ஆதவன் 🖋️ 641 ⛪ அக்டோபர் 30, 2022 ஞாயிற்றுக்கிழமை
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 14 )
ஆவிக்குரிய வாழ்க்கையை அப்போஸ்தலரான பவுல் அடிகள் தனது நிரூபங்களில் ஓட்டப்பந்தயம், மல்யுத்தம் இவற்றுக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். எந்தவித பந்தயமாயிருந்தாலும் அதற்குப் பரிசுப்பொருள் உண்டு. இன்று உலக வாழ்க்கையில் விளையாட்டுப்போட்டிகளில் மிக உயர்ந்த பரிசாகக் கருதப்படுவது ஒலிம்பிக்தான். ஒலிம்பிக்கில் வெற்றிவாகை சூடவேண்டுமென்பது விளையாட்டு வீரர்களின் கனவு. அதற்காக அவர்கள் பல தியாகங்களைச் செய்கின்றனர். உணவு கட்டுப்பாடு, உறக்கக் கட்டுப்பாடு, இவைதவிர கடுமையான பயிற்சிகள் என உடலை வருத்துகின்றனர்.
அழிவுள்ள கிரீடத்தைப் பெறுவதற்கு அவர்கள் அப்படிச் செய்வார்களென்றால் அழிவில்லாத ஆவிக்குரிய வெற்றி கிரீடத்தைப் பெறவேண்டுமானால் நாம் எவ்வளவு அதிகமாக முயற்சிக்கவேண்டும்? இதனையே, "பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்." ( 1 கொரிந்தியர் 9 : 25 ) என்கின்றார் பவுல் அடிகள்.
"ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." ( பிலிப்பியர் 3 : 15 ) அதாவது நாம் ஆவிக்குரிய வாழ்வில் தேறினவர்கள் என்று கூறப்படவேண்டுமானால் நாம் இந்த எண்ணமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
உலக ஓட்டப்பந்தயத்தில் ஒருவருக்கே பரிசு கிடைக்கும். ஆனால் நமது தேவனுக்குரிய ஆவிக்குரிய ஓட்டப்பந்தயத்தில் சரியாக ஓடி முடிக்கும் அனைவருக்குமே தேவன் பரிசளிப்பார். "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 ) ஆம், ஆவிக்குரிய ஓட்டத்தை நாம் பரிசுபெற்றுக்கொள்ளும் விதமாக ஓடவேண்டும்.
மேலும், இன்றைய வசனத்தில் பவுல் அடிகள் "இலக்கை நோக்கித் தொடருகிறேன்" என்று ஒரு வார்த்தையினைக் கூறுகின்றார். அதாவது நாம் போட்டியில் பங்குபெறும்போது நாம் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மனதில்கொண்டு செயல்படவேண்டும். நமது இலக்கு கிறிஸ்துவே; கிறிஸ்துவைப் பிரியப்படுத்துவதே.
நாம் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது பந்தயத்தின் இறுதி இலக்கை நோக்கி மட்டுமே ஓடவேண்டும். அப்படியில்லாமல் ஓடும்போது நமக்கு வலதுபுறமும் இடதுபுறமும் ஓடுபவர்களைப் பார்த்துக்கொண்டு ஓடினால் வெற்றிபெறமுடியாது. இன்று ஆவிக்குரிய வாழ்வில் பலரும் செய்யும் தவறு இதுதான். மற்றவர்களது செயல்பாடுகளைப் பார்த்து அவர்களைக் குறைகூறிப் பலரும் தவறுகின்றனர்.
மட்டுமல்ல, ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறைகளை மீறாமல் செயல்படுபவர்களுக்கு மட்டுமே பரிசு கிடைக்கும். இதனையே, "மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்." ( 2 தீமோத்தேயு 2 : 5 ) என்கின்றார் பவுல் அடிகள்.
அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய ஓட்டத்தை இறுதி இலக்கான கிறிஸ்துவை நோக்கி, பொறுமையாக, கிறிஸ்துவின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு ஓடி வெற்றிபெறவேண்டும். இந்த எண்ணத்துடன் நமது ஆவிக்குரிய ஓட்டத்தைத் தொடர்வோம். அத்தகைய ஓட்டத்தை ஓடி வெற்றிபெற பரிசுத்த ஆவியானவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்; வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
.jpg)
No comments:
Post a Comment