Tuesday, October 25, 2022

தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்

 ஆதவன் 🖋️ 637 ⛪ அக்டோபர் 26,  2022 புதன்கிழமை

"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்." (யோவான் 3:8) 

ஒன்றைப்பற்றி நாம் முழுவதுமாக அறியவேண்டுமானால் அதுவாக நாம் மாறினால் மட்டுமே முடியும். ரோட்டோரம் படுத்திருக்கும் மாடு, அல்லது நம்மைநோக்கி வரும் நாய் அல்லது எந்த மிருகமாக இருந்தாலும் மிருகங்களின் எண்ணம் நமக்குத் தெரியாது. அவை உண்ணும் உணவுகள், அவற்றின் சுவை எதுவுமே நமக்குத் தெரியாது. மிருகங்களின் எண்ணங்களும் சுவைகளும் மனிதர்களிலிருந்து வித்தியாசமானவை. நாமும் அவைகளைப்போல ஒரு மிருகமாக மாறினால்தான் அதனை நம்மால் முற்றிலும் அறிய முடியும். 

இதுபோலவே பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்தவனும் இருக்கின்றான். சாதாரண மனிதர்களைப்போல மனிதர்களோடு இருந்தாலும் ஆவிக்குரிய மனிதனது எண்ணங்களும் செயல்பாடுகளும் வித்தியாசமானவையாக இருக்கும். இதனைத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார். 

அப்போஸ்தலரான பவுல் அடிகளும்,  "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 11 ) என்று கூறுகின்றார்.  

மேலும், பவுல் அடிகள், "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, ஆவிக்குரிய வழிதான் தேவனுக்கு ஏற்புடைய வழி. தேவனுடைய வழியில் நடக்கவேண்டுமானால் தேவனுடைய ஆவியின் வழிகாட்டுதலும் உடனிருப்பும் நமக்கு அவசியம். 

ஆனாலும் ஆவிக்குரிய மனிதர்களாக நாம் வாழ்ந்தாலும் தேவனது அனைத்துச் செயல்களையும் நாம் அறிய முடியாது. காரணம், மனிதர்கள் நாம் எப்படி முயன்றாலும் பிதாவுக்குரிய அதிகாரத்திலுள்ளவைகள் அனைத்தையும் நாம் அறிய முடியாது. 

"ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்." (பிரசங்கி 11:5) என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த உலகத்தில் தேவன் மனிதர்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தால் ஆவிக்குரிய சில காரியங்களை ஆவிக்குரிய மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார். இந்த அனுபவத்தோடு உலக வாழ்வை நாம் வாழும்போது அவருக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றோம்.  

ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமது செயல்பாடுகளைப் பிறர் குறைகூறலாம். ஆனால் நாம் கவலைப்படத்  தேவையில்லை. இயேசு கிறிஸ்து கூறுவதுபோல ஆவிக்குரிய நாம் காற்றினைப்போல இருக்கின்றோம். நமது வழிகளை உலகமனிதர்கள் அறிய முடியாது. தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் என்று கூறியுள்ளபடி தேவனுடைய ஆவிக்குரிய சித்தப்படி வாழ்பவனையும் உலக மனிதர்கள் அறிய முடியாது. 

ஆவிக்குரிய வழிகளை அறியவும் தேவ வழியில் நடக்கவும் உண்மையான மனதுடன் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது தேவன் நம்மை அந்த வழியில் நடத்திடுவார். காற்று இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் தெரியாததுபோல நமது நடவடிக்கைகள் தேவனுக்கு மட்டுமே தெரிவதாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே தேவன் மனிதர்களை நியாயம் தீர்ப்பார்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: