Saturday, October 15, 2022

" யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? "

 ஆதவன் 🖋️ 627 ⛪ அக்டோபர் 16,  2022 ஞாயிற்றுக்கிழமை

"என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை." ( யோவான் 8 : 46 )

இயேசு கிறிஸ்துத் தன்னைக் குற்றப்படுத்திய யூதர்களைப்பார்த்து  இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்து கூறியதுபோல கூறக்கூடிய வாழ்வு வாழ நம்மால் முடியுமானால் நாம் அவரது அடிச்சுவட்டில் நடக்கிறோம் என்பதை அதன்மூலம் புரிந்துகொள்ளலாம். 

"எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." (எபிரெயர் 4:15) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து எழுதுகின்றார் எபிரெய நிருப ஆசிரியர். 

"அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை" ( 1 பேதுரு 2 : 22 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு.

இயேசு கிறிஸ்துவை அவரது காலத்தில் வாழ்ந்த மக்களில் சிலர் பல்வேறு விதங்களில் குற்றப்படுத்தினார்கள். போஜனப்பிரியன், பிசாசு பிடித்தவன், பாவிகளின் நண்பன், புத்தி பேதலித்தவன் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அவரை எவரும் பாவி என்று கூறமுடியவில்லை. "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? " என்று துணிந்து கேட்டார் அவர். 

ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நம்மால் உலகத்தாரோடு பல வேளைகளில் ஒத்துபோகமுடிவதில்லை. எனவே அப்படி நாம் அவர்களைவிட்டு வேறுபடும்போது இயேசுவைக் குறைகூறியதைப்போல  நம்மையும் பல்வேறு அடைமொழிகளைக் கொடுத்துச் சிலர் பேசக்கூடும். ஆனால் அது பற்றி நாம் கவலைப்படாமல் பாவத்துக்கு மட்டும் விலகி வாழவேண்டியது அவசியம்.   

இயேசுவின் கிருபையினால் மீட்பு அனுபவம்பெறும்போது நாம் ஆவியின் பிணமானத்துக்கு உட்பட்டவர்களாகின்றோம். எனவே பாவம் நம்மை மேற்கொள்ள முடியாது. தேவனுடைய ஆவியானவர் நமக்குள்ளிருந்து நம்மை எச்சரித்து வழிநடத்துவார். என்வேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது." ( ரோமர் 6 : 14 ) என்று எழுதுகின்றார்.

ஆவியின் பிரமாணத்துக்குள் நாம் வரும்போது பாவத்துக்குவிடுதலை ஆகின்றோம். எனவேதான் பவுல் அடிகள், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்கின்றார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிதாவாகிய தேவன் தனது ஆவியை அளவில்லாமல் பொழிந்திருந்தார். எனவே அவர் பாவம் செய்யமுடியாதவராக, பாவத்தை அருவெறுப்பவராக இருந்தார். எனவே, "என்னிடம் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?"  என்று அவரால் கேட்க முடிந்தது. 

நாமும் இதுபோல பாவமற்ற வாழ்வு வாழ உதவிட அவர் வல்லவராயிருக்கிறார். இன்றைய வசனத்தின் இறுதியில் இயேசு கேட்கிறார், "நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை?" அன்பானவர்களே, இயேசுவின் வார்த்தைகளை நாம் விசுவாசிக்கவேண்டும். நம்மை பாவத்திலிருந்து முற்றுமுழுதும் இரட்சிக்க அவர் வல்லவராயிருக்கிறார். பாவம் செய்யும்போது நாம் பாவத்துக்கு அடிமைகளாயிருக்கிறோம். குமாரனான இயேசுவே நம்மை பாவ பழக்கத்திலிருந்து விடுவிக்கமுடியும்.

"குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 ) என்று அவர் கூறவில்லையா?

இயேசு கிறிஸ்துவுக்கு  நம்மை முற்றிலும் ஒப்புவித்து வாழும்போது அவர் நம்மைத் தம்மைப்போல மாற்றுவார். அப்போது நாமும் அவர் கேட்டதுபோல "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? என்று கேட்க முடியும்.  

கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்; அவரைப்போல உருமாறிட வேண்டுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: