Sunday, October 09, 2022

கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே

 ஆதவன் 🖋️ 621 ⛪ அக்டோபர் 10,  2022 திங்கள்கிழமை

"நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது." ( எபேசியர் 4 : 26 )

இன்று நாம் தினசரி செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் பல்வேறு கொலைகள், கொலை முயற்சிகள், கற்பழிப்புகள், ஏமாற்று போன்ற செய்திகளை அதிகமாகப் படிக்கின்றோம்; பார்க்கின்றோம். இதுவரை நாம் கேள்விப்படாத புதிய புதிய முறைகளில் கொலைகள் நடக்கின்றன. பெரும்பாலான மூர்க்கமான காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணம் கோபம்தான். 

கோபம் வராத மனிதர்கள் உலகினில் இல்லை. ஆவிக்குரிய மனிதர்களும் கோபமடைவது தவிர்க்கமுடியாதது. இயேசு கிறிஸ்துவும் சில வேளைகளில் கோபமடைந்தார்.  அனால் மற்றவர்களைவிட நாம் இந்தக் கோப விஷயத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும். அதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, "கோபம் கொண்டாலும் பாவ காரியங்களில் ஈடுபடாதிருங்கள்" என்கின்றார்.  மேலும் அந்தக் கோபத்தை இருதயத்தில் வைத்துக்கொண்டு இருக்காதிருங்கள். நீங்கள் கோபமடைந்தாலும் சூரியன் மறைவதற்குள் அது தணியக்கடவது என்கின்றார். 

ஏனெனில், இரவு நேரங்களில்தான் மனமானது பல தேவையில்லாத விஷயங்களைச்  சிந்திக்கும். அது பல்வேறு பாவக்  காரியங்களில் ஈடுபடச் செய்யும். சூரியன் மறைவதற்குள் கோபம் தணியாவிட்டால் எப்படிப் பழிவாங்கலாம் என்று மனம் சிந்திக்கும்.   எனவேதான் பகல் பொழுதைவிட இரவு நேரங்களில் கொலைகளும் இதர சட்டத்துக்குப் புறம்பானச் செயல்களும் அதிகமாக நடக்கின்றன.  

நீதிமொழிகள் புத்தகத்தில், "உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது" ( நீதிமொழிகள் 27 : 4 ) என்று வாசிக்கின்றோம். ஆம், கோபம் நிஷ்டூரமானச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டிவிடும்.

"உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்." ( பிரசங்கி 7 : 9 ) என்கின்றது பிரசங்கி. அதாவது இந்த வசனம் கோபம் கொள்பவன் மூடன் என்று கூடுகின்றது. "மூடனுக்குக் கோபம் மூக்கின்மேலே" என்று ஒரு தமிழ் பழமொழியே உண்டு. பொதுவாக இந்த உலகத்தில் கிறிஸ்துவை அறியாத ஞானிகள்கூட  அதிக பொறுமையுடன் இருக்கின்றனர். ஆம், ஞானம் பொறுமையை உண்டாக்கும்.

சரி, ஆவிக்குரிய நாம் இந்தக் கோபத்தை அடக்குவது எப்படி? அது அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் செய்யும்போது மட்டுமே அடங்கும். ஏனெனில் அப்படிச் செய்யும்போது கோபம் தணிந்து தேவ சமாதானம் நமக்குள் வரும். அப்போது இன்றைய வசனம் கூறுவதுபோல சூரியன் மறைவதற்குள் நமது கோபம் நம்மைவிட்டு மறையும்.  ஆம், "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 )  

மேலும், கோபத்தை அடக்காமல் இருந்தோமானால் நாம் தேவ நீதி செயல்பட விடாமல்  தடுப்பவர்களாக இருப்போம். தேவன் ஒவ்வொரு காரியத்தையும் நீதியாய் நடப்பிக்கின்றார். நாம் கோபம் கொண்டு விரைந்து செயல்படும்போது தேவன் செயல்படமுடியாமல் போகின்றது. "மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே."( யாக்கோபு 1 : 20 )

அன்பானவர்களே, கூடுமான மட்டும் கோபத்தைத் தவிர்ப்போம். அப்படி கோபம் கொண்டாலும் பவுல் அடிகள் கூறுவதுபோல அதனை வைராக்யமாகக் கொள்ளாமல் இரவு விடிவதற்குள் மறந்துவிடுவோம். அப்படி மறப்பதற்கு பவுல் அடிகள் கூறுவதுபோல அனைத்துக்காகவும் ஸ்தோத்திரம் செய்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: