Tuesday, October 11, 2022

அவரது வருகை சமீபம்

 ஆதவன் 🖋️ 623 ⛪ அக்டோபர் 12,  2022 புதன்கிழமை

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்." ( மத்தேயு 24 : 42 )

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. இயேசு கிறிஸ்து தனது வருகையினைக் குறித்தும் தனது வருகைக்கு முன் என்னென்ன அடையாளங்கள் நடக்கும் என்பதனையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் பல அடையாளங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. இவை  இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாய் இருக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் எப்போது அவர் வருவார் என்பது ஒரு மறைபொருளாகவே இருக்கின்றது. 

இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முக்கியமான ஒரு முன்னடையாளம் கள்ளத்  தீர்க்கதரிசிகளின் பெருக்கம். அது இன்று மிக அளவில் இருப்பது அவரது வருகை சமீபம் என்பதை உணர்த்துகின்றது.  

வருகைக்குமுன், "கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்." ( மத்தேயு 24 : 24 ) என்று இயேசு கிறிஸ்துக்  கூறினார். கிறிஸ்துவோடு நெருங்கிய உறவோடு நாம் வாழாமல் இருப்போமானால் இந்தக்  கள்ளத்  தீர்க்கதரிசிகளை அடையாளம் காண முடியாது.

இயேசு கிறிஸ்து தனது வருகைக்கு முன்னதான சில அடையாளங்களைக் கூறினாரேத் தவிர தான் எப்போது வருவேன் என்பதைக் கணக்குப்பார்க்கச் சொல்லவில்லை. இன்று பல ஊழியர்கள் இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது இருக்கும் என்பதைத் தங்களது மூளை அறிவினால் கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  விசுவாசிகளை அறிவுறுத்துவதாக எண்ணிக்கொண்டு பல்வேறு பட விளக்கங்களையும் கொடுக்கின்றனர். 

அன்பானவர்களே, அந்தநாள் நமக்கு முன்னமேயே அறியக்கூடிய நாள் அல்ல. அதனை தேவன் மறைவாகவே வைத்துள்ளார். "அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்." ( மத்தேயு 24 : 36 ) என்று இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறிவிட்டார். இதற்குமேல் அவரது வருகையை ஆராய்ச்சி பண்ணுவது அறிவுடைமையல்ல. 

இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்." ( மத்தேயு 24 : 44 ) ஆயத்தமாய் இருப்பது என்பது கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைபிடித்து, பரிசுத்தமான ஒரு வாழ்வு வாழ்வதைக் குறிக்கின்றது. 

அப்போஸ்தலரான பேதுருவும், "கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறவிதமாய் வரும் " (2 பேதுரு 3:10) என்று எச்சரித்துக்  கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்து கூறினார், "திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்." ( மத்தேயு 24 : 43 ). தனது வருகையினைக்குறித்து கிறிஸ்துவே அறியார் என்றும் கூறப்பட்டுள்ளது. ".......................... பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 )

பிதாவிடம் கேள்விப்பட்ட அனைத்தையும் சீடர்களுக்கு அறிவித்த இயேசு கிறிஸ்து நமக்கு இது தேவையென்றால் சொல்லாமல் இருந்திருப்பாரா? எனவே குருவுக்கு மிஞ்சிய சீடனாக நாம் விரும்பவேண்டாம். கிறிஸ்துவின் வருகைக்குறித்து நாள் கணக்கிடுபவனும் கள்ளதீர்கதரிசிகளில் ஒருவனே. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ மக்களை வழிநடத்தவேண்டியது அவசியமேத்தவிர வருகையைக் குறித்த ஆராய்ச்சி தேவையில்லாதது. ஆனால், இன்று ஆவிக்குரிய சபை என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சில சபைகளில் இதுவே முக்கிய ஆராய்ச்சியும் போதனையுமாய் இருக்கின்றது. 

ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ அவரது துணையை நாடுவோம். ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்து அவரை அண்டிக்கொள்வோம்; கிறிஸ்து எப்போது வந்தாலும் அவரைச் சந்திக்க ஆயத்தமாய் இருப்போம்.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: