Friday, October 07, 2022

அதிசயங்களையே போதிக்கும் ஊழியர்கள் கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று அறியாதவர்களே

 ஆதவன் 🖋️ 619 ⛪ அக்டோபர் 08,  2022 சனிக்கிழமை

"சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்." ( மத்தேயு 16 : 16 )

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அனைவருமே கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படித் தன்னை அறிக்கையிட்ட பேதுருவை நோக்கிக் கூறினார்:- 

"யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்." ( மத்தேயு 16 : 17 )

மேற்படி வசனத்தின்மூலம் நாம் அறிந்துகொள்வது கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடவேண்டுமானால் நமக்குப் பிதாவாகிய தேவன் அருளும் ஆவிக்குரிய வெளிப்பாடு வேண்டும். இயேசு கிறிஸ்துவோடு இருந்த சீடர்களுக்கே இப்படி வெளிப்பாடு தேவையாயிருக்கும்போது நமக்கு அது எவ்வளவு அதிகம் தேவை!

இயேசு கிறிஸ்துவைப் பலரும் பலவிதமாக எண்ணியிருந்தார்கள். சிலர் யோவான் ஸ்நானகன் என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது எலியா என்றும்  அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் எண்ணிக்கொண்டனர். (மத்தேயு 16:14) மற்றபடி அவரைப் பார்த்த பலரும் மரியாளின் மகனாக யோசேப்பின் மகனாகத்தான் பார்த்தனர்.

இன்றும் இயேசு கிறிஸ்துவிடம் அதிசய அற்புதங்களை எதிர்பார்த்து வரும் விசுவாசிகளும், அற்புத அதிசயங்களையே போதிக்கும் ஊழியர்களும் இப்படிக் கிறிஸ்துவை  தேவனுடைய குமாரனென்று அறியாதவர்களே. இயேசு கிறிஸ்துவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவேண்டுமானால் அவர் உலகினில் வந்த நோக்கத்தை அறிந்திருக்கவேண்டும். அதனை அப்போஸ்தலரான யோவான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது." ( யோவான் 20 : 31 ) ஆம், நித்திய ஜீவனுக்காக கிறிஸ்துவைத் தேடுபவர்கள் மட்டுமே இயேசுவை தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்தவர்கள். இயேசு கிறிஸ்து மந்திரவாதம்போல அதிசயங்களைச் செய்துகாட்ட வரவில்லை. அவர் அதிசயங்களை செய்தது மக்கள் தான் சொல்வதை நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் ; அதனால் மீட்பு அனுபவம் பெறவேண்டும் என்பதகற்காகவே.

உலக ஞானத்தினாலும் கல்வி அறிவினாலும் ஒருவேளை தேவனைப்பற்றி அறியலாம் ஆனால் தேவனை அறியமுடியாது. இதுபோல பரலோக ராஜ்ய ரகசியங்களை அறிந்தவர்களே கிறிஸ்துவை தேவனுடைய குமாரனாக அறியமுடியும். அதற்கு சிறு குழந்தைக்ளுக்குள்ள கபடமற்ற இருதயம் தேவை. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்"( மத்தேயு 11 : 25 ) என்று. 

அன்பானவர்களே, எல்லோரும் சொல்வதாலோ அல்லது நமக்குச் சிறு வயதில் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் சொல்லிக்கொடுத்ததாலோ நாம் இயேசு தேவனுடைய குமாரன் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவரை வாழ்வில் உணர்ந்து அனுபவித்து பேதுருவைப்போல அறிக்கையிடும் நிலைமைக்கு வரவேண்டும். கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் இருந்தால் மட்டுமே நாமும் பேதுருவைப்போல இயேசுவை "ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து." என்று உறுதியாக உண்மையாக அறிக்கையிடமுடியும்.  இல்லாவிட்டால் நாம் சாதாரண ஒரு மதவாதியாக நமக்குச் சொல்லிக்கொடுத்ததை மட்டும் கிளிப்பிள்ளைபோலத் தான்  கூறிக்கொண்டிருப்போம். 

கிறிஸ்துவை வாழ்வில் அறிந்து, அவர் தேவனுடைய குமாரன் என்று  அறிக்கையிட வேண்டிய கிருபைக்காக வேண்டுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: