Thursday, October 06, 2022

நாம் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாக முடியாது

 ஆதவன் 🖋️ 618 ⛪ அக்டோபர் 07,  2022 வெள்ளிக்கிழமை   

"மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?" ( யோபு 4 : 17 )

யோபு சாத்தானால் சோதிக்கப்பட்டு அனைத்துச் செல்வங்களையும் உடல் நலத்தையும் இழந்து இருந்ததைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கவந்த தேமானியனாகிய எலிப்பாஸ் எனும் நண்பனைப்பார்த்து தேவன் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார்.

இன்றைய வசனம், மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? என்று சந்தேக கேள்வி எழுப்புகின்றது. இதற்குப் பதில் மனிதன் தேவனைவிட நீதிமானாகவும் சுத்தமானவனாகவும் முடியாது என்பதுதான். ஆனால் புதிய ஏற்பாடு,  நீதிமானாகவும்  சுத்தமானவனாகவும்  இல்லாதவனையும் தேவன் தன்னோடு தனக்கு ஒப்பாகச்  சேர்த்துக்கொள்ள விரும்புவதைக் கூறுகின்றது. இதற்காக இயேசு கிறிஸ்து பின்வருமாறு  ஜெபிக்கவும் செய்தார்.

"பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 )  அதாவது, நீதியும் பரிசுத்தமும் இல்லாத மனிதர்களும் பிதாவோடும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் ஒன்றாக இருக்க முடியும். இந்த மேன்மை மனிதனுக்கு இயேசு கிறிஸ்துவினால் கிடைத்தது.

ஆனால் இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களை மிஞ்சிய நீதிமானாகக் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். அந்த மிஞ்சுதல் அவர்களை கடவுளைவிடத் தாங்கள் மேலானவர்கள் என எண்ணும் நிலைமைக்குக் கொண்டுபோய்விடுகின்றது.  இன்று இதுபோல பல ஊழியர்கள் இருக்கின்றனர். தங்களது பலவீனங்களை மறைத்து; தங்களது பாவங்களை மறைத்து வாழ்ந்துகொண்டு அவை வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நீதிமான்கள்போல நடிக்கின்றனர். அந்த நடிப்பு தங்களை தேவனைவிட நீதிமானாக அவர்களை வெளிக்காட்டிகொள்ளச் செய்கின்றது. 

ஒருமுறை நாங்கள் சிலர் ஒரு ஊழியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, "நடிகர் விஜய் இருக்கிறாரே....." என்று எனது நண்பரான ஊழியர் ஒருவர் பேசத் துவங்கவும் அந்த ஊழியர், "விஜய்யா? எனக்கு அப்படி ஒருவரைத் தெரியாது" என்றார். அதாவது நடிகர் பெயரைத் தெரியுமென்று கூறினால் இவரை  உலக ஆசையை விடாதவர் என்று மற்றவர்கள் எண்ணிக்கொள்வார்களாம். இத்தகைய ஊழியர்களே தேவனைவிட தங்களை மேலானவர்களாக காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்.    

ஆபாசப் படங்களைத் தங்கள் கைபேசியில் பார்த்து ரசிக்கும் ஊழியர்கள் பலர் உண்டு. ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து ரசிக்கும் ஊழியர்கள் உண்டு. ஆனால் இவர்களது பிரசங்கங்களில் தங்களைத் தேவ தூதர்கள்போலவும் சபைக்குவரும் விசுவாசிகளை மகா பாவிகள்போலவும் கருதி பேசுவார்கள். இத்தகைய ஊழியர்கள் மனம் திரும்பி தேவனின் இரகத்தைக் கெஞ்சவேண்டியது அவசியம். 

இயேசு கிறிஸ்து கூறினார், "சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல." ( மத்தேயு 10 : 24 ) என்று. மேலும், "சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்." என்றார். எனவே நாம் கிறிஸ்துவைப்போலவே வாழ அழைக்கப்பட்டுள்ளோம். 

அன்பானவர்களே, இன்றைய வசனம் கூறுகின்றபடி நாம் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாக முடியாது; நம்மை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமானாக முடியாது; ஆனால் கிறிஸ்து இயேசுவின் கிருபையினால் அவருக்கு ஒப்பானவர்களாக மாற முடியும். அப்படி நம்மை மாற்றிடவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். நம்மை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து மீட்பு அனுபவம் பெற்று வாழும்போது அவர் நம்மை அதற்குத் தகுதி ஆக்குவார். கிறிஸ்துவைப்போல  அவர் நம்மை மாற்றிட வேண்டுவோம். இத்தகைய வேண்டுதல்மேல் அவர் அதிக பிரியமுள்ளவராய்  இருக்கிறார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: