Wednesday, October 26, 2022

எஸ்றாவைப் போல நமது இருதயத்தையும் பக்குவப்படுத்துவோம்.

 ஆதவன் 🖋️ 638 ⛪ அக்டோபர் 27,  2022 வியாழக்கிழமை

"கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்." ( எஸ்றா 7 : 10 )

வேதபாரகனான எஸ்ரா என்பவரைக் குறித்து அருமையான விளக்கத்தை இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது எஸ்ரா வெறும் போதகனாக மட்டும் இருக்கவில்லை. அவர் தேவனுடைய வேதத்தை ஆராய்ச்சி செய்பவராக இருந்தார். மட்டுமல்ல, மிக முக்கியமாக வேதம் கூறுவதன்படி நடக்க அவர் தன்னை ஒப்புவித்திருந்தார்.  இப்படி வேதத்தை ஆராய்ச்சிப்பண்ணி, அதன்படி நடந்து அதன்பின்னரே அவர் உபதேசித்தார். அப்படிச் செய்யும்படி தனது இருதயத்தை அவர் பக்குவப்படுத்தியிருந்தார் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

அதாவது எஸ்ரா வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கவில்லை. ஒரு செயல் வீரராக இருந்தார். இன்றைய வசனத்தின் முன்னால் ஆறாவது வசனத்தில் எஸ்ராவைப்பற்றிய இன்னொரு குறிப்பு உள்ளது. 

"இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." ( எஸ்றா 7 : 6 )

அன்பானவர்களே, நாம் அறியவேண்டிய சத்தியம் என்னவென்றால்,  எஸ்ரா இப்படி தேவனுக்கு உகந்தவராக இருந்ததால் கர்த்தருடைய கரம் அவர்மேல் இருந்தது; அவர் கேட்டவற்றையெல்லாம் ராஜா அவருக்குக் கொடுத்தான். 

அதாவது, தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது உலக காரியங்கள் நமக்கு அனுகூலமாகும். உலக காரியங்கள் எனும்போது நமது சுய ஆசைகளை நிறைவேற்றும் ஆசைகளல்ல. மாறாக, தேவ சித்தத்துக்கு உட்பட்டு நாம் விரும்பும் ஆசைகள்.  

எஸ்றா தனது சுய ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ராஜாவிடம் கேட்கவில்லை. மாறாக, தேவனுக்கு ஆலயம் கட்டுவதற்கு முற்பட்டார். அதற்காக ராஜாவிடம் வேண்டினார்.  அவரது அந்த ஆசையை தேவன் ராஜாவின் மூலம் நிறைவேற்றினார். நாமும் இதுபோல தேவனது வேதத்தின்மேல் ஆர்வம்கொண்டு வேத சத்தியங்களை ஆராயவும் வேத சத்தியங்களின்படி வாழவும் நம்மைப் பக்குவப்படுத்தினோமானால், தேவன் நமது நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவார்.    

இதனால்தான் முதலாவது சங்கீதம் கூறுகின்றது, "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 1 : 2 )

வேதாகமத்தை நேசிப்போம், வேத வசனங்களைத் தியானிப்போம், எஸ்றாவைப்போல வேத ஒளியில் ஆராய்வோம். அப்படி செய்வதுமட்டுமல்லாமல் வேத வசனங்களின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம்.  அதன்பின்னர் மற்றவர்களுக்கும் அதனை எடுத்துச்சொல்வோம். இன்றைய வசனம் எஸ்றா அப்படிச் செய்ய தனது இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான் என்று கூறுகின்றது. நமது இருதயத்தையும் நாம் அதுபோல பக்குவப்படுத்துவோம். அப்போது தேவனது கரம் நம்மோடு இருக்கும். உலக காரியங்கள் நமக்கு அனுகூலமாகும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: