இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, October 17, 2022

அவரோடு இருக்கும்போது நமக்கு நிறைவான ஆசீர்வாதமுண்டு.

 ஆதவன் 🖋️ 629 ⛪ அக்டோபர் 18,  2022 செவ்வாய்க்கிழமை

"மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது." ( லுூக்கா 15 : 31 )

இயேசு கிறிஸ்து கூறிய ஊதாரிமைந்தன் உவமையில் வரும் தகப்பன் தனது மூத்த மகனிடம் கூறும் வார்த்தைகளே இவை. இளைய மகன் தகப்பனைவிட்டுப் பிரிந்து சென்று சொத்துக்களையும் அழித்துவிட்டான். மூத்த மகனோ தகப்பனோடேயே இருக்கிறான். ஆனால் தகப்பனை விட்டுப் பிரிந்துசென்ற இளைய மகன் மனம் திரும்பி வரும்போது அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட  தகப்பன் விருந்து ஏற்பாடுசெய்கிறான்.  இது மூத்த மகனுக்கு மன வருத்தத்தைக் கொடுக்கின்றது.

அவன் தகப்பனிடம், "இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்." ( லுூக்கா 15 : 29, 30 ) அவனுக்குப் பதிலாகத்தான் இன்றைய வசனத்தைத் தகப்பன் கூறுகின்றான்.

அன்பானவர்களே, இதுதான் ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேவனோடு இருக்கும்போது கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். ஆனால் நாமும் இந்த மூத்த மகனைப்போல அதனைக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். மற்ற உலக மனிதர்களைப்போல நமக்குச் செல்வமோ உலக ஆசீர்வாதமோ இல்லாததால் தவறுதலாக எண்ணி தேவனை நொந்துகொள்கின்றோம். 

எனக்குள்ளதெல்லாம்உன்னுடையதாயிருக்கிறது என்று உலகப் பணக்காரர் ஒருவர் நம்மிடம் சொல்வதைப்போல உள்ளது இந்தத்  தகப்பன் மூத்த மகனிடம் கூறுவது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் நாம் இதனை உணர்வதில்லை. இந்த உலகத்தில் நாம் பரதேசிகள் என்று வேதம் கூறுகின்றது. நமது நிரந்தரக் குடியிருப்பு பரலோகம்தான். உண்மையாய் தகப்பனுக்குக் கீழ்படிந்தது வாழ்ந்த மூத்தமகனுக்குக் கூறியதுபோல இயேசு கிறிஸ்து நமக்கும் வாக்களித்துள்ளனர். 

ஆம், அவரது மகிமையில் அவரோடுகூடநாம் இருக்க அவர் விரும்புகின்றார். இந்த உலகத்தின் பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஈடானவையல்ல. அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதனால்தான், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 ) என்று கூறுகின்றார்.

அந்த மகிமைப் பேரின்பத்தை நாம் அடைந்திட இயேசு கிறிஸ்துவும் நமக்காக வேண்டுதல் செய்கின்றார். ஆம், "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 ) என்று நமக்காக ஜெபித்துள்ளார் இயேசு கிறிஸ்து. 

மட்டுமல்ல, "நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 ) என்று வேண்டுகின்றார். இவை எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!!!

"என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. "என வருத்தப்பட்ட மூத்தமகனைப்போல நாம் உலக ஆசைகள்  நிறைவேறவில்லை என வருந்திக்கொண்டிருக்கிறோம். அன்பானவர்களே, நாம் எப்போதும் அவரோடு இருக்கும்போது நமக்கு நிறைவான ஆசீர்வாதமுண்டு. காரணம், நாம் அவரது மகனாக, மகளாக இருக்கின்றோம். அவருக்குள்ளவைகளெல்லாம் நமக்குரியவைகளே.  எனவே, நம்மைப்பார்த்தும் அவர் கூறுகின்றார், மகனே, மகளே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. 

ஆம், தேவனுக்குரிய உன்னத ஆசீர்வாதங்கள் அவரோடு இருக்கும்போது நமக்கு நிச்சயமாக உண்டு.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: