ஆபிரகாம் விசுவாசித்து ஒரு பரதேசியைப்போல அங்கு வாழ்ந்திருந்தார்

 ஆதவன் 🖋️ 620 ⛪ அக்டோபர் 09,  2022 ஞாயிற்றுக்கிழமை

"விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்." ( எபிரெயர் 11 : 9 )

ஆபிரகாமுக்குத் தேவன் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை வாக்களித்திருந்தார். ஆபிரகாம் அதனை முழு விசுவாசத்தோடு ஏற்று வாழ்ந்தார். தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் என்ன? "நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்." ( ஆதியாகமம் 17 : 8 ) என்பதே அது. 

ஆராமில் குடியிருந்தபோது "கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ( ஆதியாகமம் 12 : 1, 2 ) என்று வாக்களித்தார். அந்த தேவ வாக்குறுதியை நம்பி தனது வீடு வாசல், சொத்துக்களை விட்டுவிட்டு ஆபிரகாம் பயணமானார். தான் போகுமிடம் எது என்பது தெரியாமலே ஆபிரகாம் புறப்பட்டுப் போனார். (எபிரெயர் 11:8)

ஆனால் தேவன் வாக்களித்த வாக்குறுதி உடனேயே நிறைவேறிடவில்லை. தேவன் அளித்த வாக்குத்தத்தை ஆபிரகாம் விசுவாசித்து ஒரு பரதேசியைப்போல அங்கு வாழ்ந்திருந்தார். அவரோடு வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கும்  யாக்கோபும்  கூடாரங்களிலே குடியிருந்தார்கள். 

பரதேசி என்பதற்கு வீடு வாசல் அற்றவன் என்று பொருள். ஒரு உதாரணத்துக்கு இப்படி எண்ணிப்பாருங்கள்... பேருந்து நிலையங்களின் அருகில் கூடாரம் அடித்துத் தங்கியிருக்கும் பரதேசியாகிய நரிக்குறவர் ஒருவரிடம், "இந்த நகரத்தை உனக்குச் சொந்தமாகத் தருவேன்". என்று கூறுவதுபோல உள்ளது தேவன் கூறுவது. இப்படிக் கூறுவதை எளிதில் நம்பிவிடமுடியாது. ஆனால், தேவனிடம் அசைக்க முடியாத விசுவாசமுள்ளவனாகிய ஆபிரகாம் அதனை நம்பினார்.  

அப்படி நம்பியதால், "தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்." ( எபிரெயர் 11 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

தனது தேசத்தை விட்டுவிட்டு வந்த ஆபிரகாம் இங்குள்ளச் சூழ்நிலைகளைப்  பார்த்து தேவனது வாக்குறுதியைச் சந்தேகித்து  மீண்டும் தனது சுய தேசத்துக்குத் திருப்பிச்செல்ல எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் அவரால் திரும்பிச் சென்றிருக்கமுடியும். இதனையே,  "தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்." ( எபிரெயர் 11 : 15,16 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் ஆபிரகாமுக்குத் தேவன் அளித்த வாக்குத்தத்தம் நிறைவேற ஏறக்குறைய  450 ஆண்டுகள் ஆயின. அதனைப் பார்ப்பதற்கு ஆபிரகாம் உயிரோடு இல்லை. மரணமட்டும் ஆபிரகாம் தேவனது வாக்குறுதியை விசுவாசித்து பின்மாறாமல் இருந்து தனது சந்ததிகள் ஆசீர்வாதமான தேசத்தை சுதந்தரிக்கக் காரணமானார். அன்பானவர்களே, கர்த்தரது வாக்குறுதிகளை நம்பி பொறுமையோடு காத்திருப்போம். பொய் சொல்ல தேவன் மனிதனல்ல. 

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்