கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்

 ஆதவன் 🖋️ 635 ⛪ அக்டோபர் 24,  2022 திங்கள்கிழமை

"எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று."( சங்கீதம் 18 : 6 )

இன்றைய சங்கீத வார்த்தைகள் தாவீது ராஜாவை கர்த்தர் அனைத்து எதிரிகளிடமுமிருந்தும் சவுலிடமிருந்தும்  விடுவித்தபோது அவர் பாடியவை.

தாவீது கர்த்தரையே நம்பி அவரையே தனது பலமாக எண்ணி வாழ்ந்தார்.  சவுலினாலும், எதிரி ராஜாக்களினாலும் அவரது சொந்த மகனாலும் தாவீதுக்கு உயிர் போகக்கூடிய அளவுக்கு  நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அவர் நிலைதடுமாறாமல் கர்த்தரையே பற்றிக்கொண்டார்.

அப்படிக் கர்த்தர் அவரை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவித்தபோது அவர் தனது நம்பிக்கையை அறிக்கையிட்டார். இன்றையத் தியான வசனம் இடம்பெற்றுள்ள 18 ஆம் சங்கீதத்தின் இரண்டாவது வசனம்கூறுகின்றது,  "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்."( சங்கீதம் 18 : 2 ) என்று

இங்கு கர்த்தருக்குத் தாவீது கன்மலை, கோட்டை, இரட்சகர், தேவன், துருக்கம், கேடகம், இரட்சணியக்  கொம்பு, உயர்ந்த அடைக்கலம் என எட்டு அடைமொழிகளைக் கொடுத்து பரவசப்படுகின்றார். 

அன்பானவர்களே, இன்று கிறிஸ்தவர்கள் பலரும் பெரும்பாலும் கர்த்தரை எப்படிப் பார்க்கின்றார்கள்?  தங்களது நோய்களை நீக்கும் மருத்துவராக, கடன் பிரச்னைகள் தீர்ந்திட உதவுபவராக, தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்திக்கொடுத்திட துணைசெய்பவராக, வேலை கிடைத்திட உதவுபவராக, வெறும் உலக ஆசீர்வாதங்களைக் கொடுப்பவராக மட்டுமே தேவனைப் பார்க்கின்றனர். 

கன்மலை, கோட்டை, இரட்சகர், தேவன், துருக்கம், கேடகம், இரட்சணியக்  கொம்பு, உயர்ந்த அடைக்கலம் எனும் வார்த்தைகள் எவ்வளவு மேலானவை. இப்படித் தாவீது கர்த்தரை உயர்வாகப்  பார்த்ததால்  கர்த்தர் அவரது எல்லாத் துன்பங்களுக்கும் தாவீதை  நீங்கலாக்கி விட்டார்.

அதாவது, தாவீது கர்த்தரையே முதலானவராக எண்ணித் தேடி விண்ணப்பம்பண்ணினார். ஆனால், இன்றைய பெரும்பாலான மக்களும் கர்த்தாரிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களுக்கு  முன்னுரிமைகொடுத்து வேண்டுகின்றோம். 

இப்படித் தேவனையே தாவீது முழுமனதோடு தேடியதால், "தேவன்  தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று." என்று கூறுகின்றார். 

இன்று தாவீது கூறுவதுபோல நாமும்  தேவனைத் தேடவேண்டியது அவசியமாயிருக்கின்றது. நமக்கு ஆயிரம் பிரச்சனைகளும் தேவைகளும் இருக்கலாம். ஆனால் அவற்றையே சொல்லிச் சொல்லி தேவ சமூகத்தில் அழுவது அவசியமில்லாதது. நமது அனைத்துத் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய தேவன் நமக்கு இருக்கிறார் எனும் உறுதிநமக்கு வேண்டும். 

அந்த உறுதி நமக்கு இருக்குமானால் நாமும் தாவீதைப்போல தேவனை நமது இரட்சகராக, கேடையமாக, கன்மலையாக எண்ணுவோம். இல்லாவிட்டால் நமது ஒவ்வொரு பிரச்சனைகளையும் பட்டியலிட்டு அவரிடம் சொல்லிச் சொல்லி அழுதுகொண்டிருப்போம். 

அன்பானவர்களே, கர்த்தரிடம் விசுவாசமாய் இருப்போம், கர்த்தரிடம் வருவானவற்றுக்காக அல்ல. "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று அவர் வாக்களித்துள்ளாரே?  

"கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்." ( சங்கீதம் 105 : 4 )

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்