Tuesday, October 11, 2022

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்.

ஆதவன் 🖋️ 624 ⛪ அக்டோபர் 13,  2022 வியாழக்கிழமை

"இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" ( ஓசியா 8 : 14 )

இன்று ஆலயங்களை பகட்டாகக்  கட்டுவதற்கு கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்படுகின்றது. ஆலயக் கோபுரங்கள் அருகிலுள்ள பிற ஊர்களிலுள்ள கோபுரங்களைவிட உயரமாக இருக்கவேண்டுமென்று போட்டிபோட்டு உயர்த்தப்படுகின்றன.  ஆலய கட்டுமானத்துக்கு நன்கொடை சேகரிப்பதில் ஆலயக் கமிட்டியினர்   கடினமாக உழைக்கின்றனர். சேர்க்கப்படும் நன்கொடையில் ஒரு பகுதி, அதை சேகரிக்கும் குழுவினரின் உணவுக்காகச்  செலவிடப்படுகின்றது. ஆம், கடினமான உழைப்புத்தான்!. 

ஆனால், இப்படி நன்கொடை சேகரிப்பதில் நாட்டம்கொண்டு அலைபவர்களும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்களும் தங்களது தனிப்பட்ட வாழ்வில் கிறிஸ்துவை அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. நன்கொடை சேகரிப்பதிலும் ஆலயப் பணிகளிலும் காட்டும் ஆர்வத்தைத் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டும் என்று எத்தனைபேர் முயலுகின்றனர்?

இப்படி தனிப்பட்ட முறையில் தேவனை அறியாமல் இருந்துகொண்டு ஆலயப்பணிகளுக்காக உழைப்பதையே இன்றைய வசனம் வேதனையோடு குறிப்பிடுகின்றது, "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" என்று. 

அன்பானவர்களே, புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் கர்த்தருடைய விசுவாசிகளான நாம் தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நமது உடல்தான் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது. "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். 

ஆம், நாம் நம்முடையவர்களல்ல; தேவனுக்கானவர்கள். தேவனுக்கு உரியதான நமது உடல் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம்.  

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"( 1 கொரிந்தியர் 3 : 16 )

நாம் முதலில் கட்டவேண்டியது நமது உடலான ஆலயத்தை. உடலால் பாவிகளாக இருந்துகொண்டு வானுயர ஆலயம் கட்ட முயலுவதிலோ, கட்ட உதவுவதிலோ அர்த்தமில்லை. அதனை தேவன் விரும்புவதுமில்லை. தன்னை உண்டாக்கினவரை மறந்து ஆலயத்தைக் கட்டுவோர் தங்களது சுய பெருமைக்காகவே சில, பல  செயல்களைச்  செய்கின்றனர். நாம் மண்ணினாலல்ல கிறிஸ்து இயேசுவின்மேல் நமது சரீரமாகிய ஆலயத்தைக் கட்டவேண்டும். அதாவது,  போடப்பட்ட அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின்மேல் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வைக் கட்டவேண்டும். (1 கொரிந்தியர் 3:11,12) என்கிறார் பவுல் அடிகள். 

நாம் நமது உடலான ஆலயதைக் காட்டாமல் பெருமைக்காகவும் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறவேண்டியும் மண்ணாலான ஆலயத்தைக் கட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டு நமது உடலான ஆலயத்தை கட்டாமல் இருந்து அதனைக் கெடுத்துவிட்டோமானால் அது நமது ஆத்துமாவுக்குப் பெரிய அழிவையே கொண்டுவரும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் பின்வருமாறு எச்சரிப்பு கலந்த அறிவுரைகூறுகின்றார்:- "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 )

 தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: