ஆதவன் 🖋️ 625 ⛪ அக்டோபர் 14, 2022 வெள்ளிக்கிழமை
"நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்." (13:11)
இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் மீட்பு அனுபவத்தைப் பெறும்போது நாம் மறுபடி பிறந்தவர்களாகின்றோம். இந்த மறுபடி பிறக்கும் அனுபவமே தேவனுடைய ராஜ்யத்தில் நாம் நுழைவதற்கு முதல்படி. எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" ( யோவான் 3 : 3 ) இந்த வார்த்தைகளை இயேசு கிறிஸ்து நிக்கோதேமு எனும் யூத போதகரிடம் கூறினார். தேவனுடைய வார்த்தைகளைக் கற்று போதிக்கும் போதகர்களுக்கும்கூட மறுபடி பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.
இப்படி நாம் மறுபடி பிறக்கும்போது குழந்தைகளாய் மாறுகின்றோம். இந்த அனுபவத்துக்குப்பின் வேத வசனங்கள் நாம் இதுவரை வாசித்துப் புரிந்துகொண்டதைவிட வித்தியாசமான முறையில் நமக்குப் புரியத் துவங்கும்.
இன்றைய வசனம் இப்படி ஆவிக்குரிய மறுபிறப்பு அனுபவம் பெற்றவர்களுக்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதாகும்.
மறுபிறப்படைந்து நாம் புதிதாய்ப்பிறந்த குழந்தையாகும்போது முதலில் முற்றிலும் ஆவிக்குரியச் சத்தியங்களை அறிந்து அதன்படி வாழ முடியாமல் குழந்தைகள்போலத்தான் இருப்போம். எனவே நாம் இப்படிக் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசி, குழந்தையைப்போலச் சிந்தித்து, குழந்தையைப்போல யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் நாம் இதே குழந்தைகள்போல எப்போதும் இருக்கக்கூடாது. நமக்கு ஆவிக்குரிய வளர்ச்சி வேண்டும். அப்போது மட்டுமே நாம் முழுமையான புருஷர்களைப்போலாகி ஆவிக்குரிய வளர்ச்சியடைந்து குழந்தைக்கேற்றவைகளை ஒழிக்கமுடியும்.
இதனையே எபிரெயர் நிருபத்திலும் நாம் வாசிக்கின்றோம். "பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்." ( எபிரெயர் 5 : 13 )
ஆவிக்குரிய வளர்ச்சி நாம் எடுக்கும் முயற்சியில்தான் இருகின்றது. வெறுமனே ஆராதையில் கலந்துகொண்டு ஒருசில பக்தி காரியங்களில் ஈடுபடுவது போதாது. நாம் தேவன் அருளும் ஞானப் பாலின்மேல் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மில் ஆவிக்குரிய வளர்ச்சி இருக்கும். எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." ( 1 பேதுரு 2 : 3 ) என்று அறிவுறுத்துகின்றார்.
"சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்." ( 1 கொரிந்தியர் 14 : 20 ) என்கின்றார் பவுல் அடிகள்.
குழந்தைகளாய் இருக்கும் நாம் அப்படியே இருந்துவிடாமல் பூரணமாகவேண்டும். மனம்திரும்புதல், விசுவாசம், ஞானஸ்நானம், ஆவியின் வரங்கள், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு போன்ற அடிப்படை சத்தியங்களுக்கும் மேலாக நாம் வளரவேண்டும். இந்த சத்தியங்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரமானவை. ஆனால் நாம் இதற்குமேல் கட்டப்படவேண்டும். இதற்குமேல் நாம் வளரும்போது மட்டுமே பாவத்தை மேற்கொண்டு வெற்றிச்சிறக்க முடியும். நமது பரிசுத்த பிரதான ஆசாரியனான இயேசு கிறிஸ்துவோடு மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடியும்.
இதனையே எபிரெய நிருப ஆசிரியர் கூறுகின்றார், "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக." ( எபிரெயர் 6 : 1,2 )
ஆம் அன்பானவர்களே, மறுபடி பிறந்த அனுபவத்தைப் பெற்றிடத் தேவனிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு வேண்டுவோம். அப்படி மறுபடி பிறந்து குழந்தைகளாக மாறியபின் தேவ வசனமாகிய பாலை உண்டு ஆவிக்குரிய வளர்ச்சி பெறுவோம். கிறிஸ்தவத்தின் அஸ்திபார உபதேசக் கட்டளைகளை நிறைவேற்றி அடுத்தகட்டமாக பூரண மனிதர்களாக மாறி கிறிஸ்துவோடு மகா பரிசுத்த ஸ்தலத்தினலுள் நுழைந்திடத் தகுதி பெறுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment