ஆதவன் 🖋️ 642 ⛪ அக்டோபர் 31, 2022 திங்கள்கிழமை
"தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 7, 8 )
கிறிஸ்துவை அறிந்து அவருக்கு ஏற்புடையவர்களாக வாழும் ஆவிக்குரிய நாம் பகலுக்குரியவர்கள். மட்டுமல்ல, நீதியின் சூரியனான நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளி நம்மில் இருப்பதால் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கிறோம். "நானே உலகின் ஒளி" என்று வாக்களித்த இயேசு கிறிஸ்துவினால் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கின்றோம்.
கிறிஸ்துவை அறியாதவர்கள் இருளில் இருந்து இருளின் செயல்பாடுகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய தூக்க மயக்கத்தில் இருந்துகொண்டிருப்பார்கள். அல்லது பாவத்தில்மூழ்கி பாவ வெறிகொண்டிருப்பார்கள்; பாவத்திலேயே இன்பம் அனுபவித்துக்கொண்டிருப்பார்கள்.
கிறிஸ்துவை அறியாதபோது நாம் எல்லோரும் இப்படித்தான் இருந்தோம். இப்படித் தூக்கத்திலும் பாவ வெற்றியிலும் இருந்த நம்மேல் கிறிஸ்துவாகிய ஒளி பிரகாசித்தது. கிறிஸ்துவாகிய இந்த ஒளியை ஏசாயா தீர்க்கத்தரிசி ஆவியில் கண்டுணர்ந்து, "இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." ( ஏசாயா 9 : 2 ) என்று எழுதுகின்றார்.
இயேசு கிறிஸ்துவும் தன்னைக்குறித்துக் கூறும்போது, "இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்." ( யோவான் 12 : 35 ) என்றார்.
இன்றைய வசனத்தில் ஆவிக்குரிய நம்மைப் பகலுக்குரியவர்கள் என்று குறிப்பிடுகின்றார் பவுல் அடிகள். "பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்." என்கின்றார்.
ஆனால் தூங்குகின்றவர்களுக்கும் வெறிகொண்டவர்களுக்கும் ஒளியைப் பிடிக்காது. இருளில் இருப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3 : 20 )
ஆனால் அவர்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாவார்கள். "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது."( யோவான் 3 : 19 ) என்றார் இயேசு கிறிஸ்து.
அன்பானவர்களே, மெய் ஒளியான கிறிஸ்துவை அறிந்துகொண்ட நாம் தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். ஆம், கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசமும் அன்பும் தான் மார்புக்கவசம். இரட்சிப்பு அனுபவம்தான் தலைக்கவசம். எக்காலத்திலும் இவைகளை இழந்திடாமல் பாதுகாத்துக்கொள்வோம்.
ஆவிக்குரிய தூக்கத்தையும் பாவ வெறிகளையும் விட்டு பகலுக்குரியவர்களாக வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment