Monday, October 10, 2022

பரிதானம் (லஞ்சம்)

 ஆதவன் 🖋️ 622 ⛪ அக்டோபர் 11,  2022 செவ்வாய்க்கிழமை

"பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்". ( நீதிமொழிகள் 15 : 27 )


பரிதானம் என்பது லஞ்சம் வாங்குவதைக் குறிக்கின்றது. லஞ்சம் வாங்குவதன் காரணம் பொருளாசையாகும். சிலர் குறைந்த வருமானத்திலும் நேர்மையாக வாழுகின்றனர். ஆனால் பலர் நல்ல வேலை, நல்ல உயர்ந்த பதவி, நல்ல சம்பளம் இருந்தும் லஞ்சம் வாங்கி வாழுகின்றனர். இன்றைய வசனம் கூறுகின்றது, பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான். அதாவது பொருளாசைப்பிடித்து குறுக்கு வழியில் செல்கிறவனது வீடு சமாதானமின்றி கலைந்துபோகும். லஞ்சத்தை வெறுக்கிறவனோ பிழைப்பான். 

யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்துவந்தபோது பலரும் அவரிடம் வந்தனர். அப்போது, "போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும்  இருங்கள் என்றான்." (லூக்கா 3:14) இந்தக்காலத்தில் போலீசார் செய்யும் பணியை அந்தக்காலத்தில் போர் சேவகர்கள் செய்து வந்தனர். அவர்களிடம்தான் யோவான் "பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும்  இருங்கள்" என்று கூறுகின்றார். லஞ்சம் வாங்குவதற்காக காவல்துறையில் உள்ள சிலர் இப்படிப் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர்.

பழைய ஏற்பாட்டிலும்கூட பல வசனங்கள் பரிதானம் எனும் லஞ்சம் வாங்குவதைக் கண்டிக்கின்றன.. "பரிதானம்  வாங்காதிருப்பாயாக;  பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்." (யாத்திராகமம் 23:8)

"நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்". (உபாகமம் 16:19)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல." ( லுூக்கா 12 : 15 ) பொருளாசை பிடித்து அதிகமான பணத்தைக் குறுக்கு வழியில் சேர்பவனுக்கு அது எந்த விதத்திலும் உதவாது. அது அவனுக்கு வாழ்வு அல்ல. அது நமது ஆத்துமாவை நரகத்துக்கு நேராக இழுத்துச் சென்றுவிடும்.

அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை."( 1 கொரிந்தியர் 6 : 10 ) என்று கூறுகின்றார். 

இதனை வாசிக்கும் அன்புச்  சகோதரனே சகோதரியே, தெரிந்தோ தெரியாமலோ இதுவரை நீங்கள் இந்தக்காரியத்தில் ஈடுபட்டிருந்தால் தேவனிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புங்கள். தொடர்ந்து இதே காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டு எவ்வளவு ஜெபித்தாலும் தேவன் அதனைக் கேட்பதில்லை; குடும்ப சமாதானமும் வருவதில்லை. இன்றைய வசனம் கூறுவதுபோல பரிதானம் வாங்கி கலைந்துபோன குடும்பங்கள்   ஒன்று இரண்டல்ல, பல்வேறு சாட்சிகளை நான் கேட்டுளேன்; பார்த்துள்ளேன். கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.  

"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்" (எபிரெயர் 13:5)

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: