Thursday, October 20, 2022

கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்

 ஆதவன் 🖋️ 632 ⛪ அக்டோபர் 21,  2022 வெள்ளிக்கிழமை



"ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 : 6 )

ஏரோது ராஜா அப்போஸ்தலராகிய யாக்கோபை வாளினால் வெட்டிக் கொலைசெய்தான். அது யூதர்களுக்கு மகிழ்ச்சியளித்ததால் அடுத்து அப்போஸ்தலரான பேதுருவையும் அதுபோல கொலைசெய்ய எண்ணினான். எனவே பேதுருவைக் கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்து பஸ்கா பண்டிகைக்குப்பின் அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருந்தான். அப்படி அடைத்து வைக்கப்பட்டிருந்த பேதுருவைக் குறித்துதான் இன்றைய வசனம் கூறுகின்றது. 

இங்கு நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் பேதுருவின் மனநிலை. நாளைக்குக் காலையில்  நமது தலை துண்டித்து கொலைச் செய்யப்படப்போகிறோம் என்றால் முந்தினநாள் இரவு நாம் எப்படி இருப்போம் என்று கற்பனைச் செய்து பாருங்கள். எப்படி நிம்மதியாகத் தூங்கமுடியும்? 

மரண தண்டனைக் கைதிகளைக் குறித்துச் சிறைக்காவலர்கள் கூறும் காரியங்கள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவற்றின்மூலம் நாம் தெரிந்துகொள்வது,  தண்டனை நிறைவேற்றப்படும் நாட்களுக்கு முன் ஏறக்குறைய ஒரு வாரமாக அவர்கள் சரியாகத் தூங்க மாட்டார்களாம். அவர்களுக்குத் தூக்கம் வராது. பித்துப் பிடித்ததுபோல உணவைச்  சரியாக உண்ண முடியாமலும், தூங்க முடியாமலும் அவஸ்தைப்படுவார்களாம்.   சிலர் பைத்தியம் பிடித்ததுபோல அமைதியற்று இருப்பார்களாம்.

ஆனால் இங்கு நாம் பேதுருவைகுறித்து வாசிப்பது வித்தியாசமான காரியமாக இருக்கின்றது. மறுநாள் காலையில் ஏரோது தன்னை வெளியில் கொண்டுவந்து யாக்கோபைபோல கொலை செய்யப் போகின்றான் என்பது தெரிந்திருந்தும் எந்தப் பதட்டமும் இல்லாமல் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டு இரண்டு காவலர்கள் நடுவே  நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கின்றார் பேதுரு.

மரணத்தைக்கண்டும் சஞ்சலப்படாத அமைதி பேதுருவை நிறைத்திருந்தது. தன்னை விசுவாசிக்கும் அனைவருக்கும் இத்தகைய அமைதியைத்  தருவதாக இயேசு கிறிஸ்து வாக்களித்தார். "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." ( யோவான் 14 : 27 ). ஆம், சாவுக்கும் பயப்படாத இத்தகைய அமைதியை உலகம் கொடுக்கமுடியாது; கிறிஸ்து மட்டுமே கொடுக்க முடியும்.

இன்று மன அமைதிக்காக மனிதர்கள் நாடுவது மதுவைத்தான். மது குடித்து அமைதி பெற எண்ணுவது சற்றுநேர மன அமைதியைக் கொடுத்தாலும் அதன் விளைவுகள் ஏற்கெனவே உள்ள பிரச்சனையை அதிகரிக்குமேத் தவிர குறைத்திடாது. 

அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது உலக பிரச்சனைகள் நமக்குப் பெரிதாகத் தெரியாது. உயிர் போகும் நிலையில்கூட பல இரத்தச் சாட்சிகள் இதனால்தான் அமைதியாகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.   காரணம், கர்த்தர் நமக்காக யுத்தம் பண்ணுவார் எனும் விசுவாசம். 

கொலைக்கு நியமிக்கப்பட்ட அப்போஸ்தலரான பேதுருவை அமைதிப்படுத்தி நிம்மதியாகத் தூங்கப் செய்த தேவன், நம்மையும் இதுபோல பிரச்னைகளைக்கண்டு அஞ்சிடாமல்  அமைதியாக வாழச் செய்வார். பேதுருவுக்கு வந்ததுபோல உயிர்போகும் சோதனை நமக்கு வரப்போவதில்லை. எனவே தைரியமாக இருப்போம். ஏனெனில் கர்த்தருடைய பிள்ளைகளுக்காக யுத்தம் செய்ய  தேவனது கரம் எப்போதும் தயாராக இருக்கிறது. 

தேவனுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து நிம்மதியாக வாழ்வோம். அவரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். யாத்திராகமம் நூலில் மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியது நமக்கும் சேர்த்துதான். எனவே பிரச்னைகளைக்கண்டு கலங்கவேண்டாம்.  "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்". ( யாத்திராகமம் 14 : 14 )    

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: