Monday, October 24, 2022

கிருபையின் பிரமாணம்

 ஆதவன் 🖋️ 636 ⛪ அக்டோபர் 25,  2022 செவ்வாய்க்கிழமை



"எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்." ( ரோமர் 10 : 3 )

இன்றைய தியான வசனம் இரண்டுவித நீதிகளைக்குறித்து பேசுகின்றது. அவை:- 

1. தேவ நீதி 

2. சுய நீதி 

தேவ நீதி என்பது  நியாயப்பிரமாணம் சொல்வது என்றும் அவற்றுக்குக் கீழ்படிவது என்றும்  பலரும் எண்ணுகின்றனர். ஆனால் அப்படியல்ல, தேவ நீதி என்பது அதற்கும் மேலானது. அதாவது கட்டளைகளுக்கு வெறுமனே கீழ்ப்படிவதல்ல. உதாரணமாக, ஓய்வு நாளை பரிசுத்தமாய் அனுசரிக்கவேண்டும் என்பது நியாயப்பிரமாண கட்டளை. ஆனால் வெறுமனே ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்வதாலும் சிலபக்தி காரியங்களைச் செய்வதாலும் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியாது. ஏனெனில் தேவநீதி இவற்றுக்கு அப்பாற்பட்டது. கோவிலுக்குச் செல்வதுடன் சகோதர அன்பில் நிலைத்திருப்பது அது. 

இதுபோலவே விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்பது கட்டளை. இதன்படி விபச்சார பாவத்தில் நேரடியாக ஈடுபடாமல் வாழ்வது சுயநீதியும் நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றுதலுமாக இருக்கின்றது. ஆனால், நேரடியாக நியாயப்பிரமாண கட்டளைக் கூறுவதன்படி விபச்சாரம் செய்யாதவனும் விபச்சார எண்ணத்தை மனதில் கொண்டிருந்தால் அவன் விபச்சாரம் செய்த பாவியாகின்றான். இதுவே தேவ நீதி.  இதனால்தான் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்த்தாலே அவன்விபச்சாரம் செய்துவிட்டான் என்று இயேசு கிறிஸ்து கூறினார். ஆம். எண்ணத்தில், இருதயத்தில் சுத்தமாக இருப்பதே தேவ நீதி.     

சுய நீதி என்பது உலகம் போதிக்கும் நல்லொழுக்கத்தின்படி வாழ்வது. தமிழில் பல்வேறு நீதி நூல்கள் உள்ளன. எல்லா மதங்களும் நீதி போதனைகளைத்தான் கற்பிக்கின்றன. இப்படி நீதி நூல்கள் சொல்வதன்படியும் மதங்கள் போதிக்கும் நீதி நெறிகளின்படி வாழ்வதும் சுய நீதி.  சுருக்கமாகக் கூறுவதென்றால் மனச்சாட்சியின்படி வாழ்வது. உலகில் உள்ள அனைவருக்குமே மனச்சாட்சி எச்சரிப்புவிடுத்து நேர்வழியில் வாழ வழிகாட்டுகின்றது.  

நியாயப்பிரமாண கட்டளைகளுக்கு மேலாக, சுய நீதி போதனைகளுக்கு மேலாக வாழ்வதுதான் கிறிஸ்து இயேசுவின் மேல் நாம் கொள்ளும் விசுவாசத்தால் வரும் நீதி. இதனைத்தான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தின் அடுத்த வசனத்தில் கூறுகின்றார். "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." ( ரோமர் 10 : 4 ).

நியாயப்பிரமாணம் நம்மைத் தேவ  நீதியின் பாதையில் நடத்த முடியாததால் கிருபையின் பிரமாணத்தை இயேசு கிறிஸ்து ஏற்படுத்தினார்.   "எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின." ( யோவான் 1 : 17 )

ஆம் நியாயப்பிரமாண கட்டளைகள் மனிதனை நீதிமானாக்க முடியாமல் போனதால் இயேசு  கிறிஸ்து உலகத்தில் வந்து தனது மீட்புமூலம் மேலான பிரமாணத்தை நமக்கு ஏற்படுத்தினார். நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின்மூலம் புறம்பே தள்ளப்பட்டது. நியாயப்பிரமாணமே போதுமென்றால் கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டிருக்கவேண்டாம். மோசேயின் கட்டளைகளே மனிதனைத் தூய்மையாக்க போதுமானவையாக  இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை. இதனால்தான், "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். 

"மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 )

அன்பானவர்களே, நாம் இதுவரை நமது மனச்சாட்சிக்கு எதிராக வாழாதவர்களாகவும், உலகம் கற்பித்துள்ள நீதிகளின்படி வாழ்பவர்களாகவும், சுய நீதியுள்ளவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவைபோதாது. கிறிஸ்துவின் கிருபைக்குட்பட்ட ஆவியின் பிரமாணத்தினால் ஆவிக்குரிய வாழ்வு வாழவேண்டும். கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது அவரே நம்மை அவரது கிருபையின் பிரமாணத்தின்படி நடத்துவார்.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: