இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, October 17, 2022

இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்

 ஆதவன் 🖋️ 630 ⛪ அக்டோபர் 19,  2022 புதன்கிழமை

"நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்." ( 2 பேதுரு 3 : 18 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு இரண்டு காரியங்களில் நாம் வளரவேண்டும் என்று கூறுகின்றார். 

1. கிறிஸ்துவின் கிருபையில் வளரவேண்டும் 

2. கிறிஸ்துவை அறியும் அறிவில் வளரவேண்டும்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, பேதுரு நம்மிடம்  கிறிஸ்துவைப் பற்றி அறியும் அறிவில் என்று கூறாமல், கிறிஸ்துவை அறியும் அறிவில் என்று கூறுகின்றார். ஒருவரை அறிவதற்கும் ஒருவரைப்பற்றி அறிவதற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. 

உதாரணமாக நமது முதலமைச்சரை எடுத்துகொள்வோம். நாம் எல்லோரும் அவரைப்பற்றி அறிந்துள்ளோம். பத்திரிகை செய்திகள் மூலமும், தொலைக்காட்சி செய்திகள் மூலமும் அவரைப்பற்றி அறிந்துள்ளோம். அவர் யாருடைய மகன், அவரது பழைய அனுபவம் என்ன, அவரது திறமைகள் என்ன போன்ற செய்திகள் நமக்குத் தெரியும். எப்படி? அவரைப்பற்றி நாம் பல்வேறு முறைகளில் அறிந்துகொண்ட தகவல்கள். 

இதுபோலவே இன்று நம்மில் பலரும் தேவனைப்பற்றி அறிந்துள்ளோம். வேதாகமத்தை வாசிப்பதன்மூலம், பல்வேறு பிரசங்கங்களைக் கேட்பதன்மூலம், ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகளில் நமக்குக் கற்றுக்கொடுத்ததன்மூலம் நாம் தேவனைப்பற்றி அறிந்துள்ளோம்.

ஒருவரை அறிவது என்பது இதிலிருந்து வித்தியாசமானது. அதாவது நாம் முன்பு பார்த்த நமது முதலமைச்சர் உதாரணத்தில், நம்மைவிட அவரது மனைவி, மகன் இவர்கள் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பார்கள் அல்லவா?. அவரது தனிப்பட்ட குணங்கள், தனிப்பட்ட அன்பு, இவற்றை அனுபவித்து அறிந்திருப்பார்கள். அதாவது நாம் அவரைப்பற்றி அறிந்துள்ளோம்; அவர்கள் அவரை அறிந்துள்ளனர்.

இதுபோல நாம் கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அறியவேண்டும் என்கின்றார் பேதுரு. அதுவே தேவனை அறிதல். தேவனது தனிப்பட்ட அன்பு நமது வாழ்வில் செயல்படுவது, அவரது விருப்பம் என்ன என்பதை அறிந்து வாழ்வது, அவரோடு ஒன்றித்து இருப்பது....இவையே தேவனை அறிவது.  

இன்று கிறிஸ்தவர்களில் பலரும் நாம் முன்பு பார்த்த உதாரணத்தில் முதலமைச்சரைப் பற்றி  நாம் அறிந்துள்ளதுபோல தேவனைப்பற்றி அறிந்து வைத்துள்ளனரேத் தவிர தேவனை அறியவில்லை. அதாவது தேவனைப்பற்றி தங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட சத்தியங்களையும்,    வாசித்து புரிந்துகொண்ட சத்தியங்களையும் தெரிந்துவைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தேவனோடு தனிப்பட்ட தொடர்புல்லை.  தேவனை அறியும்போது மட்டுமே நாம் அவரது அன்பை பூரணமாக உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு இந்த அறிவில் வளருங்கள் என்று கூறுகின்றார். தனது நிருபத்தின் இறுதி வசனமாக இப்படி எழுதியுள்ள பேதுரு,   இந்த நிருபத்தின் துவக்க வசனமாக கூறுகின்றார், "தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." ( 2 பேதுரு 1 : 2 ). அதாவது பேதுரு கூறவருவது, இப்படி தேவனையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் நாம் அறியும்போது தான் கிருபையும் சமாதானமும் நமது வாழ்வில் பெருகும். 

அன்பானவர்களே, வெறுமனே பெயரளவில் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதல்ல, கிறிஸ்துவை அறிந்து அவரது அன்பில் நாம் வளரவேண்டும். அதற்கு முதல்படிதான் அவரோடு ஒப்புரவாகி மீட்பு அனுபவம் பெறுவது. நமது பாவங்கள், மீறுதல்கள் இவற்றை கிறிஸ்துவிடம்  அறிக்கையிட்டு கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைத்துவிடும்போது அவர் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார்.  அப்போதுதான் நாம் அவரை அறியமுடியும். இந்த அனுபவத்தைப்பெற ஒப்புக்கொடுத்து வேண்டுவோம். மேலான ஆவிக்குரிய வாழ்வில் அவர் நம்மை நடத்துவார்.   

கிறிஸ்து அனுபவத்துடன் "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்." என வாழ்த்துகின்றேன்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: