Saturday, October 22, 2022

இயேசுவோடு இணைந்த ஒரு வாழ்க்கை வாழும்போது மட்டுமே நம்மில் கனிகளைக் காண முடியும்.

 ஆதவன் 🖋️ 634 ⛪ அக்டோபர் 23,  2022 ஞாயிற்றுக்கிழமை

"தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி.." ( பிலிப்பியர் 1 : 10 )

துதித்தலினால் வரும் ஆசீர்வாதங்களைக்குறித்து வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். தேவனைத் துதித்தலைக் குறித்து,  "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்று வாசிக்கின்றோம். ஆனால் நாம் பெரும்பாலும் வாயினால் கர்த்தரைத் துதிப்பதையே துதி என்று எண்ணுகின்றோம். வாயினால் துதிப்பது முக்கியமான தேவையே. நாம் கர்த்தரைத் துதிக்காமல் வாய்மூடி மௌனமாக இருக்க முடியாது. 

ஆனால், இன்றைய வசனம் வாயினால் துதிப்பதைவிட மேலான துதியை; தேவன் விரும்புகின்ற துதியைக் குறித்துப் பேசுகின்றது. அது என்ன துதி? இயேசு கிறிஸ்துவினால் வருகின்ற நீதியின் கனிகளால் நிறைந்திருப்பது. அப்படி நீதியின் கனிகளால் நிறைந்திருப்பது பிதாவாகிய தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாக்கும் என்று இன்றைய வசனம் கூறுகின்றது.  அப்போஸ்தலரான பவுல், நீங்கள் அப்படி நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாக இருங்கள் என்று பிலிப்பியர்களுக்கு எழுதுகின்றார்

நீதியின் கனிகளாகிய ஆவிக்குரிய கனிகளைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிரூபத்தில் குறிப்பிட்டுள்ளார். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 )

மேலும், "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 ) என எழுதியுள்ளார்.

இன்றைய வசனம் கூறப்படுவதன் நோக்கம் ஏனென்றால், வாயினால் துதிப்பவர்கள் மேற்படி ஆவிக்குரிய கனிகள் இல்லாமலும் துதிக்க முடியும். அப்படித் துதிப்பது பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தாது. வெறுமனே ஸ்தோத்திரம் சொல்வது தேவனை மகிமைப்படுத்தாது என்று கூறுகின்றார். 

மேலும் இன்றைய வசனத்தில், இயேசு கிறிஸ்துவினால் வருகின்ற நீதியின் கனிகள் என்று குறிப்பிடுகின்றார். அதாவது பவுல் அடிகள் கூறியுள்ள நீதியின் கனிகள் ஒருவருக்கு இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே உண்டாக முடியும். கிறிஸ்துவைவிட்டு விலகி இருப்பவர்களும், கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழாதவர்களும் கனியற்றவர்களே.

"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று கூறினார் இயேசு கிறிஸ்து.

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவோடு நாம் ஒட்டவைக்கப்படுவதன் மூலமே கனி கொடுப்பவர்களாக மாற முடியும். வாயினால்  ஸ்தோத்திரம் செய்வது மட்டும் போதாது. நமது வாழ்க்கையே  தேவனுக்கேற்ற கனியுள்ள வாழ்க்கையாக மாறவேண்டும். இப்படி நாம் கனிகளால் நிறையும்போது அது பிதாவாகிய தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்.

கிறிஸ்து இயேசுவோடு இணைந்த ஒரு வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுப்போம். அப்படி வாழும்போது மட்டுமே நம்மில் கனிகளைக் காண முடியும். நாம் கனியுள்ளவர்களாக மாறும்போதுதான் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் கிறிஸ்துவை அறியமுடியும்.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: