இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, October 18, 2022

எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிற பண ஆசை

 ஆதவன் 🖋️ 631 ⛪ அக்டோபர் 20,  2022 வியாழக்கிழமை

"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )

இந்த உலகத்தில் நடக்கும் அநியாயச் செயல்கள் அனைத்துக்கும் பின்னணியில் இருப்பவை இரண்டே இரன்டு காரணங்களாகத்தான் இருக்க முடியம். அவை பண ஆசை, இன்னொன்று விபச்சார பாவம்.  பண ஆசை ஏற்படக் காரணம், உலகத்திலுள்ளவைகள் அனைத்தையும் அனுபவித்துவிடவேண்டும் எனும் எண்ணமும் தங்களை எல்லோரும் மதிக்கவேண்டும் எனும் எண்ணமுமே.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தனது சீடனான தீமோத்தேவுக்கு இது குறித்து எச்சரித்து இதனை எழுதுகின்றார். 

இன்றைய வசனத்தின் முந்தின வசனத்தில் பவுல் எழுதுகின்றார்:- "ஐசுவரியாவன்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்."( 1 தீமோத்தேயு 6 : 9 )

இன்றைய செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகளைப் பாருங்கள் - கொலைகள், கற்பழிப்புகள், திருட்டு, வன்முறைகள், பெற்ற குழந்தைகளைத் தாயே கொன்றுவிட்டு அல்லது தவிக்கவிட்டு இன்னொருவனுடன் ஓடிவிடுதல், பெற்ற தாயை மகனே கொலைசெய்தல், எல்லாவற்றுக்கும் சிகரமாக இந்த விஞ்ஞான காலத்திலும் நரபலி கொடுத்தல், மனித மாமிசத்தைச் சாப்பிடுதல் ..போன்ற அநியாய காரியங்கள்  நடப்பதை செய்திகளில் வாசிக்கலாம்.  

இவற்றில் பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் பண ஆசை. உடனடி செல்வந்தனாகவே நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான் கைதுசெய்யபட்டக் குற்றவாளி.  ஆம் அன்பானவர்களே, எனவேதான் பண ஆசை பாவம் என்று வேதம் எச்சரித்துக் கூறுகின்றது.  

வேத அடிப்படையில் இவற்றுக்கான காரணத்தை அப்போஸ்தலரான பவுல் "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 ) என்று கூறுகின்றார். அதாவது மெய்த்தேவனை அறியவேண்டும் எனும் எண்ணமில்லாமல் இருப்பதே இவற்றுக்குக் காரணமாகும். 

இப்படித் தேவனை அறியும் அறிவைப் பெறாததால், "அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்," ( ரோமர் 1 : 29 ) இருக்கிறார்கள். 

பணம் சம்பாதிப்பதும் அதற்காக உழைப்பதும் தவறு என்று வேதம் கூறவில்லை. உழைக்காமல் இருப்பதுதான் தவறு. உழைக்காதவன் சாப்பிடவும் கூடாது என்கிறார் பவுல் அடிகள். "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே."( 2 தெசலோனிக்கேயர் 3 : 10 ) என்கின்றார் அவர். பண ஆசை என்பது மேலும் மேலும் பணம் சேர்க்க வெறிகொண்டு அலைவதும் அவற்றுக்காக பாவ காரியங்களில் ஈடுபடுவதுமே.

"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே." ( எபிரெயர் 13 : 5 ) ஆம், தேவன் நம்மைவிட்டு விலகாமல் இருந்து நம்மை எந்தச் சூழ்நிலையிலும் பாதுகாப்பார் எனும் எண்ணமுள்ளவன் பண ஆசையை வெறுத்து நீதியுள்ள வாழ்க்கை வாழ்வான். 

எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிற பண ஆசை நம்மைப் பற்றிக்கொள்ளாமல் இருப்போம். அப்போதுதான் நாம்  நமது  விசுவாசத்தை விட்டு வழுவிடாமல் அதனைக்  காத்துக்கொள்ள முடியும்;  அநேக வேதனைகளாலே நம்மை நாமே உருவக் குத்திக்கொளாமல் இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: