவேண்டிய அவசியமில்லை. தேவனது வார்த்தைகளைக் கவனிப்போம், அந்த வார்த்தைகள் நம்மில் செயல்பட இடம்கொடுப்போம். கிறிஸ்துவினுடையவர்களாக நாம் வாழும்போது நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறவர்களாக நாம் மாறுவோம். மற்றவர்களுக்கும் சாட்சியாக விளங்குவோம்.  அத்தகைய வாழ்வு வாழ நமக்கு உதவுபவரே பரிசுத்த ஆவியானவர். வசனத்தை விசுவாசிக்கும்போது நம்மில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

ஆதவன் 🔥 864🌻 ஜூன் 10, 2023  சனிக்கிழமை

"என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 :  23 )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு கட்டளைகளையும் பலிகளையும் நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார். அதன்படி பலிசெலுத்துவது ஒன்றுதான் தேவனுக்கு ஏற்புடைய செயல் என்று மக்கள் நினைத்திருந்தனர். தேவனுக்குப் பலி செலுத்துவதற்குக் காட்டிய முக்கியதுவத்தை தேவனுடைய வாக்குக்குக் கீழ்படிவதற்குச் செலுத்தவில்லை. 

அதாவது அவர்கள் பல கட்டளைகளையும் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன் விரும்பும் அன்பையும், இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டனர். குறிப்பாக,  பலியிடுவது சம்பந்தமான கட்டளையை நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும் பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.

இன்றைய வசனத்தின் முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலேதகனபலியைக்குறித்தும்மற்றப் பலிகளைக்குறித்தும் நான்அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும் என்  வாக்குக்குச் செவிகொடுங்கள்." எரேமியா 7 :  22 )

சில வீடுகளில் மகன் தாய் தகப்பனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது வேண்டிய உறவினர்களை வைத்துப் பேசிப்பார்ப்பார்கள். அதற்கும் மகன் கீழ்ப்படியாமல் தாய் தகப்பனுக்கு விரோதமாகச் செயல்பட்டால் அந்தத் தாயும் தகப்பனும் மனம் வெதும்பி, "நீ என் மகனுமில்லை; நான் உனக்குத் தாயுமில்லை" எனக் கூறுவதுண்டு. அதுபோலவே தேவனும் கூறுகின்றார்,  "என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" என்று. செவிகொடுக்கவில்லையானால் நீங்கள் எனது மக்களல்ல என்று பொருள். 

அன்பானவர்களே, இன்றும் இயேசு கிறிஸ்துவின் காலத்து நிலைதான் தொடர்கின்றது. பலகிறிஸ்தவ சபைகளில்   வருமானத்தில்  பத்தில் ஒன்று    காணிக்கைக் கொடுப்பது வலியுறுத்தப்படுவதன் அளவுக்கு  இயேசு கிறிஸ்து கூறிய தேவனுக்குக் கீழ்படிவதைக்குரித்துப் போதிப்பதில்லை. இரக்கம், நீதி இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பது  கிடையாது. 

என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும். அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார். ஒன்று எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பது, இரண்டாவது தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பது

கிறிஸ்துவின் இந்த கட்டளைகளுக்கு முரணான வாழ்க்கை, அன்பற்ற போதனைகள் நாம் தேவ ஜனமாக இருக்கத் தடையானவைகள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். . ஆம் அன்பானவர்களே, பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம். கட்டளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனித நேயத்துக்குக் கொடுப்போம். தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம். அதுவே கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி.


ஆதவன் 🔥 865🌻 ஜூன் 11, 2023  ஞாயிற்றுக்கிழமை

"ஆனால் கர்த்தரால் சுமரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்." ( எரேமியா 23 : 36 )


ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளில் ஊழியர்களும் சரி விசுவாசிகளும் சரி துன்பங்கள் பிரச்னைகள் ஏற்படும்போது, "கர்த்தர் தண்டித்துவிட்டார்", "கர்த்தருக்கு விரோதமாய் என்ன செய்தீர்கள் என்று எண்ணிப்பாருங்கள், மன்னிப்புக் கேளுங்கள்" என்று கூறுவதுண்டு. இது தேவனை சாதாரண மனிதனைப்போல எண்ணி பேசுவதாகும். ஒரு பள்ளி ஆசிரியரைப்போல கையில் பிரம்புடன் தேவன் காத்து நிற்பதுபோலவும் தவறு செய்தவுடன் நம்மை அடித்துவிடுவார் என்று கூறுவதுபோலவும்  உள்ளது. 

"கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 34 ) என்கிறார் எரேமியா. 

ஆனால், நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமது சிறு தவறுகள், குற்றங்களுக்குத் தேவன் சிறிய தண்டனை தருவார். அது தாய் தகப்பன் பிள்ளைகளைத் திருத்துவதற்குத் தரும் சிறு தண்டனைகள் போன்றவை.  இவை பாரமல்ல, மாறாக தேவ அன்பின் தண்டனை. "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.  நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 6, 7 ) என்கின்றார் பவுல் அடிகள். 

மனிதர்களது இயல்பான குணம் தனது தவறை உணராமல் இருப்பது. நெருப்பு சுடும் என்பது தெரிந்தும் நெருப்பில் கையை வைத்துவிட்டு சுட்டவுடன் கடவுள் தண்டித்துவிட்டார் என்று கூறமுடியுமா? நமது தவறான செயல்களே பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமாகிவிடுகின்றது.  

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்." ( யாக்கோபு 1 : 13, 14 ) என்று கூறுகின்றார். 

இதனை உணராமல் மக்கள் பேசுவதால்தான், "கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".

அன்பானவர்களே, நமது வழிகளை ஆவியானவருக்கு ஒப்புவித்து நாம் வாழவேண்டும். அவர் நம்மை நடத்துவதற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். ஒரு பிரச்சனை, துன்பம் ஏற்படும்போது தேவனைக் குற்றம் சொல்வதைவிட்டு நாம் செல்லும் வழி தவறானால் திருத்திக்கொண்டு வாழ்வதே அறிவுடைமை. 

ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதுதான் நமக்குத் தேவன் தரும் அன்புத் தண்டனைக்கும் நமது தவறான செயல்பாடுகளால் உண்டான பாரமான பிரச்சனைகளுக்கும் வித்தியாசம் தெரியும். அன்புத் தண்டனைகளை ஏற்றுக்கொண்டு நம்மைத் திருத்திக்கொள்வோம். பாரமான பிரச்சனைகளுக்கு முடிவு வேண்டுமானால் நமது மொத்த வாழ்வின் வழியினையும் மாற்றி தேவனுக்கேற்ற  வழிக்குத் திரும்பிடவேண்டும். 


ஆதவன் 🔥 866🌻 ஜூன் 12, 2023  திங்கள்கிழமை

"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )

கர்த்தரால் வேறுபிரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையினை இன்றைய வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. கர்த்தரால் வரும் ஆசீர்வாதம் இதுதான். இருளான வாழ்க்கை ஒளியாக மாறுகின்றது; அவரை ஏற்றுக்கொள்ளும்போது எந்த மனிதனையும் அவர் இருளிலிருந்து  ஒளிக்குள் கொண்டுவருவார். இதனையே அப்போஸ்தலரான யோவான், "உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிபிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான் 1:9) என்று கூறுகின்றார். 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கானானை நோக்கிப் பயணித்த தனது மக்களை தேவன் ஒளியால் வழிநடத்தியது,   இன்றைய புதிய ஏற்பாட்டுக்காலத்தில் பரம கானானை நோக்கி நம்மை வழிநடத்தும் ஆவிக்குரிய ஒளியாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாய் இருக்கின்றன. முதன்முதலில் எகிப்து நாட்டில் தேவன் தனது ஒளியால் மக்களை வேறுபிரித்துக்காட்டும் அதிசயத்தைச் செய்தார். பார்வோன் மனது கடினப்பட்டு இஸ்ரவேலரை விடுவிக்க மறுத்தபோது மோசே மூலம் அதிசயம் செய்து தனது மக்களை வேறுபிரித்துக் காட்டினார்.  

"மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது." ( யாத்திராகமம் 10 : 23 ) என்று வாசிக்கின்றோம்.

மேலும், இஸ்ரவேல் மக்களை விடுவித்து அனுப்பியபின்னர் பார்வோன் மனம் கடினப்பட்டு அவர்களை அழித்து ஒழிக்க மீண்டும் தனது படைகளோடு பின்தொடர்ந்தான். அப்போது இஸ்ரவேலர் முன்னால்  சென்ற கர்த்தரது தூதனானவர் விலகி அவர்களுக்குப் பின்னால் பாதுகாப்பாக வந்தார். மேகஸ்தம்பமும் விலகி அவர்களுக்குப் பின் வந்தது.  "எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தன; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று." ( யாத்திராகமம் 14 : 20 )

அன்பானவர்களே, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படியே இருளான மக்கள் மத்தியில் ஒளியாக வந்தார். "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" ( மத்தேயு 4 : 15 ) என்று வாசிக்கின்றோம். உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிபிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளியான அவரிடம் நாம் சேரும்போது பாவ இருளைவிட்டு நாம் மெய்யான ஒளியினிடம் சேர்ந்து அவரைப்போல ஒளிருவோம். 

அன்று இஸ்ரவேல் மக்களை எப்படி எகிப்தியரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அவர்களை கானானுக்கு நேராக வழி நடத்தினாரோ அதுபோல அவரை ஏற்றுக்கொள்ளும்போது  பிற மக்களிடமிருந்து நம்மையும்   வேறுபடுத்தி நடத்துவார். 

எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று என்று கூறப்பட்டுள்ளதுபோல, பிற மக்களிடமிருந்து அவர் நம்மை வேறுபிரிக்கும்போது  நமக்கு அவரே  வெளிச்சமாக இருப்பார். அந்த வெளிச்சத்தை எகிப்தியர் கண்டு ஆச்சரியப்பட்டதுபோல நம்மை அற்பமாகவும் அலட்சியமுமாக நடத்தியவர்கள் கண்முன் நமது ஒளி ஆச்சரியப்படத்தக்கதாக விளங்கும். 

கானானை நோக்கிப் பயணித்த இஸ்ரவேலர்மேல் உதித்த கர்த்தரின் ஒளி, பரம கானானை  நோக்கிப் பயணிக்கும் பயணிகளாக நாம் விளங்குவோமென்றால்  நம்மேலும் உதிக்கும்.  ஆம்,  நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மேல்  காணப்படும்.


ஆதவன் 🔥 867🌻 ஜூன் 13, 2023  செவ்வாய்க்கிழமை

"நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று  விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்."(எரேமியா 15:19)

ஒரு சிலரது வாழ்க்கை எந்தவிதச் சிக்கல்களுமின்றி நன்றாகச் சென்றுகொண்டிருக்கும். ஆனால் திடீரென்று வாழ்க்கையில் பெரிய சறுக்குதல் ஏற்பட்டு அவர்கள் நிலைகுலைந்துபோவதுண்டு. இந்தச் சறுக்குதலுக்குக் காரணம் என்னவென்று அவர்கள் குழம்பிச் சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுண்டு. வாஸ்து வல்லுனர்களையும் ஜோசியர்களையும்  நாடி பரிகாரங்கள் செய்வதும், மற்றவர்களால்தான் தங்களுக்கு இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என எண்ணி மேலும் மேலும் தங்களுக்குத் துன்பத்தை வருவித்துக்கொள்வதுமுண்டு. "பொறாமைக் கண்கள்" "கண்திருஷ்டி",  "என் வளர்ச்சியைப்பார்த்து யாரோ எனக்குச் செய்வினை வைத்துவிட்டார்கள்'  இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்வின் சறுக்குதலுக்குக் காரணம் கண்டுபிடிக்கிறார்கள். 

அன்பானவர்களே, சிலவேளைகளில் தேவன் நாம் அவரிடம் திரும்பி வரவேண்டும் என்பதற்காகச் சில துன்பங்களையும் சறுக்குதல்களையும் நமது வாழ்வில் ஏற்படுத்துகின்றார். நமது துன்பங்களுக்குப் பிறரைக் குற்றம் சாட்டுவதைவிட்டுவிட்டு நாம் மனம்திரும்பி கர்த்தரிடம் வரவேண்டுமென்று இன்றைய வசனம் மூலம் கர்த்தர் பேசுகின்றார். 

நமது தவறான வழிகளைவிட்டு மனம்திரும்பி கர்த்தரிடம் வந்தோமென்றால் நம்மைத் திரும்பவும் சீர்படுத்துவேன் என்று இன்றைய வசனத்தில் கர்த்தர் நமக்கு நல்ல செய்தியைத் தருகின்றார்.  "நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். நீ எந்த இடத்திலிருந்து வீழ்ச்சியைச் சந்தித்தாயோ அதே இடத்துக்கு வரும்படி திரும்பச் சீர்படுத்துவேன் என்கிறார் கர்த்தர்.

மட்டுமல்ல, "நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, தீழ்ப்பான (அருவருப்பான) காரியங்களிலிருந்து விலகி விலையேறப்பெற்ற கர்த்தரது வார்த்தைகளைப் பிரித்தெடுத்து  அதன்படி வாழ்வாயானால் நீ கர்த்தரது வாய்போல இருப்பாய்; உன்னை வெறுப்பவர்களிடம் அல்லது உனக்குக் கெடுதல் செய்தவர்களிடம் நீ செல்லாமல் அவர்கள் உன்னைத்தேடி வருவார்கள் என்கிறார் கர்த்தர்.  

மேலும் இன்றைய வசனத்துக்கு அடுத்த வசனமாக, "உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா 15:20) என்று கூறப்பட்டுள்ளது.

நமது தோல்விகள், சறுக்குதல்கள்,பிரச்சனைகள், துன்பங்கள் எல்லாவற்றுக்கும் பிறரைக் காரணமாக எண்ணாமல் நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். அப்படி "நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்" என வாக்களிக்கும் கர்த்தர், உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்றும் உறுதிகூறுகின்றார்.  

ஆதவன் 🔥 868🌻 ஜூன் 14, 2023  புதன்கிழமை

"இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 )

இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள பொறுமை என்பது சாதாரணமாக நாம் கூறும் பொறுமையையல்ல; மாறாக தேவன்மேலுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருந்து தேவன் எனது காரியங்களை நலமாக முடித்துவைப்பார் என்று பொறுமையோடு காத்திருந்து நம்புவது, துன்பங்களைப் பொறுமையாகச் சகிப்பது, இவைகளையே பொறுமை என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஒருவர் தான் நல்ல நிலையில் இருக்கும்போது பொறுமையாக இருப்பது பெரிய காரியமல்ல.  மாறாக, வாழ்வில் எதிர்மறையான காரியங்கள் நிகழும்போதும் அமைதியாக, பொறுமையாக இருப்பது மகத்தான காரியமாகும். பக்தனான யோபு அப்படிதான் இருந்தார். தனது பிள்ளைகள், சொத்துக்கள், உடல்நலம் அனைத்தும் பாதிக்கப்பட்டபின்னரும் அவர் தேவன்மேல் வைத்திருந்த விசுவாசத்தில் தளர்வடையவில்லை.  எல்லாத் துன்பத்துக்கும்  மேலாக அவரது உயிரான மனைவியே அவரை அவமதித்துப் பேசும்போதும் யோபு பொறுமையாகப் பேசுகின்றார். 

யோபு இரண்டாம் அதிகாரத்தில் வாசிக்கும்போது, "அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்." ( யோபு 2 : 9 ) யோபின் மனைவி கூறுவதை தற்போதைய வார்த்தைகளில் கூறவேண்டுமானால், "நீர் இன்னுமா கடவுளை நம்புகிறீர்? அவரை தூஷித்துவிட்டு செத்துத் தொலையும் "  என்பதுதான். 

அதற்கு யோபு கூறும் பதில், "நீ பைத்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ" ( யோபு 2 : 10 ). 

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளது, "கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே". அதாவது, கர்த்தர் மிகுந்த  உருக்கமும் இரக்கமுமுள்ளவராய் இருப்பதால் யோபுவுக்கு வந்ததுபோன்ற ஆசீர்வாத முடிவு பொறுமையாக இருக்கும்போது நமக்கும்  வரும் என்று பொருள். 

ஆம், "கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்." ( யோபு 42 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பொறுமை இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தின் வழி. 

அன்பானவர்களே, நாம் எல்லோரும் யோபுவைபோல வாழ்வது சிரமமான காரியம்தான். மனித பலத்தால் இது முடியாதுதான். ஆனால், இத்தகைய விசுவாசம் நமக்கு வேண்டுமென்று நாம் விரும்பி ஜெபிக்கலாமல்லவா? அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல நம்பிக்கையிலே சந்தோஷமும்; உபத்திரவத்திலே பொறுமையும்; ஜெபத்திலே உறுதியும் நமக்கு வேண்டுமென்று வேண்டுவோம். ஆவியானவர் அதனை நமக்குத் தந்தருள்வார். 

ஆதவன் 🔥 869🌻 ஜூன் 15, 2023  வியாழக்கிழமை

"விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்." ( எபிரெயர் 11 : 22 )

இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தது தேவனது மிகப்பெரிய திட்டத்தினால்தான். அந்தத் திட்டத்தை அவர் ஆபிரகாமுக்குத் தெரிவித்திருந்தார். "உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்." ( ஆதியாகமம் 15 : 13, 14 )

ஆபிரகாம் இதனைத் தனது மகன் ஈசாக்குக்கு அறிவித்திருந்தார். ஈசாக்கு தனது மகன் யாக்கோபுக்கும்  அவர் தனது மகன் யோசேப்புக்கும் தெரிவித்திருந்தனர். தேவனது வார்த்தைகளை அவர்கள் முழுவதுமாக நம்பியிருந்தனர். அந்த விசுவாசத்தினால்தான் யோசேப்பு தான் மரணமடையுமுன் தனது எலும்புகளைக்குறித்து பேசினார். "தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்." ( ஆதியாகமம் 50 : 25 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அதாவது தான் உயிரோடிருந்த நாளில் கானான் தேசத்தைச் சுதந்தரிக்க முடியவில்லை என்றாலும் நிச்சயமாக தேவன் குறித்த காலத்தில் தனது மக்களைச்  சந்தித்து கானானுக்குக் கொண்டு செல்வார் என்று யோசேப்பு முழு நிச்சயமாக நம்பினார். எனவேதான் தனது எலும்புகளைக்குறித்து இப்படி ஒரு கட்டளையினைக் கொடுத்தார்.  

தேவன் சொன்னபடி இஸ்ரவேலரை விடுவித்தார். ஆம், "இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்." ( யாத்திராகமம் 12 : 40 ) நானூற்று முப்பது ஆண்டுகள் முடிவடைந்த அந்த நாளில்தான் இஸ்ரவேல் மக்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டனர். 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) ஆம் யோசேப்பு இப்படி தனது முன்னோர்களுக்குத் தேவன் கூறிய வார்த்தைகளின்மேல் உறுதியான விசுவாசமுள்ளவராய் இருந்தார். அதனால் அவரது பெயர் விசுவாச வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  

அன்பானவர்களே, யோசேப்பு தனது முன்னோர்களுக்குத் தேவன் கூறியதை விசுவாசித்தார். இன்று நமக்குத் தேவன் தனது குமாரனான இயேசு கிறிஸ்துமூலம் பல வாக்குறுதிகளைத் தந்துள்ளார். அதனை அவரோடு இருந்த சீடர்கள் நமக்காக எழுதி வைத்துள்ளனர். அவற்றை நாம் விசுவாசிக்கவேண்டியது எவ்வளவு முக்கியம்!! பாவ மன்னிப்பு, பாவத்திலிருந்து விடுதலை, உடலின் உயிர்ப்பு, நித்தியஜீவன் இவையெல்லாம் நமது கர்த்தரான இயேசு கிறிஸ்து வாக்களித்தவை. 

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளை நாம் விசுவாசிக்கும்போது நாம் பரம கானானுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். கானான் தேசத்துக்கு மோசே யோசேப்பின் எலும்புகளைத் தூக்கிச் சென்றார்.  (யாத்திராகமம் 13:19)  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவர் நம்மையே தன்னுடன் சேர்த்துக்கொள்வார். 

ஆதவன் 🔥 870🌻 ஜூன் 16, 2023  வெள்ளிக்கிழமை

"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."சங்கீதம் 34 : 19 )

இந்த உலகத்தில் ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்திடவேண்டுமென்றால் அதற்கான  படிப்பு அவசியம்.  ஒவ்வொரு   வகுப்பாக தேர்வு   எழுதி  வெற்றிபெற்றுபல  கட்டங்களைத் தாண்டவேண்டும். படிப்புகளையும் படித்து முடித்தபின்னர் போட்டித் தேர்வுகள், நேர்முகத்தேர்வுகள் எனப் பல படிகளைக் கடக்கவேண்டும்.  ஒருவர்  மருத்துவராகவோ, பொறியாளராகவோ கல்லூரிப் பேராசிரியராகவோ ஆகவேண்டுமென்றால் உடனடியாக அப்படி ஆகிட முடியாது. அதற்கு அவர்கள் பல ஆண்டுகள் படித்துப்  பலத் தேர்வுகளைச் சந்திக்கவேண்டும். 

ஆவிக்குரிய சிறந்த மனிதனாக மாறிட,  இந்தத் தேர்வுகளைப்  போலவே நமது வாழ்க்கையிலும் நாம் பல கட்டங்களைத் தாண்டவேண்டியுள்ளது. இந்தத் தேர்வுகளைப் போன்றவையே துன்பங்கள்

ஒருவன் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்டவனாக, நீதிமானாக  இருப்பதால் அவனுக்குத் துன்பங்கள் வராது என வேதம் கூறவில்லை. மாறாக நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும் என்றே கூறுகிறதுதுன்பங்களும் பாடுகளும் உலகத்தில் பிறந்த ஒவொருவருக்கும் உண்டு. நீதிமானுக்கு அதிகம் உண்டுஆனால் கிறிஸ்து அதனைத் தாங்கக்கூடிய பலத்தினை அவரை விசுவாசிப்போருக்குத் தருகின்றார்இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் , "உலகத்தில் உங்களுக்கு  உபத்திரவம் உண்டு, ஆயினும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் - 16:33) 

நீதிமானுக்கு ஏன் அதிக துன்பம் என்று நாம் பார்ப்போமானால் , உலகத்திலிருந்து நீதிமான்களை தேவன் தனியே   பிரித்தெடுத்து   நடத்துவதால்தான். இயேசு கிறிஸ்துக் கூறினார், " நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாரா யிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது." (  யோவான் 15 : 19 ) அப்படி உலகம்  பகைப்பதால் தான் நீதிமானுக்குத் துன்பங்கள் அதிகம். 

நான் இவ்வளவு ஜெபித்தும் , தேவனிடம் பற்றுதலாயிருந்தும் ஏன் எனக்கு இதனைத் துன்பங்கள் எனக் கலங்கிடவேண்டாம்.   உபாத்திரவத்தின் வழியே சென்று ஒரு ஜெயம் உள்ள வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தேவன் நமது உபத்திரவத்தை நாம் மேற்கொள்ள உதவாமல் கைவிட்டுவிடுவதில்லை. 1 கொரிந்தியர் -10:13 கூறுகிறது, உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு இடம்கொடாமல் சோதனையைத் தாங்கத்  தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார்

ஆம், "நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்." சங்கீதம் 34 : 17 ) மேலும் வேதம் கூறுகிறது,  "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது."  சங்கீதம் 34 : 15 )

தாவீது சிறு வயது துவங்கி தேவனால் நடத்தப்பட்டவர். ஆரம்பம் முதல் பல சோதனைகளைக் கடந்து வந்தவர். சவுல் பல முறை அவரைக் கொல்ல முயன்றும் தேவன் அவரை சவுலின் கைகளுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. மேலும் அவர் ராஜாவாக இருந்து பல பொருளாதார நிலையிலிருந்த மக்களைக் கண்டிருக்கிறார். அவரது அனுபவத்தால் துணிந்து பின்வருமாறு கூறுகின்றார்...

"நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை." (  சங்கீதம் 37 : 25 )

ஆம், தேவன் நீதிமான்களை சோதித்தாலும் ஒரேயடியாக கைவிட்டுவிடமாட்டார். முதிர்வயதுவரை நமது அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவிராது. நமது சந்ததியினையும் தேவன்  ஆசீர்வதிப்பார்.

ஆதவன் 🔥 871🌻 ஜூன் 17, 2023 சனிக்கிழமை


"நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்." ( ஏசாயா 62 : 4 )

அன்பானவர்களே, ஒருவேளை இதுவரை நாம் நமது வாழ்க்கையில் நமக்கு உண்மையாக உதவிபுரிவதற்கு யாருமில்லாத  கைவிடப்பட்ட பெண் போல இருந்திருக்கலாம். எனக்கு உதவிட இந்த உலகினில்  யார் இருக்கின்றார்? என எண்ணிக் கலங்கியிருக்கலாம். கலங்கிடவேண்டாம்; இப்போது ஏற்றத்  துணையாளன் கிடைத்துவிட்டார். எனவே நாம் கைவிடப்பட்டவர்களல்ல.  அதுபோல  நமது குடியிருப்பு (வாழ்க்கை) பாழானதாக, இனி நமக்கு ஒரு நல்ல வாழ்வு உண்டுமா? என ஏங்கவைப்பதாக இருந்திருக்கலாம். கவலைவேண்டாம், இனி அப்படியல்ல,செழிப்பான வாழ்க்கை நமக்கு அமையப்போகின்றது. 

கர்த்தருக்குள் மனம்திரும்பிய ஒரு வாழ்க்கை வாழும்போது கர்த்தர் தரும் மேலான இந்த ஆசீர்வாதத்தையே  இன்றைய வசனம் விளக்குகின்றது. 

"நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்." என்று இன்றைய வசனம் தொடர்ந்து சொல்கின்றது. எப்சிபா என்பதற்கு, "அவளில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்" என்றும் பியூலா என்பதற்கு, "மணமுடித்தவள்" என்றும் பொருள்.

அதாவது, ஒரு மணமகன் மணமகளிடம் மகிழ்சியாய் இருப்பதுபோல கர்த்தர் நம்மேல் மகிழ்ச்சியாய் இருக்கிறார்; அவரே நம்மை மணமுடித்துள்ளார்  என்று பொருள். எனவே நாம் இனி கைவிடப்பட்டவர்களல்ல; கர்த்தரே நம்மை மணமுடித்துள்ளதால் நமது வாழ்க்கை இனி வறண்ட வாழ்க்கையல்ல; செழிப்பான ஒரு வாழ்க்கை. 

அன்பானவர்களே, நமக்கு எவ்வளவு செல்வம், சொத்துக்கள் இருந்தாலும் கிறிஸ்து இல்லாவிட்டால் நமது வாழ்க்கை கைவிடப்பட்ட வாழ்க்கைதான்; வறண்ட வாழ்கைதான். காரணம், நமது செல்வங்களும் சொத்துசுகங்களும் எப்போதும்  நமக்கு உதவிக்கு வராது. கோடி கோடியாக சொத்துச் சேர்த்துள்ள பலர் மன அமைதியின்றி தற்கொலை செய்வதை நாம் பலவேளைகளில் செய்திகளில் பார்க்கின்றோம். காரணம் வெளிப்பார்வைக்கு அழகுறத்தோன்றும் அவர்களது வாழ்க்கை உண்மையில் கைவிடப்பட்ட, பாழான வாழ்க்கை. 

எனவேதான் நாம் கர்த்தரோடு இணைத்து வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

"நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்" ( யோவான் 15 : 5, 6 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? 

எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொண்டு அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்வோம். அப்போது, இன்றைய வசனம் கூறுவதுபோல, நாம் இனிக் கைவிடப்பட்டவர்கள் எனப்படாமலும், நமது வாழ்க்கை இனிப் பாழான வாழ்க்கை என்று சொல்லப்படாமலும்  இருக்கும். நம்மில் அவர் மகிழ்ச்சியாயிருப்பார்; நம்மை அவர் மெய்யான மணமகளாக சேர்த்துக்கொண்டு நம்மேல் பிரியமாக இருப்பார். 

ஆதவன் 🔥 872🌻 ஜூன் 18, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்." ( யோவான் 4 : 24 )

இன்றைய வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் பேசும்போது குறிப்பிட்ட வசனமாகும்.  தேவனை ஆராதிக்க சடங்காச்சாரங்கள் தேவையில்லை.  வெறுமனே கூச்சலும் கூப்பாடும் தேவையில்லை.

வேதாகம அடிப்படையில் ஆவிக்குரிய ஆராதனை என்பது என்ன என்று முதலில் புரிந்துகொள்ளவேண்டும்; ஆவிக்குரிய ஆராதனை செய்யும் சபைகளுக்குச் செல்கின்றோம் என்று கூறிக்கொள்பவர்கள் பிற சபைகளைக் குறைகூறுவதற்குமுன் தாங்கள் உண்மையிலேயே ஆவிக்குரிய  ஆராதனை செய்கின்றோமா என்று எண்ணிப்பார்த்திடவேண்டும்.

ஆவியான தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். இதில் ஆவியோடு என்பதற்கு நாம் இரண்டு பொருள்கள் கொள்ளலாம். ஒன்று, நமது முழு ஆவியோடு தேவனை ஆராதிக்கவேண்டும் என்று பொருள்.  "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" ( மத்தேயு 22 : 37 ) என்று நியாதிபதி ஒருவனுக்கு இயேசு பதில் கூறினார். இப்படி அன்புகூர்ந்து தேவனை ஆராதிக்கவேண்டும். 

ஆவியோடும் என்பதற்கு  பரிசுத்த ஆவியோடு என்றும்  பொருள் உண்டு. அதாவது நாம் தேவனை பரிசுத்த ஆவியோடு தொழுது கொள்ளவேண்டும். இங்குதான் பலரும் தவறுகின்றனர்.  துள்ளிக்குதித்து ஆராதிப்பதுதான் பரிசுத்த ஆவியோடு ஆராதிப்பது எனப் பலரும் புரிந்துகொண்டுள்ளனர்.  ஒருவரிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதற்கு அலறுவது அடையாளமல்ல மாறாக, ஆவியின் கனிகள் அவரிடம் இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியின் கனிகள் உள்ளவனே பரிசுத்த ஆவியை உடையவன். அத்தகைய கனிகளுடன் தேவனை ஆராதிக்கவேண்டும். 

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கனிகளை உடையவனே பரிசுத்த ஆவியை உடையவன்.  

ஆண்டவர் இயேசு மேலும்  கூறினார், உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்.  அதாவது, நமது வாழ்க்கையில் உண்மையாக நடந்து நாம் தேவனை ஆராதிக்கவேண்டும்.   உண்மை,  நேர்மையற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஆராதிப்பது ஆவிக்குரிய ஆராதனையல்ல. மேலும், உண்மை என்பது தேவனது வார்த்தைகளைக் குறிக்கின்றது. "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 ) என்றார் இயேசு கிறிஸ்து. எனவே தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்ந்து அவரை ஆராதிக்கவேண்டும். 

அன்பானவர்களே, தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க குறிப்பிட்ட சபைகளில் சென்றால்தான் முடியுமென்று எண்ணிவிடவேண்டாம். ஆவிக்குரிய ஆராதனைக்கு இதுவரைத் தவறான பொருள்கொண்டு தவறான வழிகளில் நடந்திருப்போமென்றால் நம்மைத் திருத்திக்கொள்வோம். ஆவியோடும் உண்மையோடும் தேவனை எங்கும் ஆராதிக்கலாம்.  

"நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது." ( யோவான் 4 : 21 ) என்று கர்த்தராகிய இயேசு கூறவில்லையா? தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்து ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

ஆதவன் 🔥 873🌻 ஜூன் 19, 2023 திங்கள்கிழமை

"சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்". ( யோவான் 18 : 37 )

தான் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறக்க ஒரு காரணத்தை இன்றைய வசனத்தில்  இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது, உண்மைக்குச் சான்றுபகரவே நான் வந்தேன் என்கின்றார். 

வழியும் சத்தியமும் ஜீவனும் நானே என்று கூறியவர் தான் கூறியபடி சத்தியத்துக்குச் சான்று கூற இந்த உலகினில் வந்தார்.  சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்". ( யோவான் 18 : 37 ) என்று இயேசு கிறிஸ்து கூறியபோது, பிலாத்து அவரிடம் ," சத்தியம் என்றால் என்ன?" என்று கேட்டான். அவனுக்கு இயேசு கிறிஸ்து பதில் கூறவில்லை. 

சில காரியங்களை  வளர்ந்த மனிதர்களுக்கு ஒன்றுமறியாத சிறு பிள்ளைகளுக்கு விளக்குவதுபோல விளக்கம் கூறிக்கொண்டிருக்கமுடியாது. உதாரணமாக, ஒரு அறுபது வயது மனிதன் "பசும்பால் என்றால் என்ன?" என்றோ "எண்ணெய் எப்படி இருக்கும்?"  என்றோ கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவனுக்கு விளக்கம்கூற முடியுமா?  அவன் பொய்யன் அல்லது அறிவிலி என்று அவனுக்குப் பதில் பேசாமல் இருப்பதே மேல். எனவேதான் உண்மை என்றால் என்ன என்பதை பொய்யிலேயே பிறந்து வளர்ந்த பிலாத்துவுக்கு இயேசு விளக்கவில்லை.  

ஆனால், தனது சீடர்களோடு அமர்ந்திருந்து ஜெபிக்கும்போது "உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 ) அதாவது, தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்று கூறி ஜெபித்தார். ஆம், உண்மையான அந்த தேவ வார்த்தைகளுக்குச் சான்றுகூற நான் வந்தேன் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, "சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்" என்று. அதாவது, நாம் உண்மையுள்ளவர்களாக வாழ்வோமானால் தேவ சத்தத்தைக் கேட்க முடியும். ஆம், உண்மையுள்ள எவனும் கேட்கமுடியும் என்கின்றார் இயேசு கிறிஸ்து.

அன்பானவர்களே, நமது தேவன் ஊமையான ஒரு விக்கிரகமல்ல. இன்றும் பல்வேறு விதங்களில் தேவன் தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் மனிதர்களிடம் பேசுகின்றார். கனவுமூலமும் தரிசனங்கள் மூலமும், சிலவேளைகளில் மனிதர்கள் பேசுவதுபோல குரல்மூலமாகவும்  பேசுகின்றார். பலவேளைகளில் நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது வசனங்களின்மூலம் பேசுகின்றார்.  ஆனால், அதனைக் கேட்கும் அறிவு நமக்கு வேண்டியது அவசியம். 

தேவன் நம்மோடு பேசி நம்மை நடத்தும் விதம் அதிசயமானது. ஆவிக்குரிய அனுபவமில்லாதவர்கள் இதனை நம்புவது அரிது. காரணம் ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவர்களால்தான் புரிந்துகொள்ளமுடியும்.    

"ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 14 ) ஆம், அன்று அப்போஸ்தலரான பவுல் அடிகளிடம் கிறிஸ்து பேசினார் என்பதை யூதர்கள் மட்டுமல்ல கொரிந்து சபை மக்களே நம்பவில்லை. எனவேதான் அவர் கூறுகின்றார், "கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்." ( 2 கொரிந்தியர் 13 : 3 )

அன்பானவர்களே, பிலாத்துவைப்போல இல்லாமல் இன்றைய வசனம் கூறுவதன்படி சத்தியத்தைக்குறித்து சாட்சிகொடுக்க உலகினில் வந்த கிறிஸ்துவை அறிய முயலுவோம். சத்தியத்தின்படி வாழ்வோம்; சத்தியவான்களாக வாழ்வோம். அப்போது கிறிஸ்து கூறியதுபோல அவரது சத்தத்தை நம்மால் கேட்க முடியும். மேலான ஆவிக்குரிய அனுபவங்களைப் பெறமுடியும்.

ஆதவன் 🔥 874🌻 ஜூன் 20, 2023 செவ்வாய்க்கிழமை

"நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1 : 20, 21 )

அப்போஸ்தலரான யூதா தனது நிரூபத்தை பிதாவாகிய தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவினால் காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கும் எழுதுவதாக ஆரம்பிக்கின்றார்.  அதாவது கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுக்கு என்று பொருள். 

நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வினைச் சுதந்தரித்துக்கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறவேண்டும்; அதற்கு நாம் காத்திருக்கவேண்டும் என்கின்றார். எப்படி காத்திருப்பது என்பதற்கு மூன்று காரியங்களைக் கூறுகின்றார். 

1. விசுவாசத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் 
2. பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணவேண்டும்.
3. தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.

இங்கு, விசுவாசம் என்று வெறுமனே கூறாமல், மகா பரிசுத்தமான விசுவாசம் என்று கூறுகின்றார். அதாவது அசைக்கமுடியாத, கொஞ்சமும் குறைவில்லாத விசுவாசமுள்ளவர்களாய் நாம் இருக்கவேண்டும். உதாரணமாக, ஆபிரகாமைப் போன்ற விசுவாசம்  என்று கூறலாம். 

இரண்டாவது பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணவேண்டும். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நாம் பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணும்போது உலக ஆசைத் தேவைகளை மட்டுமே வேண்டி நாம் ஜெபிக்கமாட்டோம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளிருந்து ஜெபங்களைத் தூண்டுவார். அப்படி ஆவிக்குரிய ஜெபம் செய்பவர்களாக நாம் இருக்கவேண்டும். 

மூன்றாவதாக, தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். தேவனுக்குச் சித்தமில்லாத காரியங்களை நம்மைவிட்டு அகற்றி அவரது மனம் மகிழும்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்; அப்படி வாழவேண்டும். இப்படி நாம் வாழும்போது நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தால் அவர்  வாக்களித்த நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வுக்குத் தகுதியாகின்றோம். அவரது அந்த இரக்கத்தைப் பெறுவதற்கு நாம் காத்திருக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, இந்த மூன்று காரியங்களிலும் நாம் எப்படி இருக்கின்றோம்? நமது விசுவாசம், நமது ஜெபம், நமது ஆவிக்குரிய அன்றாட வாழ்க்கை இவை எப்படி இருக்கின்றன? வெறும் உலக காரியங்களையே நமது ஜெபங்களில் கேட்டு அவை கிடைக்குமென்று விசுவாசித்து வாழ்வதல்ல ஆவிக்குரிய வாழ்க்கை. 

அப்போஸ்தலரான யூதா கூறும் அறிவுரையின்படி நாம் வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். விசுவாசம், ஜெபம், தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொண்டு வாழும் ஆவிக்குரிய வாழ்க்கை இவைகளை நாம் கடைபிடித்துக் காத்திருக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாக்களித்த நித்தியஜீவனை அவர் நமக்குத் தந்தருள்வார். 

ஆதவன் 🔥 875🌻 ஜூன் 21, 2023 புதன்கிழமை

"முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்." ( 1 கொரிந்தியர் 15 : 47 )

அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய வசனத்தில் முதல் மனிதனாகிய ஆதாமையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் குறிப்பிட்டுச் சில விளக்கங்களைக் கூறுகின்றார். 

முந்தின மனிதனாகிய ஆதாம் தேவனால் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். அவனுக்கு மண்ணிற்குரிய ஆசையும் எண்ணங்களுமே  இருந்தன. எனவே அவன் அந்த மண்ணிற்குரிய ஆசை இச்சையினால் தேவனால் விலக்கப்பட்டக் கனியைச் சாப்பிட்டான். அதாவது நாம் ஆவிக்குரிய நிலையினை விடுத்து உலக ஆசைகளில் மூழ்கி இருப்பது ஆதாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒப்புமையாக இருக்கின்றது.  ஆனால், மேலான ஆவிக்குரிய எண்ணமுடையவர்களாய் வாழ்வது வானத்துக்குரிய கிறிஸ்து வாழ்ந்த வாழ்க்கை போன்றது.  

இதனையே, "மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே." ( 1 கொரிந்தியர் 15 : 48 ) என்று கூறுகின்றார் பவுல் அடிகள். 

நாம் இந்த உலக ஆசைகொண்டு நமது உடலுக்குரியவைகளையே தேடிக்கொண்டிருப்போமானால் நாம் தேவனுடைய அரசில் சேரமுடியாது. ஏனெனில் அழிவுள்ளவை அழிவில்லாத தேவனுடைய ராஜ்யத்தில் சேர்வதில்லை. "சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை." ( 1 கொரிந்தியர் 15 : 50 ) அழிவுள்ள உலக ஆசைகளையே நிறைவேற்றவேண்டுமென்று வாழ்பவர்கள் அழியாமையுள்ள தேவனுடைய அரசில் சேர்வதில்லை. 

எனவே நாம் இந்த உலகத்தில் அழிவில்லாத செல்வத்தைச் சேர்க்க முயலவேண்டும்.  "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். " ( 1 கொரிந்தியர் 15 : 53)

அன்பானவர்களே, நமது இலக்கு நித்தியஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு. ஆவிக்குரிய வாழ்வில் நாம் வெற்றிபெற்று நித்தியஜீவனைப் பெறுகின்றோம். அல்லது தோல்வியுற்று நித்திய நரகத்தினுள் செல்கின்றோம். மரணத்துக்குப்பின் நாம் அழிவுறாத நித்திய ஜீவனைப் பெறுவோமானால் மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று பொருள். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்." ( 1 கொரிந்தியர் 15 : 54 ) என்று கூறுகின்றார்.

நாம் பூமியிலிருந்துண்டான முந்தின மண்ணான ஆதாமைப்போல இல்லாமல் வானத்திலிருந்து வந்த  இரண்டாம் மனிதனாகிய  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்போல வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். எனவே முந்தின மனிதனது உலக இச்சையைப்போல அல்லாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருக்குமிடத்திலுள்ள மேலானவைகளையே தேடுவோம். அப்போது அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்;  நமது மரணம் ஜெயமாக விழுங்கப்படும்.

ஆதவன் 🔥 876🌻 ஜூன் 22, 2023 வியாழக்கிழமை

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார், உன்  வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்கீதம் - 37:4 & 5) 

பலரும் கர்த்தரிடம் விசுவாசமும் நம்பிக்கையுமாய் இருப்பது பெரும்பாலும் வாழ்வில் நல்லதே தொடர்ந்து நடக்கும்போதுதான். எதிர்மறையான வாழ்க்கை சூழல் ஏற்படும்போது பெரும்பாலும் பலரும் நிலைகுலைந்து விடுகின்றனர். நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன், தேவனுக்கு ஏற்றபடிதான் வாழ்கின்றேன், எனக்கு ஏன் இந்தத் துன்பம்? ஏன் எனக்கு மட்டும் பிரச்சனைமேல் பிரச்னை வருகின்றது? என தேவனையே கேள்விகேட்கத் துணிந்துவிடுகின்றனர்.

ஆனால், வேதாகம பக்தர்கள் பலரும் உயர்வோ தாழ்வோ வறுமையோ இல்லாமையே எதுவாக இருந்தாலும் கர்த்தரே போதும் என்று வாழ்ந்தனர்.  

ஆபகூக் தீர்க்கதரிசி "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." (  ஆபகூக் 3 : 17, 18) என மகிழ்ச்சியுடன் கூறுகின்றார்.

கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிருத்தல் என்பது என்ன வந்தாலும் அவர்மேலுள்ள விசுவாசத்தில் குறைவுபடாமல் அவரையே நம்பி வாழ்வது. பக்தனான யோபு கூறுவதுபோல, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்" என்று துணிந்து நிற்பது.

அடுத்து இங்குக் கூறப்பட்டுள்ள இன்னொரு விஷயம், வெறும் விசுவாசம் மட்டுமல்ல, 'உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து' என்று கூறப்பட்டுள்ளபடி நமது வழிகள் கர்த்தரது  வழியாக இருக்கவேண்டியது அவசியம்நமது வாழ்வை அவரது வழியில் நடத்த ஒப்புவித்துவிடவேண்டும். மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது,  அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. நமது இருதயத்தின் வேண்டுதல்கள் தேவனுக்கேற்ற வேண்டுதல்களாக இருக்கவேண்டும். அப்போது அவர் அவற்றை நிறைவேற்றுவார். அதற்குமேலும் நிறைவேற்றுவார்.

அன்பானவர்களே, நான் இப்படிக் கூறுவது பலருக்கும் வெற்று  உபதேசம்போல இருக்கலாம். ஆனால் எனது அனுபவத்திலிருந்து கூறப்பட்டுள்ள  வார்த்தைகளே இவைஎனது ஆவிக்குரிய 30 வருட வாழ்வின் அனுபவத்தில் கண்டு உணர்ந்தவைதுன்பங்கள் வரும்போது மனது சோர்ந்துபோவது தவிர்க்கமுடியாதது. நானும் மனம் சோர்ந்து போயிருக்கிறேன். ஆனால் அவிசுவாசம் ஏற்பட்டதில்லை. ஒரு துன்பம் அல்லது பிரச்சனை ஏற்படும்போது விசுவாசமாய் இருக்கும்போது ஏதாவது ஒரு அற்புதமான காரியம் செய்து நாம் நமது விசுவாசத்தை விட்டுவிடாமலிருக்க அவர் உதவுவார். 

ஆம், "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்". தேவ வசனம் பொய்யாய் இராது. அவரது வார்த்தைகளெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன. "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 ) எனவே எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்போம்.

ஆதவன் 🔥 877🌻 ஜூன் 23, 2023 வெள்ளிக்கிழமை

"அப்பொழுது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றார்."( யோவான் 11 : 16 )

கிறிஸ்துவோடுகூட சாகவும் துணிந்த அப்போஸ்தலரான தோமாவின் விசுவாச அறிக்கைதான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

யூதேயாவிலுள்ள பெத்தானியா ஊர் மார்த்தா, மரியா, லாசர் குடும்பத்தின்மேல் இயேசு தனி அன்பு கொண்டிருந்தார். லாசர் பெரிய வியாதியுற்று மரணத்திற்கு ஏதுவான நிலையிலிருந்தான். இயேசு கிறிஸ்து தனது சீடர்களோடு யோர்தானுக்கு மறுகரையில் இருந்தார். அப்போது லாசரின் சகோதரிகள் இயேசுவுக்கு ஆளனுப்பி விபரத்தைக் கூறி தங்களிடம் வருமாறு அழைத்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து உடனேயே புறப்படாமல் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தினார். அதற்குள் லாசர் இறந்துவிட்டான். 

எனவே இயேசு கிறிஸ்து யூதேயாவுக்குச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் அதற்குமுன்புதான்   யூதேயாவிலிருந்த யூதர்கள்  அவர்மேல் கல்லெறிய முயன்றிருந்தனர். இயேசு கிறிஸ்து லாசர் இறந்ததை நேரடியாக சீடர்களிடம் கூறாமல் முதலில், அவன் நித்திரையடைந்திருக்கிறான் நான் எழுப்பப் போகின்றேன் என்று கூறினார். பின்னர் அவன் இறந்துவிட்டான் எனும்  உண்மையைக்கூறினார்.

சீடர்களெல்லாம் யூதேயாவுக்குச் செல்லப் பயந்தனர்.ஏனெனில் அங்கு சென்றால் யூதர்கள் அவர்மேல் கல்லெறிவார்கள், நாமும் கல்லடிபடவேண்டமென்று நினைத்தனர். ஆனால் அப்போஸ்தலரான தோமா இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து சாகவும் துணிந்து,  "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்"  என்று சகசீடர்களை அழைக்கின்றார். அதாவது தோமா, இயேசு கிறிஸ்து யூதர்களால்  கல்லடிபட்டுச் சாகப்போவது நிச்சயம் என்று நம்பினார். அனால் அப்படிச் செத்தால் நாமும் அவரோடுகூடச் சாவோம் வாருங்கள் என்று மற்றச் சீடர்களையும் அழைக்கின்றார்.  

அன்பானவர்களே, அங்கு இயேசு கிறிஸ்துவுடன் தலைமை அப்போஸ்தலர் பேதுரு, இயேசு கிறிஸ்துவின் அன்புச் சீடரான யோவான், யாக்கோபு எல்லோரும் இருந்தனர். எவரும் கூறத்துணியாத வார்த்தைகளை அப்போஸ்தலரான தோமா கூறினார். அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவை அன்பு செய்தார். கிறிஸ்து இல்லாமல் வாழ்வதைவிட அவரோடுகூட சாவதுமேல் என்று உறுதிகொண்டார் என்பதையே இது காண்பிக்கின்றது. 

நாம் இன்று கிறிஸ்துவுக்காக சாகவும் தயாராக இருக்கவேண்டுமென்று நான் கூறவரவில்லை. ஆனால் அது மேலான இரத்தசாட்சிகளின் விருப்பமாக இருந்தது. இன்று குறைந்தபட்சம்,  கிறிஸ்து இல்லாத வாழ்க்கை நமக்கு வேண்டாம் எனும் முடிவாவது நாம் எடுக்கலாமல்லவா? கிறிஸ்து விரும்பாத  காரியங்களை நாம் செய்யும்போது கிறிஸ்துவைவிட்டு நாம் அந்நியமாகின்றோம். அதாவது அவர் நம்மோடு கூட வருவதையோ நாம் அவரோடு இருக்க வேண்டுமென்பதையோ நாம் விரும்பவில்லை என்பதே அதன் பொருள். 

இந்த வசனம் பாவத்துக்கு மரிக்கும் வாழ்க்கையையே இன்று குறிக்கின்றது. கிறிஸ்துவோடு பாவத்துக்கு மரித்த ஒரு வாழ்வோம். ஆம், அவரோடுகூட பாவத்துக்குச் சாவோம். கிறிஸ்துவுக்காக நாம் பாவத்துக்கு மரிக்கும்போது அவர் வரும்போது நம்மை அவருடனேகூட எழுப்புவார். தோமாவைப்போல நாமும் சொல்லுவோம், "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்!!!"

ஆதவன் 🔥 878🌻 ஜூன் 24, 2023 சனிக்கிழமை

"நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 )

நான் சந்திக்கும் சிலர் என்னிடம் சிலவேளைகளில் கூறுவது, "என்ன பிரதர், எத்தனை வருஷமாய் ஜெபிக்கிறேன், ஒண்ணும் நடக்கமாட்டேன்கிறது. உண்மையிலேயே ஆண்டவர் நான் ஜெபிப்பதைக் கேட்கிறாரா என்றே சந்தேகமாயிருக்கிறது ...."  

பொதுவாக நாம் அனைவருமே நமது ஜெபத்துக்குத் தேவன் உடனடியாகப் பதிலளிக்கவேண்டுமென்று எண்ணுகின்றோம். ஆனால், தேவனது சித்தத்துக்கு நாம் பொறுமையோடு காத்திருப்பதில்லை. அப்போஸ்தலரான பவுல் அடிகள் தனது உடலிலிருந்த ஒரு நோய்க்காக (உடலில் இருந்த முள் என்று அதனைக் கூறுகின்றார்) மூன்று முறை ஜெபித்தார். அதனை, "அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்." ( 2 கொரிந்தியர் 12 : 8 ) என்று கூறுகின்றார். 

அதாவது முதலில் அதற்காக ஜெபித்திருப்பார், தேவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மீண்டும் இரண்டாம் முறையாக ஜெபித்தார். அப்போதும் எந்த பதிலையும் தேவன் கொடுக்கவில்லை. மீண்டும் மூன்றாம் முறையாக ஜெபித்தார். ஆனால் தேவன் அவரது நோயினை குணமாக்காமல், "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று பதில் கூறிவிட்டார். இப்படி தேவன் தரும் எதிர்மறையான பதிலையும் நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். 

அன்பானவர்களே, பவுல் அடிகளுக்கு தேவன் அவரது ஊழியத்தைக்குறித்து வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருந்தார். அதுபோல நமக்கும் தேவன் ஒருவேளை சில வாக்குறுதிகளைத் தனிப்பட்ட முறையில் தந்திருக்கலாம். அல்லது வேதாகமத்திலுள்ள வாக்குறுதிகளை நாம் விசுவாசித்து ஜெபிக்கலாம். ஆனால் தேவனது பதிலைப் பெறுவதற்கு நாம் காத்திருக்கவேண்டியது அவசியம். இதனையே, "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வசனத்தில் முதற்பகுதியில் "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து" என்ற வார்த்தைகள் வருவதை நாம் கவனிக்கவேண்டும். வெறுமனே ஜெபிப்பதல்ல, அவருடைய சித்தத்தின்படி நமது செயல்கள் இருக்கவேண்டியது அவசியம். அப்படி தேவ சித்தத்தின்படி செய்து பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.

நாம் சோர்ந்துபோகாமல் எப்போதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதற்காக இயேசு கிறிஸ்து,   தேவனுக்குப் பணியாதவனும் மனிதரை மதிக்காதவனுமான அநீதியுள்ள ஒரு நீதிபதியைக் குறித்த உவமையைக் கூறினார். அந்த உவமையின் இறுதியில்  அவன் தன்னிடம் முறையிட்ட பெண்ணுக்கு நீதிவழங்குகின்றான். இந்த உவமையைக் கூறிய இயேசு கிறிஸ்து இறுதியில் கூறுகின்றார், "அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18 : 7 )

அன்பானவர்களே, சோர்ந்துபோகவேண்டாம்.  நிச்சயமாக நமது ஜெபத்துக்குத் தேவன் பதிலளிப்பார். ஆனால், தேவ பதிலையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு பொறுமை நமக்கு வேண்டியதாயிருக்கிறது.

ஆதவன் 🔥 879🌻 ஜூன் 25, 2023 ஞாயிற்றுக்கிழமை

"நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்." ( நீதிமொழிகள் 4 : 18, 19 )

காலையில் கிழக்கில் உதிக்கும் சூரியன் நடுப்பகல்வரை வெளிச்சம் அதிகரித்து அதிகரித்து வரும். மதியத்துக்குப்பின்போ ஒளிமங்கி மங்கி கடைசியில் இருள் சூழ்ந்துகொள்ளும். எனவேதான் இன்றைய வசனம் நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கும் சூரியன் ஒளிபோல இருக்கின்றது என்று கூறுகின்றது. பாதை என்று இங்குக் குறிப்பிடப்படுவது அவர்களது வாழ்க்கை.   

மட்டுமல்ல, உலகமே இருளில் மூழ்கினாலும்,  அல்லது நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களது வாழ்க்கை இருள் சூழ்ந்ததாக இருந்தாலும் நம்மை அவர் வித்தியாப்படுத்திக் காட்டுவார்.  நீதியின் சூரியனான கிறிஸ்துவை ஒளி நம்மேல் ஒளிரும். இதனை, "இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்." ( ஏசாயா 60 : 2, 3 ) என்று வேதத்தில் வாசிக்கலாம். 

ஆம், வெளிச்சத்தைச் சார்ந்த மக்களாக வாழும்போது நம்மை நாம் பிறருக்கு வெளிச்சம்போட்டுக் காட்டத் தேவையில்லை. தானாகவே மக்கள் நமது ஒளியை உணர்ந்துகொள்வார்கள். நம்மைத் தேடி வருவார்கள்.  இதனைத்தான் இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 ) என்று.
 
இப்படி நாம் வெளிச்சத்தின் மக்களாக வாழ்வது நமக்கு மட்டுமல்ல, அது பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்துவதாகவும் இருக்கும். "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." ( மத்தேயு 5 : 16 ) அதாவது, நமது ஒளியுள்ள வாழ்கையினைக்  கண்டு மற்றவர்கள் பிதாவாகிய தேவனை அறிந்துகொண்டு அவரை மகிமைப்படுத்துவார்கள். 

இன்றைய வசனத்தின் பிற்பகுதி துன்மார்க்கர்களது வாழ்கையினைக் குறித்துக் கூறுகின்றது. அவர்கள் நல்ல செழிப்பான வாழ்க்கை வாழ்வதுபோல உலகுக்குத் தெரிவார்கள். ஆனால் அவர்களது பாதை (வாழ்க்கை) தேவனுக்குமுன் காரிருளைப்போலிருப்பதால் தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள். இருளான பகுதிகளில் கிடக்கும் கற்கள், முள், பள்ளங்கள் இவை கண்ணுக்குத் தெரிவதில்லை. எனவே அவர்கள் இடறுகின்றனர். 

அன்பானவர்களே, ஒரு நீதியுள்ள வாழ்க்கை வாழ நம்மைத் தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். வெறும் உலக நீதியல்ல; பரிசுத்த ஆவியின் நீதி பாதையில் நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். ஏனெனில் உலகத்தின் நீதியெல்லாம் அழுக்கான கந்தையைப் போல இருக்கிறது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64 : 6 )

தேவ நீதியில் வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது நமது பாதை (வாழ்க்கை) நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.

ஆதவன் 🔥 880🌻 ஜூன் 26, 2023 திங்கள்கிழமை

"ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்." ( ரோமர் 7 : 21 )

நல்லவர்களாக வாழவேண்டும் எனும் எண்ணம் பொதுவாக எல்லோருக்குமே இருக்கின்றது. அதனால்தான் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் அல்லது பிறந்தநாட்களிலும் பலரும் ஏதாவது தீய செயலை விட்டுவிடவேண்டுமென்று எண்ணி முடிவெடுக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த நண்பரொருவர் கடந்த பத்து ஆண்டுகளாக, "இந்தப் புத்தாண்டுமுதல் குடியை விட்டுவிடப்போகிறேன் என்று முடிவெடுத்துள்ளேன்" என்று கூறிக்கொண்டிருகிறார். அவரது அந்த முடிவின்படி ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்கள் மட்டுமே குடிக்காமல் இருக்கிறார். 

சென்றமுறை இரண்டு மாதங்கள் குடிக்காமல் இருந்தார்.  பிறகு திடீரென்று குடித்துவிட்டு வந்துவிட்டார். அவரிடம் கேட்டால், "எனது மச்சினன் மகன் திருமணம் போன வாரம் நடந்தது. அப்போது ஒரு சந்தோஷத்துக்காகக்  குடித்தேன். இப்போ பழையபடி கதை தொடருகிறது" என்கிறார்.  அன்பானவர்களே, இதுபோல பல கெட்டச்  செயல்களைப் பலரும் விட்டுவிட நினைக்கின்றனர். ஆனால் அவர்களால் அது முடிவதில்லை. காரணம் நன்மைசெய்ய விரும்புகிற அவர்களிடம் தீமையென்ற ஒரு பிரமாணம் இருக்கின்றது

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது." ( ரோமர் 7 : 23 ) பவுல் அடிகள் குடியைக்குறித்து இப்படிச் சொல்லவில்லை. மாறாக, தேவனுக்கேற்ற பரிசுத்தமாக வாழவேண்டும் என எண்ணும் அவரிடம் அப்படி வாழ ஏதோ தடையாக இருப்பதைக் குறிப்பிடுகின்றார்.  

எனவே அவர் கூறுகின்றார், "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?" ( ரோமர் 7 : 24 )

அன்பானவர்களே, பவுல் அடிகள் ஏங்குவதைப்போல ஒரு ஏக்கம் நமக்கு வேண்டும். இந்தப் பாவப் பழக்கவழக்கத்திலிருந்து என்னை யார் விடுவிப்பார்? கட்டளைகள் நம்மை விடுதலையாக்காது. கட்டளைகள் எது பாவம் எது பாவமல்ல என்பதைகூறுமே தவிர அவை நம்மை விடுதலை ஆக்க மாட்டாது. மாறாக, கர்த்தரது ஆவியானவரின் பிரமாணத்துக்குள் நாம் வரும்போது மட்டுமே நமக்கு விடுதலைக் கிடைக்கும். ஆம், எனவேதான் "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்கின்றார் பவுல் அடிகள். 

அன்பானவர்களே, பாவத்திலிருந்து விடுதலை பெற நமது சுய பலத்தால் முடியாது. பாவத்திலிருந்து விடுபடவேண்டும் எனும் ஆசையோடு நம்மை தேவனுடைய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்படி தேவ ஆவியானவர் நம்மை நடத்தும்போதுதான் நாம் நமது உடல் பலயீனங்களை மேற்கொள்ள முடியும்.

"தேவனுடைய ஆவி உங்களில்  வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) ஆம்,  நாம் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்த ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்படி தேவனுடைய ஆவி நம்மில் வாசமாயிருந்தால், நாம்  மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குரியவர்களாக இருப்போம். அப்போதுதான் நம்மால் பாவத்தை மேற்கொண்டு ஆவிக்குரிய மேலான வாழ்க்கை வாழ முடியும்.
 
ஆதவன் 🔥 881🌻 ஜூன் 27, 2023 செவ்வாய்க்கிழமை

"மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." ( நீதிமொழிகள் 19 : 21 )

பொதுவாக மனிதர்களாகிய நாம் அனைவருமே நமது எதிர்காலம், நமது குழந்தைகளது எதிர்காலம், நமது  தொழில், வேலைவாய்ப்புகள் இவைகுறித்து பல்வேறு எண்ணங்களைக் கொண்டுள்ளோம். நாம் சிந்திப்பது எல்லாமே நமது நன்மைக்காகவே. எனவே நாம் எப்போதும் நமக்கு நல்லதே நடக்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். யாரும் தங்களது வாழ்வு அல்லது தங்கள் குழந்தைகளின் வாழ்வு மோசமானதாகப் போகவேண்டுமென்று எண்ணுவதில்லை.  

நாம் நமக்குரிய வருமானத்தில் என்னவெல்லாம் செய்யலாமென்று திட்டமிடுகின்றோம். ஆனால் அவை பொதுவாக நாம் எண்ணியபடி எப்போதுமே நிறைவேறுவதில்லை. எதிர்பாராத செலவினங்கள் நமது திட்டத்தை மாற்றியமைக்க வைத்துவிடுகின்றன. இதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." என்று. நாம் எண்ணுவதும் திட்டமிடுவதுமல்ல, கர்த்தரது எண்ணமே நமது வாழ்வில் நிறைவேறும்.

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." ( யாக்கோபு 4 : 13, 14 ) என்கின்றார். 

அதற்காக நாம் திட்டமிடுவதோ, எதிர்காலத்தைக்குறித்து சிந்திப்பதோ கூடாது என்று பொருளல்ல. யாக்கோபு அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 15 ) சில ஆவிக்குரிய மனிதர்கள் இப்படிக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். " பிரதர், கார்தருக்குச் சித்தமானால் நாம் அடுத்த வாரத்தில் ஒருநாள் கூடி இதுகுறித்து பேசுவோம்" என்பார்கள். 

மேலும் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையும்போது, தேவனோடுள்ள நமது தொடர்பு அதிகரிக்கும்போது அவரே நமது உள்ளத்தில் சில விருப்பங்களைத் தோன்றச்செய்வார். அல்லது நம்மை ஒரு செயலைச் செய்யும்படித் தூண்டுவார். அத்தகையைச் செயல்களை நாம் செய்யும்போது அவை வெற்றியாக முடிவடையும். அதாவது பல்வேறு விதங்களில் மனித அறிவால் சிந்தித்துத் திட்டமிடுவதுபோலல்ல இது. திடீரென்று நமக்குள் தோன்றும் ஒரு விருப்பம்.  அதை செய்வதற்கான பெலன். இதுவே தேவன் நடத்துவது.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்." ( பிலிப்பியர் 2 : 13 ) என்று கூறுகின்றார். தேவனே நம்மில் இந்த விருப்பத்தையும் செயலையும் செய்வதால் நாம் எளிதாக அந்தச் செயலைச் செய்துமுடித்துவிடுவோம். 

எனவே அன்பானவர்களே, நமது சிந்தனை செயல்கள் அனைத்தையும் தேவனே ஆளும்படி அவரிடம் ஒப்படைத்திடுவோம். நமது இருதயத்தின் எண்ணங்கள் பலவாக இருந்தாலும் அது தேவனுக்கு உகந்ததாக அவரது யோசனையாகவும் இருக்குமானால் அது நமது வாழ்வில் நிச்சயம் நிறைவேறும்.

ஆதவன் 🔥 882🌻 ஜூன் 28, 2023 புதன்கிழமை

"என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்." ( சங்கீதம் 119 : 36 )

பணம் சம்பாதித்தல் என்பது வேறு, பொருளாசை என்பது வேறு. நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு பணம், உலகப் பொருட்கள் தேவையாக இருக்கின்றன. எனவே இவற்றை சம்பாதிக்க நாம் உழைக்கவேண்டியது அவசியம். "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே." ( 2 தெசலோனிக்கேயர் 3 : 10 ) என்கிறார் பவுல் அடிகள். எனவே நாம் உழைத்து சம்பாதித்து உண்ணவேண்டியது அவசியம். 

ஆனால், பொருளாசை என்பது வேறு. மேலும் மேலும் பொருள் சேர்க்கும் ஆசையில் சிலர் குடும்பம், சக உறவுகள், இவற்றைவிட பணத்தையும் பொருட்களையும் இச்சித்து மனிதர்களுக்குத் துரோகம் செய்து, அல்லது ஏமாற்றி இரவும் பகலும் பணத்தையும் சொத்து சுகங்களையும் எண்ணி வெறிகொண்டு அலைவதைக் குறிக்கின்றது. 

இத்தகைய மனிதர்கள் நல்லவர்களாக இருக்கமுடியாது. பணம் சம்பாதிக்கவேண்டி என்னென்ன தீய வழிகள் உண்டோ  அந்த வழிகளிலெல்லாம் முயலத் தயங்கமாட்டார்கள். நாம் பத்திரிக்கைச் செய்திகளைப் படிக்கும்போது இது புரியும். பல அநியாய காரியங்களான  திருட்டு, கொலை, விபச்சாரம், வேசித்தனம், போன்ற செயல்களின் பின்னணியில் இருப்பது பண ஆசை அல்லது பொருளாசை.  எனவேதான் வேதம் கூறுகின்றது, "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்."  ( 1 தீமோத்தேயு 6 : 10 )

ஆம், மேற்படி வசனம் கூறுகின்றது, சாதாரண மக்கள் மட்டுமல்ல விசுவாச வாழ்க்கை வாழும் பலர் கூட பொருளாசை அல்லது பண ஆசையால் தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுகின்றார்கள். அப்படி விசுவாசத்தை விட்டு விலகும் மக்கள் பின்பு அதனால் வரும் வேதனைகளால் காலம் முழுவதும் அவஸ்தைப்படுகின்றனர். 

பொருளாசைபற்றி இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல ." ( லுூக்கா 12 : 15 ) ஆம், எவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தாலும் அவை ஒரு மனிதனை நரகத்துக்குத் தப்புவிக்காது. அது அவனுக்கு ஜீவனல்ல; அது ஆத்தும மரணமே. நித்திய நரக அக்கினிக்குநேராக அது நம்மைக் கொண்டு சென்றுவிடும்.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை." ( 1 கொரிந்தியர் 6 : 10 ) என்று கூறுகின்றார். இதனாலேயே இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் சங்கீத ஆசிரியர் தேவனே,   "என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்." ( சங்கீதம் 119 : 36 ) என்று ஜெபிக்கின்றார். 

இந்த ஜெபத்தையே நாமும் ஜெபிக்கவேண்டியது அவசியம். நாம் பணத்தையல்ல, தேவனுடைய பரிசுத்த சாட்சிகளின் - புனிதர்களின் வாழ்க்கை வழிகளைச் சார்ந்துகொள்ளும்படி வேண்டுதல் செய்யவேண்டும். அப்போது தேவனுடைய ஆவியானவர் அப்படி ஒரு வாழ்க்கை வாழ  நமக்கு உதவிடுவார். 

ஆதவன் 🔥 883🌻 ஜூன் 29, 2023 வியாழக்கிழமை

"ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." ( ஏசாயா 48 : 18 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் பழைய ஏற்பாட்டு அடிப்படையில் சொல்லப்பட்ட வசனமாக இருந்தாலும் நாம் புதிய ஏற்பாட்டுக்கால மக்கள் ஆனதால் கிறிஸ்துவின் கிருபையின் உபதேசத்துக்கு உட்பட்டவர்கள். எனவே கிறிஸ்துவின் அன்புக் கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது இந்த வசனம் நமது வாழ்வில் உறுதிப்படும். 

பழைய ஏற்பாட்டில் மோசே மூலம் தேவன் பல கட்டளைகளை இஸ்ரவேல் மக்களுக்கு அளித்திருந்தார். பத்துக்கட்டளைகளைத்தவிர சிறியதும் பெரியதுமான கட்டளைகளை நாம் மோசேயின் கட்டளைகளில் பார்க்கின்றோம். வேத அறிஞர்கள் அவற்றைக் கணக்கிட்டு 613 கட்டளைகள் உள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் இவ்வளவு கட்டளைகள் இருந்தும் அவை மனிதர்களை நல்வழிப்படுத்தக் கூடாதவைகளாகவே இருந்தன. 

இந்த 613 கட்டளைகளையும் இயேசு கிறிஸ்து இரண்டே கட்டளைகளுக்குள் அடக்கிவிட்டார். "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்." ( கலாத்தியர் 5 : 14 ) நியாயப்பிரமாணம் முழுவதும் இந்த இரண்டு கட்டளைகளுக்குள் அடங்கிவிடுகின்றது. 

கட்டளைகளால் கூடாததை தனது கிருபையால் செய்துமுடிக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார்.  "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான். 

பழைய ஏற்பாட்டுப் பரிசேயர்கள், கட்டளைகளுக்கு முன்னுரிமை கொடுத்தனரேத்  தவிர அன்பையும், நீதியையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர். இயேசு கிறிஸ்து கூறினார்,  "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்" ( மத்தேயு 23 : 23 )

ஆம், நீதியானது கட்டளைகளைக் கடைபிடிப்பதால் வருவதில்லை. அப்படி கட்டளைகளால் நீதி வருமானால் மோசேயின் கட்டளைகளே போதுமாக இருந்திருக்கும். கிறிஸ்து உலகினில் வந்து பாடுபடத் தேவையே இருந்திருக்காது. மோசேயின் கட்டளைகள் போதுமானவையாக இல்லாததால்தான்  கிறிஸ்து வந்தார். இதனையே, "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

எனவே நாம் கிறிஸ்து கூறிய "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக"  என்கிற ஒரே  வார்த்தையான கட்டளைக்குக் கீழ்படியும்போது நியாயப் பிராமண கட்டளைகள் அனைத்தையும் நம்மையறியாமலே நிறைவேற்றி விடுகின்றோம். இப்படி நிறைவேற்றும்போது இன்றைய வசனம் கூறுவதுபோல, நமது சமாதானம் நதியைப்போலும், நமது நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். அதாவது நமது சமாதானம்  நதியைப்போல அகன்று நீண்ட ஒன்றாகவும் கடல் அலையானது எப்படி முடிவின்றி, ஓய்வின்றி இருக்கின்றதோ அதுபோல முடிவற்ற நீதியாக  இருக்கும்.  

ஆதவன் 🔥 884🌻 ஜூன் 30, 2023 வெள்ளிக்கிழமை

"கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்." ( சங்கீதம் 25 : 8 )

நமது தேவன் பாவத்தை வெறுக்கிறாரேத் தவிர பாவிகளை நேசிக்கிறார். பாவிகள் அழிந்து நரக அக்கினிக்கு நேராகச் செல்வது தேவனது விருப்பமல்ல. அவர் நல்லவரும் உத்தமருமாய் இருக்கிறபடியால் பல்வேறு வழிகளில் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அவர்கள் தங்கள் பாவ வழியைவிட்டு மனம்திரும்பி வரவேண்டுமென்று காத்திருக்கின்றார். அப்படி பாவிகள் மனம் திரும்பும்போது மகிழ்ச்சியடைகின்றார். 

இதனையே இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார். "உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 12, 13 )

மனிதர்கள் தங்கள் சுய செயல்பாடுகளால் தேவனைவிட்டுத் தடம் மாறிச் செல்லும்போது தேவன் பல்வேறு விதங்களில் அவர்களோடு இடைப்படுகின்றார். தோல்விகள், பிரச்சனைகள் இவைகள் மனிதர்கள் தங்களை நிதானித்துப் பார்க்கத்  தேவன் கொடுக்கும் சந்தர்ப்பங்கள். சில வேளைகளில் வழி விலகும்போது தனது ஊழியர்களைக்கொண்டு சரியான வழியினைக் காட்டுகின்றார். ஆனால் பல மனிதர்கள் தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. 

ஆனால், கர்த்தரது குரலுக்குச் செவிகொடுக்கும்போது அதாவது கர்த்தரைக்குறித்த பயம் உள்ளத்தில் ஒருவனுக்கு ஏற்படும்போது அவனுக்குச் சரியான வழியைக் காட்டுகின்றார். இதனையே தாவீது, "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்." ( சங்கீதம் 25 : 12 ) என்று கூறுகின்றார். 

ஆணடவரது இரண்டாம் வருகை ஏன் தாமதிக்கின்றது என்பதைக் கூறவரும்போது அப்போஸ்தலரான பேதுரு, "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 )

ஆம், கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறபடியால் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று நீடிய பொறுமையோடிருக்கின்றார். 

"கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்." எனும் வசனம் தாவீது தனது அனுபவத்தில் கண்டது.  பத்சேபாளிடம் விபச்சாரப் பாவத்தில் விழுந்து அதன் தொடர்ச்சியாக கொலை செய்தார். கர்த்தர் நல்லவரும் உத்தமருமாய் இருந்ததால் நாந்தான் தீர்க்கதரிசி மூலம் அவருக்கு வழியைத்  தெரிவித்தார். 

அன்பானவர்களே, சிலவேளைகளில் நமது வாழ்க்கையிலும் நாம் வழி தவறலாம். அப்படி வழி தவறும்போது கர்த்தர் பல்வேறு விதங்களில் நம்மை உணர்த்துவார். அந்தச் சத்தத்துக்கு நாம் செவிகொடுக்க வேண்டும். நமது வழிகள் தவறு என்றால் திருத்திக்கொள்ளவேண்டும். அப்போது கிறிஸ்து கூறியதுபோல  சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது (பாவமே செய்யாத) ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், நம்மைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவார்.