Friday, October 14, 2022

தேவ அன்புடன் தனக்காகக் காத்திருப்பவர்களையே தேவன் விரும்புகின்றார்

 ஆதவன் 🖋️ 626 ⛪ அக்டோபர் 15,  2022 சனிக்கிழமை

"எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது." ( சங்கீதம் 130 : 6 )

நமக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சிலவேளைகளில் தூக்கம் வருவதில்லை. எப்போது விடியும் என்று எதிர்பார்ப்போடு காத்திருப்பிப்போம். ஆம், விடியலை எல்லோரது மனமும் ஆவலாய் எதிர்பார்க்கின்றது; துன்மார்க்கரைத் தவிர. துன்மார்க்கர்கள் தங்களது அவலட்சண காரியங்களுக்கு இருளையே விரும்புகின்றனர். இறுதியில் இருளான இடத்துக்கே செல்கின்றனர். 

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவருக்குக் காத்திருப்பதை ஜாமக்காரர்கள் எப்போது விடியும் என விடியலை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஜாமக்காரர்கள் என்பது இரவு காவலர்களைக் குறிக்கின்றது. பெரிய பெரிய கடைகளுக்கு முன்பும் ஏ.டி.எம் மையங்களிலும் காவல் செய்யும் காவலர்களை எண்ணிப்பாருங்கள். மழையோ குளிரோ அவர்கள் அங்குப் பணியாற்றுவார்கள். நிம்மதியாகத் தூங்க முடியாது. அவர்களது இருதயம் எப்போது விடியும் என்றுதானே ஏங்கும்?  அதைவிட அதிகமான ஏக்கத்துடன் கர்த்தருக்காக காத்திருக்கிறேன் என்கின்றார் இந்தச் சங்கீத ஆசிரியர்.

விடியலுக்காகக் காத்திருப்பது என்பது, கர்த்தர் நம் வாழ்வில் வந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவார் என எதிர்பார்த்திருப்பதைக் குறிக்கின்றது. 

இந்தச் சங்கீதம் ஒரு ஆரோகண சங்கீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது, யாத்திரை செல்லுகிறவர்கள் பாடிய பாட்டு. வருடாந்த பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக மலைகளில் ஏறி ஏறி எருசலேமை நோக்கி யாத்திரை செய்யும்போது மக்கள் இப் பாடல்களைப் பாடுவார்கள். யாத்திரீகர்கள் தனிமையான, மக்கள் இல்லாத பல இடங்களைக் கடந்துசெல்ல வேண்டியது நேரிடும். அத்தகைய வேளைகளில் பாடப்படுவதால் இவை ஆரோகண சங்கீதம் என்று கூறப்படுகின்றது. 

இன்று பலரும் கர்த்தரைத் தேடுவதைவிட, கர்த்தாரிடமிருந்துவரும் ஆசீர்வாதங்களையே அதிகமாய்த் தேடுகின்றனர். ஆனால் உண்மையான அன்பு இப்படிப் பொருள்களைத் தேடி ஓடாது. 

நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தை பெரும்பாலான நாட்களில் பணி  நிமித்தமாக வெளி ஊரில்தான் இருப்பார்.  நானும் எனது சகோதரிகளும் எனது அம்மாவின் பராமரிப்பில் நாகர்கோவிலில் இருந்தோம். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அப்பா ஊருக்கு வருவார். அவர் வரும் நாளை கடிதம் மூலம் அறிவிப்பார். நாங்கள் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருப்போம். அவர் வருவதற்கு முந்தின நாள் சரியாக தூக்கம் வராது. எப்போது விடியும் என்று காத்திருக்கும் மனது. இது அப்பாவைப் பார்க்கவேண்டும் எனும் எண்ணத்திலேயே தவிர அவர் கொண்டுவரும் பொருட்களுக்காக அல்ல. 

இன்று பல சபைகளில் நள்ளிரவு உபவாச ஜெபங்கள் என்று நடத்துகின்றார்கள். ஒருமுறை ஒரு போதகர் அழைத்தார் என்று ஒரு இரவு  ஜெபக் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். ஆனால் அங்கு ஏன் சென்றேன் என்று எண்ணுமளவுக்கு கேலிக்கூத்தான காரியங்கள் நடந்தன. ஆராதனையின் இடையில் துள்ளுவதும் ஆடுவதும் உடற்பயிற்சிபோல பயிற்சியும் நடந்தன. நான் அந்தப் போதகரிடம் தனிமையில், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்  கூறினார்:- "இல்லாவிட்டால் மக்கள் உறங்கிவிடுவார்கள்"  

தேவ அன்புடன் தேவனுக்காக காத்திருப்பவனுக்கு ஏன் உறக்கம் வருகிறது? உறக்கம் வருபவர்கள் வீட்டிற்குச் சென்று உறங்கவேண்டியதுதானே? தேவ அன்பற்று துள்ளிக் குதித்து உறக்கத்தைக் கலைப்பதில் என்ன பக்தி அல்லது தேவ அன்பு இருக்கிறது?

அன்பானவர்களே, நள்ளிரவு உறங்காமல் இருப்பதை தேவனுக்குக் காத்திருத்தல் என்று முற்றிலும் கூறிட முடியாது. பகல்பொழுதிலும்கூட நமது இருதயம் தேவ நாட்டம்கொண்டு அவருக்காகக் காத்திருக்க முடியும்.  அதாவது, தேவன் நமக்குள் வந்து நம்மை ஆளுகைசெய்ய காலம், நேரம், இடம் இவை தடையல்ல. எனவே, தேவ  அன்புடன் நாம் தேவனுக்காகக்  காத்திருக்கின்றோமா?  உண்மையான தேவ அன்புடன் தனக்காகக் காத்திருப்பவர்களையே தேவன் விரும்புகின்றார். அந்த அன்புடன் அவரைத் தேடுவோம்; அவருக்காகக் காத்திருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: