ஆதவன் 🖋️ 633 ⛪ அக்டோபர் 22, 2022 சனிக்கிழமை
"நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." ( யோவேல் 2 : 13 )
பழைய ஏற்பாட்டுக்கால முறைமைகளில் மனம் திரும்புவதற்கு தங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்வதும், சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்து அல்லது உடலில் சாம்பலைப் பூசிக்கொள்வதும் முறைமைகளாக இருந்தன. துக்கம் அனுசரிப்பதற்கும் இப்படியே செய்தனர்.
பழைய ஏற்பாடு முழுவதும் இப்படி மக்களும் ராஜாக்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இரட்டுடுத்தி சாம்பலில் அமர்வதை நாம் வாசிக்கலாம். யோனா தீர்க்கத்தரிசியின் பிரசாங்கத்தைக்கேட்டு நினிவே மக்களில் சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் இரட்டு உடுத்திக்கொண்டார்கள் ( யோனா 3 : 5 ). இதனை நாம், "இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்." ( யோனா 3 : 6 ) என்று வாசிக்கின்றோம்.
இயேசு கிறிஸ்துவும் மனம்திரும்பாத கோரசீன், பெத்சாயிதா நகரங்களைப் பார்த்துக் கூறும்போது, "கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்" (லூக்கா 10:13) என்று கூறினார். ஆம், இதுவே பழைய ஏற்பாட்டுக்கால முறைமை.
தற்போதும் பாவத்திலிருந்து விடுபட மனிதர்கள் பல்வேறு முறைமைகளைக் கையாளுகின்றனர். ஒவ்வொரு மதத்தினரும் பல்வேறு முறைகளில் பாவ மன்னிப்பை நாடுகின்றனர்.
ஆனால் யோவேல் தீர்க்கத்தரிசி, நீங்கள் இப்படி உடைகளைக் கிழிப்பதையல்ல உங்கள் இருதயத்தைக் கிழித்து தேவனிடம் மன்னிப்பு வேண்டுங்கள். "தேவனாகிய கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவருமாயிருக்கிறார்" எனவே அப்போது அவர் உங்களை மன்னிப்பார் என்று கூறுகின்றார்.
இன்றைய வசனம் கூறும் தெளிவு என்னவென்றால், நமது இருதயமே பாவங்களுக்குக் காரணமாயிருக்கின்றது. எனவே, நாம் நமது இருதயம் நொறுங்க மன்றாடி தேவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமேத் தவிர வெளியரங்கமான சில செயல்பாடுகளைச் செய்வதால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட மாட்டாது.
"பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்." ( லுூக்கா 5 : 24 ) என்றார் இயேசு கிறிஸ்து. பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் பாவங்களுக்காக இரத்தம் சிந்தின கிறிஸ்து ஒருவருக்கே உண்டு.
எனவே நாம் வெளியரங்கமானச் சில செயல்பாடுகளைச் செய்து பாவ மன்னிப்பு பெற முடியாது. மன்னிக்க அதிகாரம் பெற்ற இயேசு கிறிஸ்துவிடம் மெய்யான மனஸ்தாபத்துடன் பாவங்களை அறிக்கையிடவேண்டும்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்". (1 யோவான் 1:9)
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
ஆதவன் 🖋️ 634 ⛪ அக்டோபர் 23, 2022 ஞாயிற்றுக்கிழமை
No comments:
Post a Comment